Published:Updated:

``இது எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தும் செயல்..!” - பா.ஜ.க வைச் சாடும் குமாரசாமி

கர்நாடக அரசியலில் ஒவ்வொரு நாளும் புது புது திருப்பங்கள் நடைபெறுவதால் இந்திய அளவில், அம்மாநில அரசியல் அதிக கவனம் பெற்றுள்ளது.

குமாரசாமி - மோடி
குமாரசாமி - மோடி

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவில் தொடங்கிய சர்ச்சை இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை ஆளும் கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களும் தங்களின் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி
ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி

இதைத்தொடர்ந்து பா.ஜ.கவுடன் ம.ஜ.த இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் ச.ரா மகேஷ் சமீபத்தில் கர்நாடக பா.ஜ.க பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ கே.எஸ் ஈஸ்வரப்பா ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசியதால் இந்தப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் அம்மாநில அரசியல் களத்தில் இன்னும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள முதல்வர் குமாரசாமி, “சுற்றுலாத் துறை அமைச்சர் ச.ரா மகேஷ் பா.ஜ.க தலைவர்களைத் தற்செயலாகச் சந்தித்ததற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை. கர்நாடகாவில் சுற்றுலாத்துறைதான் கே.கே கட்டடத்தை நிர்வகித்து வருகிறது. அங்கு பல தலைவர்கள் வருவது இயல்பானது.

ஆட்சியைக் கலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்தாலும் காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாங்கள் தயாராகவும் அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடனும் உள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 `ஆபரேஷன் கமலா 2.0’ -  மும்பையில் முகாமிட்டுள்ள  `அதிருப்தி’ எம்.எல்.ஏ-க்களால் அதிரும் கர்நாடகா

இதே விவகாரம் குறித்து ம.ஜ.த அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கே.கே விருந்தினர் மாளிகைக்குச் செல்வது மிகவும் இயல்பானது. அன்றைய தினம் மகேஷ், அங்கு சென்றபோது தற்செயலாக முரளிதர ராவையும், ஈஸ்வரனையும் சந்தித்துள்ளார். இதில் எந்தச் சிறப்பு அர்த்தமும் இல்லை. காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணிதான் தொடர்ந்து ஆட்சி நடத்தும்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

குமாரசாமி
குமாரசாமி

சமீபத்தில் பல ராஜினாமாக்களால் சரிந்துள்ள காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணியை மேலும் பலவீனப்படுத்த முயலும் பா.ஜ.கவின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.