மரக்காணம், செங்கல்பட்டு பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலியானதற்கு ஆட்சியாளர்களின் மெத்தனம்தான் காரணம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மரக்காணம் அருகே கள்ளச்சாராயத்துக்கு 19 பேர் பலியாகியிருக்கின்றனர். 30-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச்சாராயத்துக்குப் பலியானவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்குக்கூடத் தெரியாமல் காவல்துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் துயரச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, தமிழகம் முழுவதும் 1,558 கள்ளச்சாராய வியாபாரிகளைக் கைதுசெய்து, பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்திருக்கிறது தமிழக காவல்துறை.
இத்தனை கள்ளச்சாராய வியாபாரிகள் விவரங்கள் தெரிந்திருந்தும், கள்ளச்சாராயம் விற்பவர்கள் யார், விற்பனை எங்கே நடக்கிறது என்று தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்காமல் இத்தனை நாள்கள் அனுமதித்துவிட்டு, தற்போது கண்துடைப்புக்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வது வெட்கக் கேடு. யாரை ஏமாற்ற முயல்கிறது தமிழக அரசு... மரக்காணம் துயரச் சம்பவத்தில், மரூர் ராஜா எனும் சாராய வியாபாரியின் பெயர் வெளிப்பட்டிருக்கிறது.

தி.மு.க-வைச் சேர்ந்த இவர், திண்டிவனம் 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவரின் கணவர். சாராய விற்பனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் இவர் மேல், பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. 2018-ம் ஆண்டிலேயே சாராய விற்பனை தொடர்பாக இவர் மேல் வழக்கு இருந்துவருகிறது. அது போக, பல்வேறு குற்ற வழக்குகளும் இவர் மேல் இருக்கின்றன. இந்த மரூர் ராஜா, அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமானவர்.
தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டாலும், அமைச்சரின் செல்வாக்கால், பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் தனது சாராய விற்பனையைத் தொடர்ந்து வந்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம், காரில் சாராயம் கடத்திய வழக்கில் இவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எனினும், அமைச்சரின் நெருக்கத்தால், சிறையில் இருந்தபடியே தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவருகிறார் என்றும் தெரியவருகிறது. சமூக வலைதளங்களில் தி.மு.க-வை விமர்சித்தால், உடனே குண்டாஸ் நடவடிக்கை எடுக்கும் தி.மு.க அரசு, பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தும், மரூர் ராஜா மேல் இதுவரை குண்டாஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்?

அமைச்சர் செஞ்சி மஸ்தானுடனான நெருக்கமா... ஒரு சாராய வியாபாரியை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாரா... தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருப்பது, நேற்றைய தினம் அரசு மேற்கொண்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட சாராயத்தின் அளவிலும், 1,558 சாராய வியாபாரிகள் கைது நடவடிக்கைகளிலும் வெளிப்படையாகியிருக்கிறது. இத்தனை நாள்களாக நடந்துவரும் கள்ளச்சாராய விற்பனை அனைத்தும், அரசுக்கும் காவல்துறைக்கும், தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்துவது, மதுவிலக்குத்துறையின் முக்கியப் பொறுப்பாகும். ஆனால், அந்தத் துறைக்குப் பொறுப்பான சாராய அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தெரியாமல் இத்தனை அதிகமான அளவில் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்குமா என்பதும் கேள்விக்குறி. கள்ளச்சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறையில் லஞ்சம் வாங்கிய வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்று காலை வருவதாக இருந்த நிலையில், நேற்று முழுவதும் சம்பவ இடத்துக்கே வரவில்லை.

ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மேல் வழக்கு பதிவுசெய்ய, தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஆணையிட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருவரும், கள்ளச்சாராய விற்பனை குறித்து அறிந்திருந்தும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அல்லது, தங்கள் அமைச்சர் பதவிக்கான பொறுப்புகளிலிருந்து தவறியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே, டாஸ்மாக் மூலம் தமிழக சகோதரிகளின் தாலியைப் பறிப்பது போதாதென்று, கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை செல்லும் இவர்கள் இருவரையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன்.

அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் தாய்மார்களின் கண்ணீரையும் வெறும் இழப்பீடு கொடுத்து சரிசெய்துவிடலாம் என்று முதலமைச்சர் நினைத்தால், அது மிகவும் தவறான போக்காகும். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் பா.ஜ.க தயங்காது என்று எச்சரிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.