Published:Updated:

பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்! - சில மணி நேரத்தில் மாற்றப்பட்ட சி.பி.ஐ இயக்குநர்

சி.பி.ஐ-யின் சிறப்பு இயக்குநராக இருந்த நாகேஷ்வர் ராவ் தற்போது வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்

நாகேஷ்வர் ராவ்
நாகேஷ்வர் ராவ்

சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையேயான மோதல் கடந்த வருடம் பெரிதாகப் பேசப்பட்டது. இதன் விளைவாக இரு அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு அளித்தது மத்திய அரசு. தொடர்ந்து சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்துறை காவல் பணிக்கு மாற்றப்பட்டார்.

அலோக் வர்மா - ராகேஷ் அஷ்தனா
அலோக் வர்மா - ராகேஷ் அஷ்தனா

சி.பி.ஐ-யை விட இது குறை நிலை பதவி என்பதால் அதை ஏற்க மறுத்த அலோக் வர்மா தன் மத்திய அரசு பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையில் சி.பி.ஐ-யின் இடைக்கால மற்றும் சிறப்பு இயக்குநராக நாகேஷ்வர் ராவ் கடந்த வருடம் நியமிக்கப்பட்டார்.

சி.பி.ஐ இயக்குநராக நாகேஷ்வர் ராவ் நியமிக்கப்பட்ட பிறகு பல வழக்குகளை விசாரித்து வந்தார். இந்நிலையில் நேற்று, சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் பதவியிலிருந்து நாகேஷ்வர் ராவ் நீக்கப்பட்டுத் தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்துறை காவல் துறையின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குநர் மாற்றப்பட்ட அரசாணை
சிபிஐ இயக்குநர் மாற்றப்பட்ட அரசாணை

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை நியமன குழுக் கூட்டத்துக்குப் பின், அடுத்த சில மணி நேரங்களில் சி.பி.ஐ இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார். நாகேஷ்வர் ராவ் தேசியப் புலனாய்வு பணியிலிருந்து மத்திய உள்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாகேஷ்வர் ராவ் 1986-ம் ஆண்டு ஒடிசாவிலிருந்து ஐபிஎஸ் அதிகாரியாகத் தகுதி பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் பீகார் பாலியல் வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரி ஏ.கே சர்மாவை மாற்றியதால் இவர் உச்சநீதிமன்றத்தின் கண்டத்துக்கு ஆளானார். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாகேஷ்வர் ராவ் மாற்றப்பட்டதன் பின்னணி, அடுத்த சி.பி.ஐ இயக்குநர் போன்ற எந்தத் தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.