பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு ஊர்கள், இடங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் பெயர் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. டெல்லியில் நேதாஜி சிலை முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான சாலைக்கு ‘ராஜபாதை’ என்று பெயர். கடந்த 75 ஆண்டுகளாக ராஜபாதை என்று அழைக்கப்பட்டுவந்த அந்த சாலையின் பெயர், சமீபத்தில் ‘கர்த்தவ்ய பாத்’ என்று மாற்றப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தின் பெயரை ‘பிரயக்ராஜ்’ என்று யோகி ஆதித்யநாத் அரசு மாற்றியது. அதேபோல, உ.பி-யிலுள்ள முகல் சராய் ரயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீன்தயாள் முகேபாத்யாய் என்று மாற்றப்பட்டது. ஃபைசாபாத் பெயரும் மாற்றப்பட்டது.
டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்திருக்கும் பிரமாண்டமான தோட்டம், ‘முகலாய தோட்டம்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. தற்போது, ‘அம்ரித் உத்யான்’ என்று அது பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மொகலாயத் தோட்டத்துக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெயர்சூட்டியிருக்கிறார் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றியது ஆங்கிலேய அரசு. மிகப்பெரிய கட்டடங்களைக் கட்டி, புதுடெல்லியை உருவாக்கினார்கள். அங்கு, வைஸ்ராய் மாளிகையை உருவாக்குவதற்கு 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த மாளிகையின் பின்புறத்தில் மிகப்பெரிய தோட்டம் அமைக்கப்பட்டது. அதுதான் முகலாய தோட்டம்.
முதலில், பிரிட்டிஷ் பாரம்பர்யத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வடிவமைப்புடன் அந்தத் தோட்டத்தை உருவாக்க நினைத்தனர். அப்போது, முகலாயர் பாணியில் தோட்டத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்ற யோசனையை அன்றைக்கு வைஸ்ராயாக இருந்தவரின் மனைவியான லேடி ஹார்டிங்கே தெரிவித்திருக்கிறார்.

‘முகலாயர்களின் தோட்டங்கள்’ என்ற புத்தகத்தை வாசித்து பிரமித்துப்போன லேடி ஹார்டிங்கே, லாகூர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் முகலாயர் தோட்டங்களுக்கும் சென்றிருக்கிறார். அது ஏற்படுத்திய தாக்கத்தால்தான், முகலாயர் பாணியில் தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
1917-ம் ஆண்டிலேயே தோட்டத்துக்கான வரைபடம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், 1928, 1929-ம் ஆண்டுகளில்தான் செடிகள் நடப்பட்டு, தோட்டம் உருவாக்கப்பட்டது. அங்கு அமைந்திருக்கும் ரோஜா தோட்டம் தனிச்சிறப்பு வாய்ந்தது. தோட்டக்கலைத்துறை இயக்குநராக இருந்த வில்லியம் முஸ்டோ, ரோஜா செடிகளை வளர்ப்பதில் நிபுணர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 வகையான ரோஜா செடி வகைகளைக் கொண்டுவந்து ரோஜா தோட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.

அடோரா, மிருணாளினி, தாஜ்மகால், ஈஃபில் டவர், ஒக்லஹாமா, பிளாக் லேடி, புளூ மூன், லேடி எக்ஸ் உட்பட பிரபலமான பல ரோஜா செடி வகைகள் அங்கு இருக்கின்றன. அன்னை தெரசா, ராஜாராம் மோகன்ராய், ஆப்ரஹாம் லிங்கன், ஜவகர்லால் நேரு, ராணி எலிசபெத் உட்பட பல ஆளுமைகளின் பெயர்களும் ரோஜாக்களுக்கு சூட்டப்பட்டிருக்கின்றன. துலிப்ஸ், ஹெலிகோனியா போன்ற மலர்கள் 1998-ல் அங்கு அறிமுகம் செய்யப்பட்டன.
பல்வேறு காலகட்டங்களில் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள், இந்தத் தோட்டம் சிறப்புற தங்கள் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். டாக்டர் ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, புதிய வகை ரோஜாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முகலாய தோட்டத்தில் அமைந்திருக்கும் ரோஜா தோட்டத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கப்பட்டது.
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக ராஜாஜி இருந்தபோது, நாட்டில் உணவுப்பஞ்சம் நிலவியது. அப்போது, முகலாய தோட்டத்தின் ஒரு பகுதியை உணவுதானியங்களைப் பயிரிடுவதற்காக அவர் ஒதுக்கினார். அந்தப் பகுதியில் தானே உழுது, உணவுதானியங்களைப் பயிரிட்டார். அந்தப் பகுதியில் தற்போது பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அந்தக் காய்கறிகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் வசிப்பவர்களுக்கு உணவாகின்றன.
முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு கள்ளிச்செடிகள் பிடித்தமானவை. அவரின் காலத்தில், முகலாய தோட்டத்தில் கள்ளித் தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இருந்தபோது, இசைத்தோட்டம், ஆன்மித்தோட்டம் உருவாக்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகை வரலாற்றில் ‘முகல் கார்டன்’ என்று பிரபலமாக அறியப்பட்ட அந்தத் தோட்டம் இனிமேல், `அம்ரித் உத்யான்’ என்று அழைக்கப்படும்.