Published:Updated:

நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழு குறித்து உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குத் தமிழக அரசின் பதில் என்ன?

நீட் தேர்வில் வரலாறு காணாத வகையில் ஆள் மாறாட்டம் நடந்தது. மேலும், மதிப்பெண் சான்றிதழில் தங்களுடைய தேவைக்கேற்ப மதிப்பெண்களை மாற்றக்கூடிய அளவுக்கு ஊழல் அரங்கேறியது.

நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழு குறித்து உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குத் தமிழக அரசின் பதில் என்ன?

நீட் தேர்வில் வரலாறு காணாத வகையில் ஆள் மாறாட்டம் நடந்தது. மேலும், மதிப்பெண் சான்றிதழில் தங்களுடைய தேவைக்கேற்ப மதிப்பெண்களை மாற்றக்கூடிய அளவுக்கு ஊழல் அரங்கேறியது.

Published:Updated:
`நீட்’ தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு நியமித்துள்ள குழு பற்றி விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வு உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்றுச் சேர்க்கை முறை மற்றும் சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர்கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. நீட் தேர்வு குறித்து மக்களிடமிருந்து மின்னஞ்சல் வாயிலாகக் கருத்துகள் பெறப்பட்டன. `நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் 85,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்திருக்கின்றன, அனைத்தையும் ஆராய்ந்த பிறகே அறிக்கை தயார் செய்யப்படும்'' என்று கமிட்டியின் தலைவர் ஏ.கே.ராஜன் தெரிவித்தார். இந்தநிலையில், இந்த கமிட்டிக்குத் தடை கேட்டு, பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர், கரு.நாகராஜன் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில், `நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது நாடு முழுவதற்கும் பொதுவானது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதன்படி, மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை அந்தக் குழுமத்திடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இதை மீறும் வகையில் தமிழ்நாடு அரசு, குழு அமைத்திருக்கிறது. இது அனுமதிக்கத்தக்க ஒன்று அல்ல’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், `உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது' என அரசின் தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். மேலும், `குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?' எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அரசிடம் விளக்கம் பெற கால அவகாசம் கேட்கப்பட்டதால், ஜூலை 5-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

இது குறித்து, பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர், கரு.நாகராஜனிடம் பேசினோம்.

``நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று கூறுவது மிகவும் தவறான கருத்து. பணம் கட்டி படிப்பவர்கள் மட்டும் படிக்கட்டும்; பணம் இல்லாதவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதி இல்லாதவர்கள் என்பதுபோல இதுவரை இருந்ததை மாற்றி, நீட் தேர்வு கிராமப்புறத்திலுள்ள அரசு, ஏழை மாணவர்களுக்கும் அதிக அளவில் மருத்துவம் படிக்க வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு கொண்டுவந்த நீட் தேர்வு குறித்து தற்போது மாநில அரசு மீண்டும் புதிதாக ஒரு குழுவை வைத்து ஆராய அவசியம் இல்லை'' என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், ``நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யக் கூடாது என்று சொல்வது எப்படி ஜனநாயகமாகும்?’’ என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்புகிறார்.

``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, ஒரு குழுவை அமைத்து செயல்படுவதை எதிர்க்கிறார்கள் என்றால், இது மக்களாட்சிக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது. மத்திய அரசு ஒரு முடிவு எடுத்திருக்கிறது. அதில் மாநில அரசு குழு அமைத்து ஆய்வுகூடச் செய்யக் கூடாது என்ற மனநிலை இந்தியாவை சர்வாதிகாரத்துக்கு கொண்டு செல்வதற்கான மனநிலைதானே..? நீட் தேர்வில் வரலாறு காணாத வகையில் ஆள் மாறாட்டம் நடந்தது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் தங்களுடைய தேவைக்கேற்ப மதிப்பெண்களை மாற்றக்கூடிய அளவுக்கு ஊழல் அரங்கேறியது. மாநில அரசு நடத்தும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இதுவரை இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தது இல்லை.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

மேலும் நீட் அறிமுகப்படுத்திய பிறகு, பள்ளிக்கூடங்களில் இரு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பள்ளிக் கட்டணத்தோடு நீட் பயிற்சி வகுப்புக்கான கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி வணிகமயமாக்கபடுவதைத் தடுக்கக் கொண்டுவந்த நீட், பள்ளிகளையே வணிகமயமாகியுள்ளது. சட்டத்துக்கு விரோதமாக இருந்த நன்கொடை வசூலை சட்டபூர்வமாக்கியுள்ளது. அதை, இந்தக் குழு கண்டுபிடித்து மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவார்களோ என்ற பதற்றத்தில்தான் இந்த ஆய்வைச் செய்யக் கூடாது என்கிறார்கள் பா.ஜ.க-வினர்'' என்கிறார் அவர்.

தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டைன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``கரு,நாகராஜனின் இந்தச் செயல் மூலம் பிஜேபி-ன் இரட்டை வேடம் கலைந்துள்ளது. சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன், `நீட் எதிர்ப்புக்கு நாங்கள் உடன்படுகிறோம்’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகக் கூறினார். அவர் அந்தக் கட்சியின் சட்டமன்ற தலைவர். மேலும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு நீட்டுக்குத் தடை வாங்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. பிஜேபி-யின் கொள்கை அதுதான் என்றால், மாநிலத் தலைவர் கோர்ட்டுக்குச் சென்று குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். ஆனால் கரு.நாகராஜனை வைத்து அதைச் செய்கிறார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவத்திலும், பொறியியல் படிப்பிலும் 15 சதவிகித இட ஒதுக்கீடு தலைவர் கருணாநிதிதான் கொடுத்தார். எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவது தமிழ்நாடு அரசின் கடமை. தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள். 85 சதவிகித மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிக்க நாங்கள் குரல் கொடுத்துவருகிறோம். தமிழக மாணவர்கள் அதிகமாக மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் பா.ஜ.க-வினர் வட மாநில மாணவர்களுக்கு இடத்தை ஒதுக்க நினைக்கிறார்கள். குழு அமைத்ததன் நோக்கமே இந்தத் தேர்வு ஏற்படுத்திய தாக்கத்தை முழுமையாக ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கத்தான். இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள். பி.ஜே.பி மக்களுக்கு எதிரான செயலைச் செய்துவருகிறது'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism