Published:Updated:

தமிழ்நாடு: ஆளுநர் தவிர்த்த `அமைதிப் பூங்கா’... - ஓர் ஒப்பீட்டுப் பார்வை

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த ‘அமைதிப்பூங்கா’ என்ற வார்த்தையை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை. ‘தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

தமிழ்நாடு: ஆளுநர் தவிர்த்த `அமைதிப் பூங்கா’... - ஓர் ஒப்பீட்டுப் பார்வை

ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த ‘அமைதிப்பூங்கா’ என்ற வார்த்தையை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை. ‘தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அ.தி.மு.க-வின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்கள். தமிழ்நாட்டில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘அ.தி.மு.க ஆட்சியில் நடந்தது போன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தி.மு.க ஆட்சியில் இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்த பட்டியலே என்னிடம் இருக்கிறது’ என்று நீண்ட பட்டியலை வாசித்தார்.

 ஜெயலலிதா
ஜெயலலிதா

இந்த நிலையில், அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது... தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

2011-ம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, “நான் முதல்வரானதால் சங்கிலித் திருடர்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்’’ என்று பெருமையுடன் சொன்னார். ஆனால், அவரின் ஆட்சியில் ஏராளமான கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை வன்கொடுமைகளும் நிகழ்ந்தன.

2011 முதல் 2014-ம் ஆண்டு வரையில் நிகழ்ந்த கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அப்போது வெளியிடப்பட்டன. அந்தப் புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. அதன்படி, அந்த நான்கு ஆண்டுகளில் 7,567 கொலைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்தன. 11,845 கொலை முயற்சி சம்பவங்களும், பெண்களுக்கு எதிராக 2,792 பாலியல் வன்முறைச் சம்பவங்களும், பட்டியலின சமூகத்தினர்மீது 6,429 வன்முறைகளும், 7,454 ஆள் கடத்தல் சம்பவங்களும், 11,630 கலவரங்களும் நிகழ்ந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தர்மபுரி வன்முறை
தர்மபுரி வன்முறை

சாதி ஆணவப் படுகொலைகள் அ.தி.மு.க ஆட்சியில் அதிகமாக நிகழ்ந்தன. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கியக் குற்றவாளியான யுவராஜ், ஆடியோ மூலமாக டி.ஜி.பி-க்கே சவால்விட்டார். அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறியது. இளவரசன் - திவ்யா சாதி மறுப்பு திருமணத்தைத் தொடர்ந்து, தருமபுரியில் மிகப்பெரிய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இளவரசன் மரணம் அ.தி.மு.க ஆட்சியில்தான் நிகழ்ந்தது. பரமக்குடியில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியது அ.தி.மு.க ஆட்சியில்தான்.

அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, ஒட்டுமொத்த ஊர் மக்களையும் ‘தேசவிரோதிகள்’ என முத்திரை குத்திய பெருமை போலீஸையே சாரும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதற்காக, சுமார் ஒன்றரை லட்சம் பேர்மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை போலீஸார் பதிவுசெய்தனர். அவர்களில் 10,000 பேரை தேசவிரோதிகள் என வழக்கு பதிவுசெய்தனர். திருப்பாச்சேத்தி எஸ்.ஐ-யான ஆல்வின் சுதன், சிலரால் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். ஆல்வின் சுதன் கொலையில் கைதுசெய்யப்பட்ட பாரதி, பிரபு என்ற இருவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

எல்லாவற்றுக்கும் உச்சமாக, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள்மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் 13 அப்பாவிகள் உயிரிழந்தனர். `அந்தச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று அன்றைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி சொன்னார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின்போதுதான், ‘இந்தியாவிலேயே அதிகமான போராட்டங்கள் நடக்கும் மாநிலம்’ என்று தமிழ்நாடு குறிப்பிடப்பட்டது. அந்த அளவுக்கு மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில்தான், தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிவருகிறார். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறார். தற்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு குறித்து நல்ல அபிப்பிராயம் இல்லை. அதனால்தான், ஆளுநர் உரையில் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்த ஆர்.என்.ரவி, ‘அமைதிப்பூங்கா’ என்ற வார்த்தையையும் தவிர்த்திருக்கிறார். இதன் மூலம், தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இல்லை என்ற நிலைப்பாட்டில் ஆளுநர் ரவி இருக்கிறார் என்பது தெரிகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

