Published:Updated:

மீண்டும் கேபிளைப் பிடித்த உடுமலை ராதாகிருஷ்ணன்... அமைச்சர் மணிகண்டன் பதவிக்கு ஆபத்து!

கேபிள் டி.வி.
கேபிள் டி.வி.

கேபிள் நிறுவனத்தை உடுமலை ராதாகிருஷ்ணன் மீண்டும் கைப்பற்றியிருப்பதன் பின்னணியில் டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் இருப்பதாகத் தகவல் பரவியுள்ளது.

கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழக அரசின் கேபிள் நிறுவனத்தலைவர் பதவியில் இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் டிவி தலைவராக அழகு பார்த்த அதே ஜெயலலிதாதான், 2016 தேர்தலுக்குப் பின் அந்தப் பதவியைத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டனிடம் ஒப்படைத்தார். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கோட்டைவிட்ட டிஜிட்டல் லைசென்ஸை இவர்தான் பெற்றுத் தந்தார். உடுமலையிடம் இருந்த வீட்டுவசதித் துறை, திருப்பூர் மாவட்டச் செயலாளர் என இரண்டு பதவிகளும் அடுத்தடுத்து பறிக்கப்பட்டன. வீட்டுவசதித் துறை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், திருப்பூர் மாவட்டச் செயலாளர் பதவி பொள்ளாச்சி ஜெயராமனிடமும் தரப்பட்டது.

உடுமலை ராதாகிருஷ்ணன்
உடுமலை ராதாகிருஷ்ணன்

பசை இல்லாத கால்நடைத் துறை அமைச்சர் பதவி மட்டும் அவரிடம் தரப்பட்டது. இதனால், கடும் அதிருப்தியில் இருந்தார் ராதா. தனக்கு வேறு முக்கிய அமைச்சர் பதவி வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு வந்தார். எதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு தனக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் மூலமாக டெல்லி பி.ஜே.பி தலைவர் ஒருவரைப் பிடித்துள்ளார். தற்போது வி.வி.ஐ.பி ஆகவுள்ள அந்தப் பிரமுகர்தான் எடப்பாடிக்கு அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளார். அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி, 'அமைச்சர் பதவி இப்போது முடியாது. வேண்டுமானால், தமிழக கேபிள் நிறுவனத் தலைவர் பதவியை வேண்டுமானால் தருகிறோம்' என்று டெல்லிக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான், உடுமலைக்கு இந்தப் பதவி தரப்பட்டுள்ளது.

தமிழக கேபிள் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனின் நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் தமிழக கேபிள் நிறுவனத்திடம் இருந்த கஸ்டமர்கள் படிப்படியாகத் தனியார் செட்டப் பாக்ஸ் வழங்கும் நிறுவனங்களுக்கு மாறி வருகிறார்கள். மற்ற நிறுவனங்களின் செட்டப் பாக்ஸ் விலையைவிட அரசு கேபிள் சந்தா தொகை அதிகம் என்று பொதுமக்கள் முணுமுணுத்து வந்தனர். தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்து கஸ்டமர்களுக்கு செட்டப் பாக்ஸ் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிதான் அவர்கள் வேறு தனியார் நிறுவன செட்டப் பாக்ஸ்களை நாடிச் சென்றதற்கு முக்கியக் காரணமாம்.

அமைச்சர் மணிகண்டன்
அமைச்சர் மணிகண்டன்

சுமார் 70 லட்சம் செட்டப் பாக்ஸ் தொடர்பான டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்களில் அமைச்சர் மணிகண்டன் சிபாரிசு செய்தது ஒரு கம்பெனிக்கு. ஆனால், முதல்வர் எடப்பாடி தரப்பினர் தலையிட்டதால், அந்த டெண்டர் வேறொரு கம்பெனிக்குத் தரப்பட்டது. இந்த கம்பெனி விஷயத்தில் அதிகாரிகளும்கூட அதிருப்தியில் இருந்தார்கள். இந்த கம்பெனியின் பின்னணியைப் புகார்க் கடிதமாக அமைச்சர் மணிகண்டன் எழுதி அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் கொடுத்தார்.

இரண்டு வருடங்களுக்குள் சுமார் 35 லட்சம் செட்டப் பாக்ஸ்களைத்தான் அந்த கம்பெனி வழங்கியதாம். குறிப்பிட்ட கெடுவிற்குள் முழுமையாக செட்டப் பாக்ஸ்களை சப்ளை செய்யமுடியாத அந்த கம்பெனியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. செட்டப் பாக்ஸ் டெண்டர் குளறுபடியால், கேபிள் நிறுவனத்தின் கடன் தொகை எகிறியது. ஏற்கெனவே இருந்த கடன் தொகை சுமார் 600 கோடி ரூபாய். அதில், 200 கோடி ரூபாய் வரை தற்போது நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசும் நிதியுதவி செய்ய 'நோ' சொல்லிவிட்டதாம். இந்தச் சிக்கலான நிதி நெருக்கடியை, உடுமலை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால், கேபிள் நிறுவனத்தை வெற்றிப்பாதையில் கொண்டுசெல்லும் அத்தனை சூட்சுமங்களையும் தெரிந்து வைத்திருக்கும் உடுமலை, விரைவில் சாதுர்யமாகச் செயல்பட்டு அமைச்சர் மணிகண்டன் வசம் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையைத் தன்வசம் ஆக்குவார் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். கேபிள் டிவி, தங்கு தடையின்றி நடக்குமா அல்லது மீண்டும் தடங்கலுக்கு வருந்துமா என்பதற்கு காலம்தான் பதில் தரவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு