Published:Updated:

`அரசியலில் இல்லாத என்னைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்?’ - மெகபூபா முப்தி மகள் காட்டம்

காவலர்கள் தன் அம்மாவைச் சந்திக்கக்கூட அனுமதிக்க மறுப்பதாக மெகபூபா முப்தியின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.

மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி ( Twitter/@MehboobaMufti )

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காஷ்மீர்
காஷ்மீர்
AP

ஆயிரக்கணக்கில் பாதுகாப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டனர், தொலைபேசி, இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் ஒருவர். முப்தி தற்போது காஷ்மீரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அம்மாவைச் சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார் முப்தியின் மகள் சனா இல்டிஜா ஜாவேத். இது பற்றி பேசியுள்ள அவர், `` மத்திய அரசு என் அம்மாவின் மனநிலையை உடைத்து அவரை கீழே தள்ள வேண்டும் என நினைக்கிறது. ஆனால், அவர்களுக்குத் தெரியாது என் அம்மா மிகவும் வலிமையானவர் என்று.

காஷ்மீர்
காஷ்மீர்
AP

காவலில் வைக்கப்பட்டுள்ள என் அம்மாவைச் சந்திக்க வேண்டும் என நிறைய முறை காவல்துறையினரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அவர்கள் எனக்கு அனுமதி தர மறுத்தனர். ஒரு மகளான நான் என் தாயைக்கூட சந்திக்கக் கூடாதா. அரசியலமைப்புக்கு விரோதமானது என அவர்கள் அறிந்த சிறப்புச் சட்டம் 370, நீக்கப்பட்டதுக்கு எதிராக ஏதேனும் நடந்துவிடும் என அஞ்சியே இப்படிச் செய்கிறார்கள்.

என்னைச் சந்திக்கவும் யாரையும் அனுமதிப்பதில்லை. நான் சாதாரண காஷ்மீரி பெண், இந்தியக் குடிமகள் அவ்வளவுதான். அரசியலில் ஈடுபடாத என்னைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. எங்களுக்கு எந்த உரிமையும் சுதந்தரமும் இல்லையா? காவலர்கள் என்னைக் கைதுசெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எங்கள் உரிமைகள் மற்றும் கெளரவத்தை எப்படி கண்மூடித்தனமாகப் பறித்தோம் என்பதை நாடும் சர்வதேச சமூகமும் பார்க்க இந்திய அரசு விரும்பவில்லை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முப்தி மகள்
முப்தி மகள்

இதற்கிடையில் முப்தி, நாடாளுமன்றத்தில் உள்ள ஜம்மு-காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.பி-க்களை பதவி விலகக் கூறியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், அது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.