Published:Updated:

`எச்சரிக்கிறோம் ராஜபக்‌ஷேவை’ முதல் இன்றுவரை சீமான் ஈழப்பேச்சுகளின் தாக்கம் என்ன?

`` நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன் '' என சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக சீமான் பேசிய பேச்சு இளைஞர்களிடையே மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. அவரின் மீது புரட்சிகர பிம்பத்தை உருவாக்கியது.

Seeman
Seeman

2008... ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. துப்பாக்கித் தோட்டாக்களாலும், பீரங்கிக் குண்டுகளாலும் கொத்துக்கொத்தாக ஈழத் தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்ட துயர்மிகு நாள்கள் அவை. ஒட்டுமொத்த தமிழகமும் மிகப்பெரிய கொந்தளிப்பில் இருந்தது. போரை தடுத்து நிறுத்தச்சொல்லி ஆங்காங்கே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன.

தமிழக திரைத்துறையினரின் சார்பாக, ராமேஸ்வரத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில், பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. சினிமாக்காரர்களின் போராட்டம் மிகவும் மென்மையான முறையில் இருக்கும் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மேடைக்கு வந்தார் ஒருவர். கறுப்பு உடையில், மத்தியதர வயதில், கட்டுமஸ்தான உடலைமைப்போடு வந்த அவர் மைக்கப் பிடித்துப் பேசத்தொடங்கினார்.

Seeman
Seeman
``எதையும் சந்திக்கத் தயார்!'' - சீமான்

``ராமேஸ்வரத்தில் இந்தக் கூட்டத்தை நடத்த வேறு எந்தக் காரணமும் இல்லை. இவ்வளவு தூரம் வந்த எங்களால் ஈழம் நோக்கியும் வரமுடியும். அதனால் எச்சரிக்கிறோம் ராஜபக்‌ஷே அவர்களே... இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லை, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' எனப் பேச ஆரம்பித்தார். நாலாபுறம் கைத்தட்டல்கள் பறந்தன. கீழே சீமான் என பெயர் ஒளிபரப்பட்டது.

சினிமா இயக்குநராக இருந்த காலம் தொட்டே, மிகத் தீவிரமான ஈழ ஆதரவாளராக விளங்கி வந்திருந்தாலும் திராவிட இயக்க மேடைகளில் நரம்புகள் முறுக்கேற, கணீர் குரலில் விடுதலைப் புலிகளின் வீரம் பற்றியும் ஈழ மக்களின் உரிமைகள் பற்றியும் தொடர்ந்து முழங்கி வந்திருந்தாலும் அதுவரைக்கும், தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமே அறியப்பட்டிருந்த சீமான், ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பிறகுதான் பொதுத்தளத்தில் பிரபலமானார். அதில் தனக்கே உரிய பாணியில் சீமான் நிகழ்த்திய உரைக்குப் பிறகுதான், தமிழக மக்களின் கவனம் அவரின் மீது திரும்பியது.

``நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன்'' என சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக சீமான் பேசிய பேச்சு இளைஞர்களிடையே மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. அவரின் மீது புரட்சிகர பிம்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அதிரடியான பேச்சுக்கள், கைது, சிறை என கழிந்தது சீமான் வாழ்வு.

அதற்கடுத்து தொடர்ச்சியாக நடந்த கூட்டங்களில் சீமான் பேச்சைக் கேட்பதற்காகவே, மக்கள் கூட்டம் அலை மோதியது. சீமான் எவ்வளவு மணி நேரம் பேசினாலும், சிறிதும் சலசலப்பின்றி மக்கள் கூட்டம், அவரின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தது. பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈழ ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த தலைவர்களும் கூட, சீமானின் பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, சீமானை முன்னிலைப்படுத்தியே பல கூட்டங்களை நடத்தினர்.

