Published:Updated:

`இப்பதான் பிரச்னை தெரியுதா... 10 நாள்களாக எங்கே போனீர்கள்?’ - ஆளுநரை விமர்சித்த குமாரசாமி

சத்யா கோபாலன்

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் வரும் திங்கள்கிழமை வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் குமாரசாமி
முதல்வர் குமாரசாமி

கர்நாடகாவில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த பிறகு, கடந்த வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். ஆனால், அன்றைய தினம் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியதால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடக சட்டமன்றம்
கர்நாடக சட்டமன்றம்
ANI

இதையடுத்து, மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்குள், முதல்வர் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா முதல்வருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநர் எந்த உத்தரவையும் பிறபிக்க முடியாது சபாநாயகருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது எனக் கூறி, ஆளுநர் கடிதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த சட்டமன்றக் கூட்டத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல், ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி மீதும், எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சி மீதும் மாறி மாறி குற்றம் சுமத்திவந்தனர். இதனால், நேற்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே தீரவேண்டும் என ஆளுநர் இரண்டாவது முறையாக முதல்வருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆளுநர் வஜுபாய் வாலா
ஆளுநர் வஜுபாய் வாலா

“கொடுத்த நேரத்துக்குள் குமாரசாமி தன் பெரும்பான்மையை நிரூபிக்காததால், அவருக்குப் பெரும்பான்மை இல்லை என அறிவித்து, அதிக பெரும்பான்மை உள்ள வேறு ஒருவரை ஆட்சியமைக்க அழைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது” என அரசியல் ஆலோசகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆளுநரின் இரு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டதால், அடுத்து அவரின் முடிவு என்னவாக இருக்கும் என மொத்த கர்நாடகாவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், ஆளுநரின் கடிதம் குறித்துப் பேசியுள்ள முதல்வர் குமாரசாமி, “ஆளுநர் வஜுபாய் எனக்கு இரண்டாவது முறையாகக் காதல் கடிதம் எழுதியுள்ளார். குதிரை பேரம் நடப்பதாக தனக்கு நிறையப் புகார்கள் வருவதாக ஆளுநர் கூறுகிறார். அவருக்கு இப்போதுதான் குதிரை பேரம் நடப்பது தெரிந்ததா? கடந்த பத்து நாள்களாக அவர் என்ன செய்துகொண்டிருந்தார். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ராஜினாமா செய்யும்போது, ஆளுநர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குமாரசாமி
குமாரசாமி
ANI

” அரசியலமைப்பு சட்டத்தின்படி முதல்வருக்கு உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது. எதிர்க்கட்சியான நாங்கள் ஆளுநரின் முடிவை மீற விரும்பவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்வரை சட்டமன்றத்திலேயே தங்கியிருக்க நாங்கள் முடிவுசெய்தோம். ஆனால், அதற்குள் சபை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது” என பா.ஜ.க எம்.எல்.ஏ மதுஸ்வாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ம.ஜ.த எம்.எல்.ஏ சிவலிங்ககௌடா, “ அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அதைப் பற்றி பேசி, உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க நாங்கள் விரும்புகிறோம். எனவே, சட்டசபையில் அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் பேச அனுமதித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.