Published:Updated:

மீண்டும் மிரட்டும் இந்தி எதிர்ப்பு அலை... தமிழ்நாட்டுடன் கைகோக்கும் கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம்!

பினராயி விஜயன், ஸ்டாலின் ( பைல் போட்டோ )

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதி நடத்தப்போவதாக தி.மு.க இளைஞரணியும் மாணவரணியும் அறிவித்திருக்கின்றன.

மீண்டும் மிரட்டும் இந்தி எதிர்ப்பு அலை... தமிழ்நாட்டுடன் கைகோக்கும் கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம்!

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதி நடத்தப்போவதாக தி.மு.க இளைஞரணியும் மாணவரணியும் அறிவித்திருக்கின்றன.

Published:Updated:
பினராயி விஜயன், ஸ்டாலின் ( பைல் போட்டோ )

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது. அந்தக் குழுவின் துணைத் தலைவரான பர்த்ருஹரி மஹ்தாப், “தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது பிராந்திய மொழி இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா

நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, ‘இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மொழிக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும். இந்தி, 100 விழுக்காடு பின்பற்றப்பட வேண்டும். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐஐடி., ஐஐஎம்., மத்திய பல்கலைக் கழகங்கள், கேந்திரிய வித்யாலயா நவோதயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தி மொழியில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும்’ என்ற பரிந்துரைகள் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

‘இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கான முயற்சி இது’ என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள், பண்பாடுகள்கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவருகிறார்கள். இதை எப்படியாவது சிதைத்துவிட்டு 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவ வேண்டும் என்று மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுகிறது. இது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்” என்று விமர்சித்திருக்கிறார்.

 ஸ்டாலின்
ஸ்டாலின்
ம.அரவிந்த்

மேலும், “வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைகொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்ட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள்மீது திணிக்க வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்க்க வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டுவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் 1965-ல் நடைபெற்ற இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்திருக்கிறார். “1957-ம் ஆண்டு தி.மு.க முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கான உரிமையையும் பாதுகாப்பையும் வலியுறுத்திக் குரல் கொடுத்தது. அதையடுத்து, இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்கிற உறுதிமொழியை அன்றைய பிரதமர் நேரு வழங்கினார்.

அந்த உறுதிமொழிக்கு மாறாக, இந்தியைத் திணிக்க முயற்சி நடந்தது. அதை எதிர்த்து 1965-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் தமிழைக் காக்கத் தீக்குளித்தும், துப்பாக்கிக்குண்டுகளை நெஞ்சில் ஏந்தியும் உயிர்த் தியாகம் செய்த இளைஞர்களின் வரலாற்றை மறந்துவிட வேண்டாம்” என்று ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்

இந்திக்கு எதிரான போராட்ட வரலாறு நூறு ஆண்டுகள்கொண்டது. 1920-களிலேயே இந்தப் பிரச்னை தொடங்கிவிட்டது. 1938, ஜனவரி 3-ம் தேதி கட்டாய இந்தியை எதிர்க்கும் வகையில் தமிழ்நாட்டுப் பள்ளிகள் முன்பும், அன்றைய முதல்வர் ராஜாஜி வீட்டின் முன்பும் மறியல் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 1,271 பேர் கைதாகி சிறைக்குச் சென்றனர்.

1938, செப்டம்பர் 10-ம் தேதி மெரினா கடற்கரையில் பெரியார் பொதுக்கூட்டம் நடத்தினார். அதில், இந்தித் திணிப்புக்கு எதிரான கண்டனத்தை முழங்கினார். `தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோஷமும் அப்போது அவரால் முன்வைக்கப்பட்டது. இந்தித் திணிப்புக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரம் தீவிரமடைந்தது. சோமசுந்தரபாரதி தலைமையில் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டது.

பெரியார்
பெரியார்

1938, டிசம்பர் 6-ம்தேதி பெரியார் கைதுசெய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகமெங்கிலும் பரவியது. பல்லடம் பொன்னுசாமி, ஸ்டாலின் ஜெகதீசன் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்தனர். அவர்களோடு பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஜனவரியில் சிறையில் அடைக்கப்பட்ட தாளமுத்து, நடராஜன் ஆகிய இருவரும் சிறையிலே இறந்தனர்.

தருமாம்பாள் தலைமையில் இந்தி எதிர்ப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது. போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிய மாகாண அரசு 1939-ம் ஆண்டு, மே 22-ம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி பெரியாரை விடுதலை செய்தது. 1940, பிப்ரவரி 21-ம் தேதி கட்டாய இந்தியை ரத்துசெய்வதாக மாகாண அரசு உத்தரவு பிறப்பித்தது. இப்படியாக, இந்தித் திணிப்பு முயற்சிகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் இன்றுவரை தொடர்கின்றன.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகும், இந்த நிலை தொடர்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலைமையைக் காட்டிலும் தற்போது இந்தியைத் திணிப்பதற்கான முயற்சி தீவிரடைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டைத் தாண்டி, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் என பிற மாநிலங்களிலும் இத்தகைய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

உதயநிதி
உதயநிதி

தி.மு.க கண்டன அறிக்கை வெளியிட்டதோடு நிற்கவில்லை. வரும் 15-ம் தேதி தி.மு.க-வின் இளைஞரணியும் மாணவரணியும் போராட்டக் களத்தில் குதிக்கின்றன. ‘இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்’ என்று இளைஞரணிச் செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ-வும், மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ-வும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.