தமிழகமெங்கும் ஈழ உணர்வாளர்களால் நடத்தப்பட்ட கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். எந்தவித தொய்வும் இல்லாமல், உரத்த குரலில் முழங்கும் அவரின் பேச்சுக்கு இளைஞர்களும் கிளர்ந்தெழுந்தார்கள். அவரின் பின்னால் மிகப்பெரிய இளைஞர் கூட்டம் திரளத் தொடங்கியது. தொடர்ந்து. ஈழச் செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து `நாம் தமிழர்’ இயக்கத்தை உருவாக்கினர். இளைஞர்களின் நம்பிக்கை நாயகனான விளங்கிய சீமான் ஒருங்கிணைப்பாளரானார்.

Seeman
Seeman

நாம் தமிழர் இயக்கம், கட்சியாக பரிணமித்த பிறகு, சீமானின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் தெரிந்தன. இருந்தாலும்  பத்து வருடங்களாக தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஈழம், விடுதலைப் புலிகள், தலைவர் பிரபாகரன் என விடாது முழங்கி வருகிறார் சீமான்.

தமிழகம் முழுவதும் ஈழப் போராட்டத்தைக் கொண்டு சென்றது நாங்கள் என மார்தட்டிக்கொள்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். ஆனால், ஈழப்போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்துவிட்டனர் எனக் கடுமையான விமர்சங்களும் அவர்களின்மீது முன்வைக்கப்படுகின்றன.

சிசிடிவி ஸ்கெட்ச், நெட்ஃப்ளிக்ஸ் மாஸ்க், ஃபேஸ் சர்ஜரி! `லலிதா’ முருகனின் திடுக் திட்டங்கள்

கடைசியாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், ``காந்தியை கோட்சே சுட்டது சரிதான் எனச் சிலர் பேசியபோது, `ராஜீவ் காந்தியைக் கொன்றோம் என்பதுவும் சரிதான்' என  சீமான் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையைக் கிளப்பின. அது ஏழு தமிழர்களின் விடுதலையைப் பாதிக்கும் என தமிழ் உணர்வாளர்களே சீமானுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். மறுபுறம் சீமானின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்து வந்தனர்.

ஈழத்தில் போர் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், ``எனக்கு இன உணர்ச்சி இருக்கிறது. என் கண் முன்னால் என் இனம் செத்திருக்கிறது. அந்த வன்மம் எனக்கு எப்போதும் இருக்கும்'' என, தொடர்ச்சியாக ஈழம் குறித்து பேசிவருகிறார் சீமான்.

Seeman speech
Seeman speech
“சீமான், விளம்பர விரும்பி...
கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!”

அவரின் இந்தப் பேச்சுக்கள், அரசியல் மட்டத்திலும் மக்களிடையேயும் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன?

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம்

``2009-க்கு முன்புவரை `ஈழம் என்பது ஒரு தூர தேசம். அதற்கும் தமிழகத்துக்கும் தொடர்பில்லை. பிழைக்கப் போன இடத்தில் பிரபாகரன் நாடு கேட்டுப் போராடுகிறார்' என்கிற புரிதல்தான் தமிழக மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், `ஈழம்... உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களுக்கான தேசம். புலிகள் போராடிக்கொண்டிருப்பது உலகத் தமிழர்களுக்காக, அதோடு அவர்கள் அடுத்த நிலத்துக்காக போராடவில்லை. தங்களின் தாய்நிலத்தை மீட்பதற்காகப் போராடினார்கள்... என்கிற புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது அண்ணன் சீமான்தான்.

படித்த இளைஞர்கள் அரசியலை நோக்கி, ஈழ விடுதலைக்கான ஆதரவை நோக்கி இழுத்து வந்ததும் அண்ணன் சீமான்தான். இளைஞர்கள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும், மூலை முடுக்குகளில், பாமர மக்கள் மத்தியிலும் ஈழப் போராட்டத்தைக் கொண்டு சென்றது அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியும்தான்.

