Published:Updated:

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மோடி, கங்கனா முதல் ஹெச்.ராஜா வரை பாராட்டும்... சர்ச்சையும்! - ஒரு பின்னணி

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே, இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்குவது போன்றும், இந்து-இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மோடி, கங்கனா முதல் ஹெச்.ராஜா வரை பாராட்டும்... சர்ச்சையும்! - ஒரு பின்னணி

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே, இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்குவது போன்றும், இந்து-இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

Published:Updated:
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

தி காஷ்மீர் ஃபைல்ஸ்:

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’ இதில், அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம், 1990-களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே, இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்குவது போன்றும், இந்து-இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. தற்போது படம் வெளியாகியிருக்கும் சூழ்நிலையில் மேலும் சர்ச்சை வெடித்து, பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இதன் பின்னணி என்ன?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தடை விதிக்கக் கோரி வழக்கு:

முதல் பிரச்னையாக, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு, அடுத்த பிரச்னையாக, `இந்தத் திரைப்படத்தில் என் கணவரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும்படியான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தவறாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்' என 1990-களில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விமானப்படை வீரர் ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா, ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் முடிவில், மறைந்த விமானப்படை வீரர் ரவி கண்ணாவின் சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டும் காட்சிப்படுத்த படக்குழுவினருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும், திரைப்படம் வெளியாவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ்.

இதையடுத்து, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த மார்ச் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது `தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’

பாராட்டும் பா.ஜ.க குரல்கள்:

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

படக்குழுவினருடன் மோடி
படக்குழுவினருடன் மோடி

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், `` `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து பாலிவுட்டில் நிலவும் அமைதியை கவனியுங்கள். இந்தப் படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்திருக்கிறது. இந்தப் படத்துக்கு எந்த மலிவான விளம்பரமும் செய்யப்படவில்லை. வசூல் குறித்து எந்தவிதமான போலி எண்களும் வெளியாகவில்லை. மாஃபியா தேச விரோதச் செயல்திட்டங்கள் இல்லை. ஆனாலும் பாலிவுட் இந்தப் படம் குறித்து அமைதியைக் கடைப்பிடிப்பது ஏன் எனத் தெரியவில்லை. நாடு மாறும்போது படங்களும் மாறும்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டி கருத்து பதிவிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், `` `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் இந்தப் படத்தைப் பார்ப்பேன்" என ட்வீட் செய்திருக்கிறார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

அதேபோல, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, `` `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உங்களுக்கான படம். இப்படம் உங்களின் இதயத்தைக் கசக்கிப் பிழியும். ஆகவே, காஷ்மீர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வகையில், நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்" எனத் தனது கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

இது தவிர, தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, `` `Kashmir files’ என்கிற இந்திப் படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை, 5,00,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண முடிகிறது" எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வரிச்சலுகை கொடுக்கும் பா.ஜ.க மாநிலங்கள்:

இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருக்கும் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், வரிச்சலுகையும் கொடுத்து ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில், ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் 100% வரிவிலக்கு அளித்திருக்கின்றன.

சிவராஜ் சிங் சௌகான்
சிவராஜ் சிங் சௌகான்

மேலும், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், ``90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’ இந்தப் படத்தைப் பெருவாரியான மக்கள் பார்க்க வேண்டும். அதனால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதற்கு வரிவிலக்கு கொடுக்கிறோம்” எனத் தெரிவித்திருப்பதோடு, `இந்தத் திரைப்படத்தைக் காண்பதற்காக, மாநில காவல்துறையினர் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும்' எனவும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

கேரள காங்கிரஸ்
கேரள காங்கிரஸ்

எழுந்திருக்கும் எதிர்ப்புக் குரல்கள்:

இந்த நிலையில், பா.ஜ.க-வினருக்கு பதில்தரும்விதமாக கேரள காங்கிரஸ் கமிட்டி, `#Kashmir_Files Vs Truth (காஷ்மீர் பண்டிட் விவகாரம் பற்றிய உண்மைகள்)’ எனும் தலைப்பில் ஒன்பது எதிர்க் கருத்துகளைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது.

