Published:Updated:

சென்னையில் தயாராகும் மத்திய அரசு நிராகரித்த ஊர்திகள் - எந்தெந்த தலைவர்களுக்கு இடம்?

குடியரசு தின அணிவகுப்பு

டெல்லி ராஜபாதையில் உலாப்போக நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தியை சென்னை குடியரசு தின விழாவில் மட்டுமின்றி தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் ஓடச்செய்வோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்

சென்னையில் தயாராகும் மத்திய அரசு நிராகரித்த ஊர்திகள் - எந்தெந்த தலைவர்களுக்கு இடம்?

டெல்லி ராஜபாதையில் உலாப்போக நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தியை சென்னை குடியரசு தின விழாவில் மட்டுமின்றி தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் ஓடச்செய்வோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்

Published:Updated:
குடியரசு தின அணிவகுப்பு

இந்திய குடியரசு தினத்தையொட்டி ஒவ்வோராண்டும் டெல்லி ராஜபாதையில் மிகப்பெரிய அலங்கார ஊர்தி பவனியும் அணிவகுப்பும் நடப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் விருந்தினர்கள் வருவார்கள் என்பதால் இந்த அலங்கார ஊர்தி பவனியை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மிகவும் கவனமெடுத்துச் செய்யும். 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், 18க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள் தங்கள் அலங்கார ஊர்திகளை இந்த அணிவகுப்பில் இடம்பெறச் செய்ய போட்டிபோடுவது வழக்கம். இந்த ஊர்திகளில் சிறப்பான ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும்.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

பெரும்பாலும் குடியரசு தின அணிவகுப்புல 16 முதல் 20 அலங்கார ஊர்திகள்தான் இடம்பெறும். ஒவ்வோராண்டும் அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்வதற்கு கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அமைக்கும். அந்தக் குழு, பாதுகாப்பு அமைச்சகத்தோடு ஆலோசித்து சில தலைப்புகளை அறிவிக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், அரசுத்துறைகளுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி வரைக்கும் 7முறை இந்தக் குழு கூடும். கொரோனா காரணமாக சில வருடங்களாக 5 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. மாநிலங்கள் தங்கள் வடிவமைப்புகளையும் கருத்துருக்களையும் இந்த குழுவிடம் சமர்ப்பிப்பாரா்கள். அந்தக்குழு வடிவமைப்புகளில் திருத்தம் சொல்வதும் நிராகரிப்பதும் உண்டு. இறுதியாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் இறுதி செய்யப்பட்ட பட்டியலை இந்தக்குழு வழங்கும். இந்தக்குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. ரொம்பவே கௌரவமாகக் கருதப்படும் இந்த அலங்கார ஊர்திகளை வடிவமைக்க மாநிலங்களும் அரசுத்துறைகளும் பெரியளவில் கவனம் எடுத்துக் கொள்வதுண்டு. தமிழக அரசும் இதில் கூடுதல் ஆர்வம் காட்டும்.

2014 -ல் கிராமிய கலை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட அலங்கார ஊர்தியும், 2016 ல் பழங்குடி மக்களின் இயற்கை வழியிலான வாழ்க்கை முறையை மையப்படுத்திய அலங்கார ஊர்தியும், 2019-ல் மதுரையில் அரையாடை அணியத் தொடங்கிய மகாத்மாவை மையப்படுத்திய அலங்கார ஊர்தியும், 2020-ல் நம் பழைமையான நாட்டார் வழிபாட்டை மையப்படுத்திய அலங்கார ஊர்தியும், 2021-ல் மகாபலிபுரம் கலைச்சின்னங்களை மையப்படுத்திய அலங்கார ஊர்தியும் இந்திய குடியரசு தினவிழா அலங்கார அணிவகுப்பில் இடம்பெற்றது. 2018-ம் ஆண்டு தமிழகத்தின் அலங்கார ஊர்தி இந்த அணிவகுப்பில் இடம்பெறவில்லை.

இந்தாண்டு சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆண்டு நிறைவடைவதால் freedom struggle-75 என்னும் பொதுத்தலைப்பை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கொடுத்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளா, சீர்திருத்தவாதி நாராயண குரு , கோட்டயத்தில் உள்ள ஜடாயு பூங்கா நினைவுச்சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு கருத்துருவை வழங்கியது.

