சமீபத்தில் வெளியான `தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இந்து - முஸ்லிம் சகோதரத்துவத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், இஸ்லாமியர்கள்மீது தவறான கண்ணோட்டத்தை முன்வைத்து அவர்களுக்கெதிராக வெறுப்பு பிரசாரத்தைப் பரப்பும் வகையிலும் இருப்பதாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகள் தொடர்ந்து இந்தப் படத்துக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகின்றன.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானபோதே, அதில் வரும் காட்சிகள், முஸ்லிம் கும்பல் ஒன்று இந்துப் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றி இறுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழுவில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவதாக இருந்தன.
இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வோ அரசியலைப் போலவே எதிர்க்கட்சிகளுக்கு எதிராக `தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு அரசியல் நோக்கத்தோடு ஆதரவு குரல் கொடுத்துவருவதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

பிரதமர் மோடிகூட, ``தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்களைத் தாண்டி புதியமுகம் இருப்பதை `தி கேரளா ஸ்டோரி’ வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. காங்கிரஸ் அந்தப் படத்துக்குத் தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவ முயல்கிறது" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், `தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார்.
பெங்களூருவில் நேற்று இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, ``துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்றவற்றை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இது தீவிரவாதத்தின் ஓர் ஆபத்தான வடிவம். இதில் துப்பாக்கிச் சத்தமோ, வெடிகுண்டுச் சத்தமோ எதுவுமில்லை. இந்த விஷ தீவிரவாதத்தை `தி கேரளா ஸ்டோரி’ அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தகைய தீவிரவாதத்துக்கு எந்தவொரு மாநிலத்துடனோ அல்லது மதத்துடனோ தொடர்பு இல்லை.

ஆனால், இது இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்த்து, தவறாக வழிநடத்தி, அவர்களைத் தவறான பாதையில் தள்ளுகிறது. இந்தப் படம் அதை வெளிப்படுத்தி அதற்கு எதிராக எச்சரிக்கிறது. இதுவொரு படமாக இருந்தாலும்கூட தீவிரவாதம் பற்றி நிறைய சொல்கிறது. அதோடு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நாம் ஒரு சிறந்த சமுதாயத்தை நோக்கிச் செல்கிறோம். எனவே, `தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை நாம் அனைவருமே பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.