Published:Updated:

``கொலைகாரனுக்குப் பின்னால் நிற்கிறார்கள்; சிபிசிஐடி விசாரணையே வேஸ்ட்!" - கள்ளக்குறிச்சி மாணவி தாயார்

கணியாமூர் தனியார் பள்ளி மாணவி தாய் செல்வி

"நாங்க இதுக்காகத்தான் கோஷம்போட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும் எனப் போராடினோமா... இதற்கு பேசாமல் போலீஸிடமே விசாரணை இருந்திருக்கலாமே." - கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயார் குற்றச்சாட்டு

``கொலைகாரனுக்குப் பின்னால் நிற்கிறார்கள்; சிபிசிஐடி விசாரணையே வேஸ்ட்!" - கள்ளக்குறிச்சி மாணவி தாயார்

"நாங்க இதுக்காகத்தான் கோஷம்போட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும் எனப் போராடினோமா... இதற்கு பேசாமல் போலீஸிடமே விசாரணை இருந்திருக்கலாமே." - கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயார் குற்றச்சாட்டு

Published:Updated:
கணியாமூர் தனியார் பள்ளி மாணவி தாய் செல்வி

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனை மேற்கொண்ட மாணவியின் உடற்கூறாய்வு வீடியோ மற்றும் ஆய்வறிக்கை, மாணவியின் கையெழுத்து சார்ந்த தடவியல்துறை அறிக்கை, மாணவியின் பெரியப்பாவிடமிருந்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைப்பற்றிய போன் உள்ளிட்டவற்றைக் கேட்டு நேற்றைய தினம் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர் மாணவியின் தரப்பினர். அப்போது பேசிய மாணவியின் தாயார் செல்வி, "மாணவி, விடுதியில் பயன்படுத்திய போனைத்தான் நீதியரசர் கேட்டிருக்கிறார். விடுதியில், பாப்பாவிடம் போனே கிடையாது. சி.பி.சி.ஐ.டி-க்குத் தெரியாதா, நீதியரசர் என்ன கேட்கிறார் என்று. 

விழுப்புரம் - தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
விழுப்புரம் - தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
தே.சிலம்பரசன்

இந்தக் கொலையை மறைக்க, தற்கொலை என முடிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி விசாரணையே வேஸ்ட். நாங்க இதுக்காகத்தான் கோஷம்போட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும் எனப் போராடினோமா... இதற்குப் பேசாமல் போலீஸிடமே விசாரணை இருந்திருக்கலாமே... விடுதியில், பாப்பா இறப்பதற்கு முன்பு போனைப் பயன்படுத்திப் பேசியிருந்தால் அது இரு ஆசிரியைகளின் போன்கள்தான். அவர்களிடம்தான் போலீஸ் போனை வாங்கிப் பார்க்க வேண்டும். உண்மைகள் கொட்டிக்கிடக்கின்றன, அள்ளிக்கிட்டு வரலாம். ஆனால், கொலைகாரனுக்குப் பின்னால் நிற்கிறார்கள். 

பள்ளிக்கூடத்தின் உள்ளே ஆணுறைகள் அத்தனை கிடந்தன. அது என்னவென்று கேள்வி கேட்டிருப்பீர்களா... கைரேகை இருந்தது, அதைப் பற்றி என்னன்னு கேட்டிருப்பீர்களா... மருத்துவரிடம் விசாரித்தீர்களா... குழந்தையின் வயிற்றில் எப்படி விஷம் போனது... பெற்ற தாய்க்கே விசாரணை பற்றித் தெரியவில்லை என்றால், என்ன விசாரணை இது. இன்றோடு 135 நாள்கள் ஆகின்றன. ஒரு தாயின் வலியைப் புரிந்துகொள்வதில்லையா. என்னுடைய கேள்விக்கு வாரா வாரம் பதில் சொல்லுங்கள். 

மாணவியின் தாயார் செல்வி.
மாணவியின் தாயார் செல்வி.

பாப்பாவின் உடைகளை சீல்வைத்து தந்திருக்க வேண்டும். ஆனால் வெறுமனே தந்திருக்கிறார்கள். 'சி.பி.சி.ஐ.டி-யை நாம் நம்ப வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும்' என்று என் மகளின் நோட்டுகளையெல்லாம் தூக்கிக் கொடுத்தேன். எந்த அறிக்கையையும் தராமல் இருந்தால் என்ன அர்த்தம்... ஒரு முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்கள். ஓரிரு கொலைகள் இல்லை, ஏழு கொலைகள்... இந்த வழக்கைவைத்து பழைய கொலைகளையெல்லாம் வெளியில் கொண்டு வந்திருக்க வேண்டாமா... என் வயிறு எரிகிறது" என்றார் ஆவேசமாக.