வி.பி.சிங்  மற்றும் பாஜக தலைவர்கள்
வி.பி.சிங் மற்றும் பாஜக தலைவர்கள்

அதில், `` 1989 டிசம்பரில் பா.ஜ.க ஆதரவுடன் வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்தது. பி.ஜே.பி ஆதரவுபெற்ற வி.பி.சிங் அரசாங்கத்தின் கீழ் அடுத்த மாதம் ஜனவரி 1990-ல் பண்டிட்களின் இடப்பெயர்வு தொடங்கியது. அப்போது, பா.ஜ.க ஒன்றுமே செய்யவில்லை, நவம்பர் மாதம் 1990 வரை வி.பி.சிங்குக்கு ஆதரவைத் தொடர்ந்து வழங்கியது. மேலும், ஆர்.எஸ்.எஸ்-காரரான கவர்னர் ஜக்மோகனின் வழிகாட்டுதலின்படிதான் பண்டிதர்கள் ஒட்டுமொத்தமாகப் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறினார்கள். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பண்டிட்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக, பா.ஜ.க-வின் சொந்த ஆளுநர் ஜக்மோகன் அவர்களை ஜம்முவுக்கு இடம்மாறச் சொன்னார். ஏராளமான பண்டிட் குடும்பங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. எனவே, பயத்தில் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறினார்கள்" எனத் தெரிவித்திருக்கிறது.

மேலும்,``இந்த இடப்பெயர்வின்போது அயோத்தியில் ராமர் கோயில் பிரச்னையில் பாஜக நாட்டில் இந்து-முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆதாயத்துக்காக ஒரு போலிச் சீற்றத்தை உருவாக்க பா.ஜ.க-வின் பிரசாரத்துக்கு பண்டிட்களின் பிரச்னையைக் கையிலெடுத்தது. இடம்பெயர்ந்த பண்டிட் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவைப் பற்றி பா.ஜ.க பொய் கூறிவருகிறது. இப்படி, பண்டிட்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் பாஜக, மத்தியில் இரண்டு முறையும், காஷ்மீரில் ஒரு முறையும் ஆட்சியில் இருந்தும் அவர்களை காஷ்மீருக்கு அழைத்து வரவோ, குடியமர்த்தவோ இல்லை" எனக் குற்றம்சாட்டியிருக்கிறது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

கேரள காங்கிரஸுக்கு அனுபம் கெர் பதிலடி:

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரமாக (பண்டிட்டாக) நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், ``இது சாதாரண திரைப்படம் அல்ல. இது ஓர் இயக்கம். 32 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கோரச் சம்பவத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது இந்தத் திரைப்படம். இப்படியிருக்கும்போது, இது குறித்துக் கொஞ்சம்கூட யோசிக்காமல், கேரள காங்கிரஸ் அபத்தமான கருத்துகளை வெளியிட்டுவருகிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிரதமர்களை பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்த கட்சி காங்கிரஸ். அதனால் அவர்கள் இதைச் சொல்லக் கூடாது என நினைக்கிறேன். இந்தப் படம் குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளில் கவனம் செலுத்த நான் விரும்பவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் அனுபம் கெர்
`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் அனுபம் கெர்

தொடரும் சர்ச்சை:

கேரள காங்கிரஸைப்போலவே பல்வேறு எதிர்க்கட்சியினர், சிறுபான்மையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் `பா.ஜ.க உண்மைக்குப் புறம்பாக இந்தப் படத்தைவைத்து அனுதாப அரசியல் செய்கிறது' என எதிர்மறையாக விமர்சனம் செய்துவருகின்றனர். மறுபுறம் திரைப்படத்துக்குப் பாராட்டும், வரவேற்பும் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. தற்போது, #KashmirFilesMovie, #Islamophobia உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இரண்டு தரப்பிலிருந்தும் ட்விட்டர் டிரெண்டிங் செய்யப்பட்டுவருகின்றன.