மேற்கு வங்கம், இந்திரா காந்தி அம்மையாருக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் வங்கதேசம் என்னும் நாடு பிறந்தது. அதேபோல, இந்தியா விரும்பும்போதுதான் ஈழம் பிறக்கும். இந்தியாவுக்கான நிர்பந்தம் தமிழகத்தில் இருந்துதான் உருவாக வேண்டும். இதுவரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு வலுவான ஒரு நிர்பந்தம் உருவாகவில்லை.

இடும்பாவனம் கார்த்திக்
இடும்பாவனம் கார்த்திக்

அதற்கான முயற்சிகளைத்தான் நாங்கள் செய்துவருகிறோம். எங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உருவாகியிருக்கிறது. எங்களுக்குக் கிடைத்த ஆதரவு என்பது ஈழ விடுதலைக்குக் கிடைக்கும் ஆதரவுதான். ஈழ விடுதலை குறித்த போராட்டத்தில் எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடி வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல், ஐ.நா மன்றத்தில், ஈழப்படுகொலைக்கான நீதி குறித்தும் ஈழ விடுதலைக்கான தேவை குறித்தும் தொடர்ச்சியாகப் பேசிவருகிறோம்'' என்கிறார் இடும்பாவனம் கார்த்தி.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கருத்துகள் இப்படியிருக்க, 

``சீமானின் பேச்சு தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஈழ ஆதரவு தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ ஆகியோரின் பேச்சுக்கு இருக்கும் ஆதரவு கூட சீமானுக்கு இல்லை'' என்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ்.

மேலும், அதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக விளக்குகிறார்.

``இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு முன்பு, பின்பு என ஒரு அளவுகோலை வைத்துப் பார்க்க வேண்டும். ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு இலங்கைத் தமிழர்களின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய கரிசனமும் கவலையும் இருந்தது.

Peter alphonse
Peter alphonse

ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளின்மீது தமிழர்களுக்கு இருந்த ஆர்வமும் ஈர்ப்பும் குறைந்துவிட்டதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.

அதற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட, விடுதலைப் புலிகளை ஆதரித்த எந்தவொரு கட்சியையும் தமிழக மக்கள் தேர்தலில் ஏற்றுக்கொள்ளாமல் நிராகத்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளைப் பற்றி மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த ஜெயலலிதா அவர்கள், தேர்தலுக்கு முன்பு தனது நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றி, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக காட்டிக்கொண்ட பிறகு தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதன் மூலமாக, தமிழக அரசியல் கட்சிகள் ஆதாயத்தைப் பெற முடியுமானால், பழ.நெடுமாறன், வைகோ மற்றும் தமிழ்த்தேசியம் பேசக்கூடிய கட்சிகள் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்தவொரு ஆதரவையும் யாரும் பெற்றதாகத் தெரியவில்லை. ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வருவதற்காக வைக்கப்படுகின்ற கோரிக்கைகளாக மட்டுமே இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
பீட்டர் அல்போன்ஸ்

அதைவிட, இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் சரி, அவர்களின் பிரதிநிகளான அரசியல்வாதிகளும் சரி, தமிழகத்தில் எந்த அரசியல் தலைவர்களையும் நம்பவில்லை. அவர்களில் பலர் மத்திய அரசோடு நெருக்கமாக தொடர்பு வைத்துக்கொண்டு தங்களுக்குத் தேவையான விஷயங்களைப் பெற்றுவருகின்றனர்.

Protest
Protest

தமிழகத்தில் தங்களுக்கு ஆதரவாகக் காட்டிக்கொள்ளும் அரசியல் தலைவர்களின் மீது அவர்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் எந்தத் தமிழ்த்தேசிய அமைப்புகளுடனும் அவர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. 

மொத்தத்தில், சீமானின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக நான் கருதவில்லை'' என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

ஈழம் குறித்த சீமானின் பேச்சுகள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என நாம் தமிழர் கட்சியினரும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என காங்கிரஸ் கட்சியினரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில்,

``பத்து ஆண்டுகளாக ஈழம் குறித்த சீமானின் பேச்சு ஒரு வடிகாலாக அமைந்ததேயொழிய பெரிய மாற்றாக அமையவில்லை'' என்கிறார்கள் தமிழ்த்தேசியவாதிகள் சிலர்.