மேற்கு வங்கம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அம்மாநிலத்தில் பிறந்த சுதந்திரப் போராளிகளான ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், சித்தரஞ்சன் தாஸ், ஸ்ரீ அரவிந்தோ மாதங்கினி ஹஸ்ரா, பிர்சா முண்டா, நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரின் உருவங்களடங்கிய கருத்துருவை வழங்கியது.

குடியரசு தின விழா ஊர்தி
குடியரசு தின விழா ஊர்தி

தமிழக அரசு, விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு, தமிழக அரசின் 75 ஆண்டுகால சாதனைகள், சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட தமிழகத் தலைவர்கள் என்று மூன்றுவிதமான வடிவமைப்புகளையும் அதற்கான கருத்துருக்களையும் சமர்பித்தது. இந்தக்குழுவின் முதல் கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன், இணை இயக்குநர் ராஜசேகரன், ஆர்ட் டைரக்டர் சதீஷ் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டார்கள். அந்தக்கூட்டத்தில் தமிழக அரசு கொடுத்த மூன்று கருத்துருக்களில் விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு என்னும் கருத்துரு மத்திய குழுவுக்கு பிடித்திருந்தது. அந்த டிசைனில், முகப்புப் பகுதியில சுதேசிக் கப்பல் ஓட்டிய வ.உ.சியும் கப்பலும் இடம்பெற்றிருந்தது.

அடுத்து இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாகக் கருதப்படுற வேலூர் புரட்சியை நினைவுகூறும் விதமாக கோட்டையும் கோட்டையின் உச்சியில ஆங்கிலேயரை வீழ்த்துகிற இந்திய வீரர்களின் உருவமும் இடம்பெற்றிருந்தது. அடுத்து பாரதியார் அந்நிய ஆடைகளை எரிக்கிற காட்சி இடம்பெற்றிருந்தது. அடுத்து வீரபாண்டிய கட்டபொம்மனும் அதையடுத்து, மருது சகோதரர்கள் தூக்கிலிடப்படும் காட்சியும் இருந்தது. இறுதியா வீரமங்கை வேலு நாச்சியார் வாலேந்தி குதிரையில உக்காந்திருக்கிற சிற்பமும் இருந்தது. கீழே மியூரல் பெயிண்டிங்கில் வேலுநாச்சியாரின் தளபதிகள் உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

இந்த வடிவமைப்பில் சில விஷயங்கள் மத்திய குழுவுக்குப் புரியவில்லை. வேலுநாச்சியார் அமர்ந்திருந்த குதிரை வெள்ளை நிறத்தில் இருந்ததால் குழுவில் இருந்த சிலர் அவரை ஜான்ஸி ராணி என்று புரிந்துகொண்டு, ஜான்ஸிராணிக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அதிகாரிகள் வேலுநாச்சியாரைப் பற்றி சொல்ல, 'குதிரையின் நிறத்தை மாத்துங்க, வேலுநாச்சியாரோட முகத்தை தமிழ்வடிவமா மாத்துங்க' என சொல்லியிருக்கிறார்கள். வ.உ.சியைப் பற்றியும் சிலபேருக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு விரிவாக விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள் நம் அதிகாரிகள்.

வேலூர் புரட்சியும் மருது சகோதரர்களைத் தூக்கிலிடும் காட்சியும் எதிர்மறையான எண்ணத்தை விதைக்கிற மாதிரியிருக்கிறது என்று சொல்லி அதையும் நீக்கச் சொல்லியிருக்கிறார்கள். 'தமிழகம்ன்னாலே எல்லோருக்கும் அங்கிருக்கும் கோயில்கள்தான் நினைவுக்கு வரும். அதனால ஒரு பெரிய கோயிலை வைக்கலாமே' என்று மத்திய குழுவினர் சொல்ல, தமிழக அதிகாரிகள், வேலுநாச்சியாரோடும் சுதந்திரப் போராட்டத்தோடும் நெருங்கிய தொடர்புள்ள காளையார்கோயிலை வைக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவோடு முதல் கூட்டம் முடிந்துள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

இரண்டாவது கூட்டத்தில், மத்திய குழு சொன்ன எல்லாத் திருத்தங்களையும் செய்து புதிய வடிவமைப்பை சமர்ப்பித்தது தமிழக அதிகாரிகள் குழு. இந்த வடிவமைப்பில் அளவு குறித்த பிரச்னை வந்துள்ளது. தமிழகத்தில் அலங்கார பவனிகளுக்கு பெரிய ட்ரக் பயன்படுத்தப்படும். டெல்லியில டிராக்டரைத்தான் பயன்படுத்துவார்கள். அளவு சிறிதாக இருக்கும். அதனால் அளவில் சில மாற்றங்கள் செய்யச் சொன்னதோடு, வ.உ.சியின் முழு உருவம் வேண்டாம், மார்பளவு போதும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மூன்றாவது கூட்டத்தில் மத்திய குழு சொன்ன திருத்தங்களையெல்லாம் செய்து 6 விதமான வடிவமைப்புகளை தமிழக அதிகாரிகள் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதை மத்திய குழு ஏற்றுக்கொண்டது. வழக்கமாக மத்திய குழு கருத்துருவை ஏற்றுக்கொண்ட பிறகு மாநில அரசு, த்ரீ டைமன்சன் மாடலில் ஒரு மினியேச்சர் செய்து நான்காவது கூட்டத்தில் மத்திய குழுவுக்குத் தரும். அந்த மினியேச்சர் செய்யும் வேலைகளில் தமிழக அதிகாரிகள் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில், மத்திய குழுவின் நான்காவது கூட்டம் நடந்து முடிந்துவிட்டது என்ற செய்தி தமிழக அதிகாரிகளை வந்தடைந்திருக்கிறது.

குடியரசு தின விழா
குடியரசு தின விழா

நம் கருத்துரு ஏற்கப்பட்டிருக்கும்போது எப்படி நான்காவது கூட்டத்தை நமக்கு அழைப்புத்தராமல் நடத்துவார்கள் என்று தமிழக அதிகாரிகள் குழம்பியிருக்கிறார்கள். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'குழு இறுதி செய்து கொடுத்த பட்டியலில் தமிழகத்தின் பெயர் இல்லை...' என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதேபோல கேரள அரசு கொடுத்த கருத்துருவில், நாராயண குருவுக்குப் பதிலாக எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறந்த ஆதி சங்கராச்சாரியார் உருவத்தை வைக்கப் பரிந்துரைத்திருக்கிறது மத்திய குழு. கேரளா அதை ஏற்க மறுத்து அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

மத்திய பொதுப்பணித்துறை நேதாஜியின் உருவம் தாங்கிய வடிவமைப்பைத் தந்து அனுமதியும் பெற்றுவிட்டதால் வேறு வடிவமைப்பை வழங்குமாறு மேற்கு வங்கத்திடம் மத்திய குழு கேட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்க அரசு அதற்கு மேல் இதில் ஆர்வம் காட்டவில்லை.

இது நடந்தது டிசம்பர் மாதம். திடீரென இந்தப் பிரச்னை இப்போது வெளிச்சத்துக்கு வர தமிழகம் முழுவதும் பேசுபொருளாயிருக்கிறது. 'இதுமாதிரி மாநிலங்களோட வடிவமைப்புகளை நிராகரிக்கிறது புதுசில்லை... வழக்கமான நடைமுறைதான்... மத்திய அரசுக்கும் இதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என சிலர் சொல்கிறார்கள். 'இல்லை... உள்நோக்கத்தோடதான் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம்,டெல்லின்னு எதிர்க்கட்சிகள் ஆள்ற மாநிலங்களை நிராகரிச்சிருக்காங்க' என்றும் சிலர் சொல்கிறார்கள் .

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

இந்தாண்டு சமர்ப்பிக்கப்பட்ட 56 வடிவமைப்புகளில் 21 மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொடுத்த வடிவமைப்புகள் 12. மற்ற அரசுத்துறைகளின் வடிவமைப்புகள் 9. இதிலும் எல்லா வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்கும் என்று சொல்ல முடியாது. இறுதி வடிவம் திருப்தியாக இல்லாதபட்சத்தில் அவற்றிலும் சில வாகனங்கள் நிராகரிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இது இப்படியிருக்க, டெல்லி ராஜபாதையில் உலாப்போக நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தியை சென்னை குடியரசு தின விழாவில் மட்டுமின்றி தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் ஓடச்செய்வோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இந்த வாகனங்கள் செய்யும் பணி சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் இரவு பகலாக நடந்து வருகிறது. டெல்லியில் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துருவை அப்படியே செய்யாமல் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். மொத்தம் நான்கு வாகனங்கள் தயாராகின்றன. ஒரு வாகனத்தில் மங்கள இசைக் கலைஞர்கள் அமர்ந்து வாசித்துக்கொண்டு வருவார்கள். மற்றொரு வாகனத்தில் டெல்லியில் நிராகரிக்கப்பட்ட அம்சங்களை உள்ளடக்கி வேறு சில அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை, செய்தித்ததுறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கலை இயக்குநர்கள் சதீஷ், தியாகராஜன் ஆகியோர் மேற்கொண்டு வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