உண்மையில், ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லையா... முந்தைய அ.தி.மு.க ஆட்சியைப்போலவே, தி.மு.க ஆட்சியிலும் லாக்கப் மரணம் தொடர்கதையாகிவருகிறது. சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் தொடங்கி பலர் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்ததாகத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுவருகிறது. கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மாநில அரசின் உளவுத்துறை கோட்டைவிட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

ஆனால், `உரிய நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தது; அந்தச் சம்பவம் குறித்து உடனடியாக என்.ஐ.ஏ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார்’ என்ற குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.க-வினர் மறுப்பு தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கிப் படித்துவந்த ஒரு மாணவியின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மரணத்தைத் தொடர்ந்து, அந்தப் பள்ளி சூறையாடப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், ‘தூத்துக்குடி சம்பவம்போல இதை தி.மு.க அரசு கையாளவில்லை... அதனால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன’ என்று தி.மு.க தரப்பினர் கூறினர்.

கடந்த நவம்பர் மாதம் அரியலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா எனச் சிலர் சதி செய்கிறார்கள். ஐயோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு, தமிழகம் அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது” என்று குறிப்பிட்டார்.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

அ.தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்ததைப்போலவே, தி.மு.க ஆட்சியிலும் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. சமீபத்தில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவாசலில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்த்தொட்டியில் மாற்றுச் சாதியினர் மனிதக்கழிவு கலந்ததைத் தொடர்ந்து எழுந்த விவகாரம் தி.மு.க அரசுக்குக் கெட்டபெயரை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவும், காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியதைப் பலர் பாராட்டுகிறார்கள்.

ஆனால், அந்த இழிசெயல் குறித்து தமிழக முதல்வரோ, அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ ஒரு வார்த்தைகூட கண்டிக்கவில்லை என்பது சீரியஸான விமர்சனமாக எழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை ஓர் அமைச்சர்கூட சென்று சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. ‘இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?’ என்று கடுமையான விமர்சனங்களும் எழாமல் இல்லை.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “எந்த ஆட்சியாக இருந்தாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரத்தான் செய்யும். வரும் பிரச்னைகளை அரசு எப்படிக் கையாள்கிறது, என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் முக்கியம். தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாநில அரசின் உளவுத்துறை தோல்வியடைந்தது. அதனால்தான் அவ்வளவு பெரிய வன்முறைச் சம்பவம் அங்கு நிகழ்ந்தது. அதேபோல, கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில், மாநில அரசின் உளவுத்துறை மட்டுமல்லாமல், மத்திய அரசின் உளவுத்துறையும் தோல்வியடைந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை உண்டு. ஆனால், ‘பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்’ என்பதையே எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறார். பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேரையும் கைதுசெய்திருக்கிறார்கள். அவர்களைக் கட்சியிலிருந்து தி.மு.க நீக்கியிருக்கிறது.

ப்ரியன்
ப்ரியன்

ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் பெண் போலீஸாருக்குப் பாதுகாப்பு இருந்ததா... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை. போலீஸ் உயரதிகாரிகள்மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளே பாலியல் புகார் கொடுத்தார்கள். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது எடப்பாடி பழனிசாமி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

சாத்தான்குளம் சம்பவம், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பரமக்குடி துப்பாக்கிச்சூடு என அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுடன் ஒப்பிடும் அளவுக்கு தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இல்லை என்பதுதான் யதார்த்தம். தமிழ்நாட்டின் வரலாற்றிலே இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 13 பேரை அ.தி.மு.க ஆட்சியில் சுட்டுக் கொன்றார்கள். `அதைத் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று முதல்வர் சொல்லும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு மோசமாக இருந்தது. தி.மு.க ஆட்சியில் துப்பாக்கிச்சூடே நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் ப்ரியன்.