''ஈழப்போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, மக்கள் அடைந்த துயரங்களை, போருக்குப் பின்னால் இருக்கும் காரணிகளை தமிழக மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றவர் சீமான். அவரது பேச்சு தொனியும் உடல்மொழியும் இனப்படுகொலையை மக்களிடம் எளிதாக எடுத்துச் சென்றன. 2009-க்குப் பிறகு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஈழம் குறித்த மிகப்பெரிய பிரசாரகராக செயல்பட்டிருக்கிரார். அதேபோல, பரவலான இளைஞர்களை இனப்படுகொலைக்கு எதிராக ஒரு அமைப்பாக ஒருங்கிணைத்திருக்கிறார்.

ஆனால், இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கோ, ஈழ மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எந்த வழியும், தெளிவும் அவரிடம் கிடையாது. அதை அடைவதற்கான திட்டமிட்ட பார்வையும் நடைமுறையும் அவரிடத்தில் இல்லை.

பத்து ஆண்டுகளில், மாற்று சிந்தனைகளை உற்பத்தி செய்து, பல புதிய தலைவர்களை உருவாக்கி ஒரு பரந்துபட்ட அரசியலை சீமான் முன்னெடுத்திருக்க வேண்டும். மாறாக, தன்னை மையப்படுத்தியே அரசியல் செய்துவருகிறார் சீமான். அவர் தன்னை மைய்யப்படுத்தி அரசியல் செய்வதிலிருந்தே ஈழச்சிக்கலை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

தமிழகத்தில் இருந்த கட்சிகள் இனப்படுகொலையை எப்படி தடுக்கத் தவறியது என்பதையும், தேசிய கட்சிகள் எப்படி இனப்படுகொலைக்கு துணை போயின என்பதையும் மக்களுக்கு அம்பலப்படுத்தியவர் சீமான்தான். அதேசமயம், அதை எப்படி சரியாகச் செய்வது என்பதில் சீமானுக்கு தெளிவான பார்வையில்லை. அவர் என்ன விமர்சனம் செய்தாரோ, அதே தவற்றைத்தான் அவரும் செய்துவருகிறார். ஈழ இனப்படுகொலையில் தேசிய திராவிட கட்சிகளின் மீது அவர் முன்வைத்த விமர்சனங்கள் சரி என்றாலும் சரியான மாற்றை முன்னிறுத்துவதில் அவரிடம் தெளிவில்லை.

Protest
Protest
`சீமான் எச்சரிக்கையோடு பேச வேண்டும்!' - திருமாவளவன்

இன ஒடுக்குமுறைக்கு காரணமாக இருக்கும் இந்திய அமைப்புமுறையை விமர்சனம் செய்யாமல், திராவிடக் கட்சிகளை மட்டுமே முதன்மையாக விமர்சனம் செய்துவருகிறார். அதுமட்டுமல்ல, தன் வெற்றிக்கு உறுதுணையாக, சக தமிழ்த்தேசிய அமைப்புகளை, ஜனநாயக இயக்கங்களைக் கூட அவர் ஒருங்கிணைக்கத் தவறியிருக்கிறார்'' என்கிறார்கள் அவர்கள்.

சீமான் ராமேஸ்வரத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூறியது போல, இன்றளவும் நமக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார்கள் ஈழ மக்கள். ஆனால், அவர்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலைதான் இப்போதும் இருக்கிறது. தங்களின் அன்றாட வாழ்வுக்கே போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் அம்மக்கள். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் ஏதிலிகளாக வந்த ஈழ மக்களுக்குக் கூட எதுவும் செய்யமுடியாத கையறு நிலைதான் நீடிக்கிறது.

இந்த நிலை எப்போது மாறும்... ஈழ மக்களுக்கான நீதியும் நியாயமும் எப்போது கிடைக்கும்?