தயாராகும் வாகனங்கள்
தயாராகும் வாகனங்கள்

ஊர்தி எண் ஒன்றில் முகப்புப் பக்கத்தில் வேலூர் புரட்சியைச் சித்தரிக்கும் காட்சி இடம்பெறும். கோட்டையின் உச்சியில் நம் வீரர்கள் கம்பெனிப் படையினரை வீழ்த்தும் காட்சி இருக்கும். அதையடுத்து ராணி வேலூ நாச்சியாரின் கம்பீர உருவம் இடம்பெறுகிறது. குதிரையில் வாளேந்தி அமர்ந்திருக்கும் அந்த சிற்பம்தான் இந்த வாகனத்தின் மைய சிறப்பம்சமாக இருக்கும். பின்பகுதியில் ராணி வேலுநாச்சியாரோடும் சுதந்திரப் போராட்டத்தோடும் தொடர்புடைய காளையார் கோயில் ராஜகோபுரம் இடம்பெறும். தவிர, வீரத்தாய் குயிலி உருவமும் இருக்கும். மருது சகோதரர்களைத் தூக்கிலிடும் காட்சியும் இருக்கும். வீரபாண்டிய கட்டப்பொம்மன், அவருடைய தளபதி சுந்தரலிங்கம், மன்னர் பூலித்தேவன், அவருடைய தளபதி ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துக்கோன் ஆகியோரின் சிற்பங்களும் இடம்பெறும்..." என்கிறார் கட்டமைப்பாளர் செழியன் குமாரசாமி.

ஊர்தி எண் இரண்டை உருவாக்குபவர், கலை இயக்குநர் தியாகராஜன்.

"இந்த வாகனத்தில் கொடிகாாத்த குமரன், தந்தை பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், ரெட்டமலை சீனிவாசன், வ.வே.சு அய்யர், வாஞ்சிநாதன் ஆகியோரது சிற்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சிப்பாய் போராட்டத்துல ஏராளமான இந்தியர்களை கொலை செய்ய காரணமா இருந்த நீலன் சிலையை சென்னையில இருந்து அகற்றனும்ன்னு சொல்லி நடத்தப்பட்ட போராட்டத்துல கலந்துக்கிட்டு 9 வயது மகளோட சிறைக்குப் போனவங்கதான் கடலூர் அஞ்சலையம்மாள்.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

1932-ல நடந்த போராட்டத்துல கலந்துக்கிட்டு திரும்பவும் நிறைமாத கர்ப்பிணியா சிறைக்குப் போன அஞ்சலையம்மாள் பரோலில் வந்து குழந்தை பெற்றுக்கொண்டு பச்சிளம் குழந்தையோடு திரும்பவும் ஜெயிலுக்குப் போனவர். அவங்க தியாகத்தை நினைவுகூரும் விதமா அவர் சிற்பம் இடம்பெறுது. ஒரு பாறை மீது தீரன் சின்னமலையின் சிற்பம் வருகிறது. ஜே.சி.குமரப்பாவின் சிற்பமும் இடம்பெறும். இது மாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது..." என்கிறார் தியாகராஜன்.

மூன்றாவது வாகனத்தில் மகாகவி பாரதி அந்நிய துணிகளை எரிக்கும் சிற்பம் இடம்பெறுகிறது. பாரதியார் உடன் சுப்பிரமணிய சிவா, ராகாவாச்சாரி சிற்பங்களும் இருக்கும். நடுவில் வ.உ.சியும் கப்பலும் இடம்பெறும். இந்த வாகனத்தின் பின்பக்கம் ஜெயில் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்திய நாகம்மையார் சிற்பம் அதில் இடம்பெறலாம் என்கிறார்கள்.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

நாளை குடியரசு தினம். ஆனாலும் இன்று இரவுவரை வாகனங்களில் மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.

வழக்கமாக சென்னை மக்களுக்கு மட்டுமே பார்க்க வாய்க்கும் குடியரசு தின அலங்கார அணிவகுப்பை மத்திய அரசின் புண்ணியத்தில் தமிழகம் முழுக்க உள்ள மக்கள் பார்க்கப்போகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism