Published:Updated:

“வதம் செய்வேன்!” - புது ஆயுதம் எடுக்கும் சசி...

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

பன்னீர் மெளனம் பின்னணி என்ன?

“வதம் செய்வேன்!” - புது ஆயுதம் எடுக்கும் சசி...

பன்னீர் மெளனம் பின்னணி என்ன?

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

சென்னையில் திடீர் மழை ஓய்ந்த பிப்ரவரி 8-ம் தேதி பின்னிரவுக்கு மேல் தனது நான்கு வருட சிறைவாசத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார் சசிகலா. ஒரு முறை அ.தி.மு.க கொடியைக் கட்டியதற்கே போலீஸ் டி.ஜி.பி வரை புகார் மனு அளித்த அமைச்சர்கள், அந்தக் கொடியுடன் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு 350 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆதரவாளர்கள் புடைசூழ சசிகலா பயணமானவுடன் பதற்றத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். அன்றைய தினம் மட்டுமல்ல... இந்தப் பதற்றம் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்திலேயே தொற்றிக்கொண்டது. வழக்கமான ஆலோசனைக் கூட்டம்போல, அந்தக் கூட்டம் அமையவில்லை... அதுவே ஒருவித ரெட் அலர்ட்டைக் கட்சிக்குள் ஏற்படுத்தியிருக்கிறது!

“வதம் செய்வேன்!” -  புது ஆயுதம் எடுக்கும் சசி...

அம்மா மேல் சத்தியம்!

பிப்ரவரி 6-ம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில், எமோஷனலான மனநிலையில்தான் இருந்தார் முதல்வர் பழனிசாமி. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரின் உதடுகளிலும் மெளனம். விருப்ப மனுக்கள் பெறுவது, பூத் கமிட்டி பற்றிய ஆலோசனை என்று சொல்லப்பட்டாலும், சசிகலாவின் வருகை, அ.தி.மு.க-வின் மேல்மட்டம் வரை பலரையும் ஆட்டம்காணச் செய்திருந்தது. கோவையில் ஏற்கெனவே பல்வேறு கூட்டங்களுக்கு ஒப்புக்கொண்டதால் அமைச்சர் வேலுமணியும், மகளின் நாட்டியாஞ்சலி அரங்கேற்றத்தால் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், கொரோனா பாதிப்பிலிருந்து சமீபத்தில் மீண்ட அமைச்சர் காமராஜும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இவர்களைத் தவிர மற்ற அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், வழிகாட்டுதல்குழு உறுப்பினர்கள் என அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது அவர் குரல் தழுதழுத்துவிட்டது என்கிறார்கள். ‘‘நான்கு வருடங்களில் உங்களுக்கெல்லாம் எவ்வளவு சாதகமாக இந்த ஆட்சி இருந்தது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும். உங்கள் மாவட்டத்திலுள்ள நிர்வாகிகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கழகத்துக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள்’’ என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார் எடப்பாடி. இதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் நெஞ்சில் கைவைத்து, ‘அம்மா மேல சத்தியமா அ.தி.மு.க-வைவிட்டுப் போக மாட்டோம்’ என்று சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கிறார்கள்.

ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பழனிசாமி தரப்பிடம் இரண்டு தென்மாவட்ட அமைச்சர்கள், ‘‘நீங்களே கூடிப் பேசிக்கறீங்க, நீங்களே முடிவு எடுத்துக்குறீங்க. பிறகு எதுக்காக எங்களை ஆலோசனைக் கூட்டத்துக்குக் கூப்பிடுறீங்க? கூட்டத்துல எங்களையும் பேசவிட்டாத்தானே ஒரு முடிவு கிடைக்கும்’’ என்று சற்று வேகமாகவே ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘‘எல்லோரும் பேசினால் குழப்பம்தான் வரும். தலைமை என்ன முடிவெடுக்குதோ, அதை நீங்க செயல்படுத்தினா போதும்’’ என்று பழனிசாமி தரப்பிலிருந்து பதில் வந்திருக்கிறது. இதனால், அந்த அமைச்சர்கள் இருவரும் அப்செட் என்கிறார்கள்.

“வதம் செய்வேன்!” -  புது ஆயுதம் எடுக்கும் சசி...

பன்னீர் மெளனம் பின்னணி என்ன?

இந்தக் கூட்டத்தில் கட்சி ஒற்றுமையை வலியுறுத்தியதோடு, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேச்சு சுருக்கமாக முடிந்துவிட்டதாம். இது பழனிசாமி தரப்புக்கு ஏமாற்றம் என்கிறார்கள். சசிகலாவுக்கு எதிராகப் பேட்டியளிக்கச் சொல்லி பன்னீருக்கு கடந்த ஒரு வாரமாக பழனிசாமி தரப்பு நெருக்குதல் கொடுத்திருக்கிறது. அதற்கு அவர் மசியாததால், அறிக்கை மட்டுமாவது விடச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கும் பன்னீர் உடன்படவில்லையாம். இரண்டு வாரங்களுக்கு முன்பாக, ‘நமது அம்மா’ நாளிதழிலில் வெளியிடுவதற்காக சசிகலாவைக் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை தயாராகி இருந்திருக்கிறது. அதையும் பிரசுரிக்கக் கூடாது என்று பன்னீர் தடுத்துவிட்டாராம்.

இதை முன்வைத்து சசிகலா ரூட்டுக்கு வண்டியைத் திருப்ப பன்னீர் தயாராகிவிட்டதாகவும், சில சிக்னல்களுக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் பன்னீருக்கு நெருக்கமானவர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய பன்னீர் தரப்பு அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “ஆட்சி அதிகாரத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், கட்சியில் இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமையோடு எடப்பாடிக்குச் சரிக்குச் சமமான அந்தஸ்தில் இருக்கிறார் பன்னீர். அதை சசிகலாவுக்காக விட்டுத்தர வேண்டுமென்றால், அந்த அதிகாரத்துக்கு இணையான, ‘முதல்வர் வேட்பாளர்’ என்ற இடத்தை எதிர்பார்க்கிறார். இதற்கான சிக்னல்தான், பிப்ரவரி 7-ம் தேதி பல்வேறு நாளேடுகளில் பன்னீர் வெளியிட்டுள்ள விளம்பரம்.

அதில், ‘விசுவாசத்தில் நிகழ்கால பரதன்’ என்று தன்னை மேற்கோள் காட்டியிருக்கிறார் பன்னீர். இதை முன்வைத்து “பன்னீர், பரதன் என்றால் வனவாசம் சென்ற ராமன் சசிகலாவா?” என்கிற கேள்வி கட்சிக்குள் பலருக்கும் முளைத்துள்ளது. மேலும் எடப்பாடி, கடுமையாக சசிகலாவை எதிர்த்துவிட்டார்; ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குக்கூட சசியை அனுமதிக்கவில்லை. இதனால், சசிகலாவுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ், தான் மட்டுமே. அதனால், முதல்வர் வேட்பாளர் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என்பது பன்னீரின் நம்பிக்கை. இதுவரை பன்னீரின் டிமாண்டுகளுக்கு சசிகலா தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. தவிர, தனது முடிவுக்கு டெல்லி மேலிடத்தின் சம்மதத்தையும் எதிர்பார்க்கிறார் பன்னீர். அப்போதுதான், எதிர்காலத்தில் எது நடந்தாலும் டெல்லியைக் காட்டி பஞ்சாயத்து பேச முடியும் என்பது பன்னீரின் கணக்கு. டெல்லி மற்றும் சசிகலா இரு தரப்பிலிருந்தும் சிக்னல் கிடைத்துவிட்டால் பன்னீரின் மெளனம் உடையும்” என்றனர்.

இதற்கிடையே பிப்ரவரி 7-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், “கடைசிவரை ஓ.பி.எஸ் உங்களுடன்தான் இருப்பார் என்று நம்புகிறீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயக்குமார், “அவர் எங்க கட்சி ஒருங்கிணைப்பாளர்... அவரைப் பத்தி நீங்க எப்படி இந்த மாதிரி கேள்வி கேட்கலாம்?” என்று கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜெயக்குமாரோ மழுப்பலாக, “அவர் எங்களுடன்தான் இருக்கிறார். சசிகலாவை ஒதுக்கிவைக்கும் முதல்வர் கருத்தில் அவருக்கு உடன்பாடு இருக்கிறது” என்றதுடன் எழுந்து சென்றுவிட்டார். “ஜெயலலிதா உயிருடன் இருந்து, அவரைப் பற்றி இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்தால், ஜெயக்குமார் இப்படித்தான் டீல் செய்திருப்பாரா? பன்னீரைப் பற்றிய புகைச்சல் கட்சிக்குள் இருப்பதால்தான் ஜெயக்குமாரிடமிருந்து இப்படியொரு பதில் வந்திருக்கிறது” என்கிறார்கள் இதை உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள்.

“வதம் செய்வேன்!” -  புது ஆயுதம் எடுக்கும் சசி...

வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க!

நடக்கும் அனைத்தையும் மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது டெல்லி. சிறிதாக ஒரு சம்பவம் நடந்தாலே, அதை ஊதிப் பெரிதாக்கி, சமூக வலைதளங்களில் வைரலாக்கும் பா.ஜ.க நிர்வாகிகள்கூட சசிகலா வருகை பற்றி வாய் திறக்கவில்லை. இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், “வாலியையும் சுக்ரீவனையும் மோதவிட்டு, இறுதியில் வாலியை மறைந்திருந்து கொல்லும் ராமன் கதாபாத்திரமாக வில்லேந்தி நிற்கிறது டெல்லி. சசிகலா - எடப்பாடி மோதல் விவகாரத்தில் யார் வாலி, யார் சுக்ரீவன் என்று டெல்லிக்கே புரியாததால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அம்புடன் நிற்கிறார்கள். தவிர, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிடுவதால் தங்களுக்கு என்ன லாபம் என்கிற கணக்கும் பா.ஜ.க தலைமையிடம் ஓடுகிறது. சில வாரங்களில் சசிகலா பக்கம் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் அணிவகுத்தால் அம்பு எடப்பாடி பக்கம் பாயும். இதுவே எதிர்வினையாக மாறினால் அம்பு சசிகலாவுக்குக் குறிவைக்கப்படும். இதனால்தான், டெல்லி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார்.

பா.ஜ.க-வின் காத்திருப்பு, பன்னீரின் மெளனம், எடப்பாடி வாங்கிய சத்தியம்... இதற்கெல்லாம் விடைசொல்லும்விதமாக விடிந்தது பிப்ரவரி 8-ம் தேதி. பெங்களூரில், தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து அன்றைய தினம் காலை 7:25 மணிக்குக் கிளம்பினார் சசிகலா. முதல் நாள் இரவு அவரிடம், “உங்க கார்ல கட்சிக் கொடியைக் கட்டக் கூடாதுனு உத்தரவு போட்டிருக்காங்கம்மா” என்று சொல்லியிருக்கிறார்கள் சசியின் உறவுகள். அப்போதுதான் இளவரசி, சுதாகரன் தொடர்புடைய சென்னை மாவட்ட சொத்துகளை தமிழக அரசு கையகப்படுத்திய விஷயமும் அவருக்குச் சொல்லப்பட்டது. உஷ்ணமான சசிகலா, “அந்த அளவுக்குப் போயிட்டாங்களா? என் கார்லதானே கட்சிக் கொடி கட்டக் கூடாதுனு சொல்லியிருக்காங்க. அதுவும் தமிழ்நாட்டுக்குள்ளதானே... நீங்க கட்டுங்கப்பா, பார்த்துக்கலாம்” என்று ஆவேசமாகிவிட்டாராம். காலையில் சசிகலா புறப்பட்டவுடன், அவரது காரில் அ.தி.மு.க கொடி இருப்பதைப் பார்த்து அமைச்சர்கள் தரப்பு வெலவெலத்துவிட்டது. உடனடியாக ஓசூர் எல்லையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது.

“வதம் செய்வேன்!” -  புது ஆயுதம் எடுக்கும் சசி...

“வதம் செய்வேன்!”

ஆவேசம் தணியாமலேயே பயணத்தைத் தொடங்கினார் சசிகலா. தமிழக - கர்நாடக எல்லையான ஜூஜூவாடி அருகே வந்தபோது, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக அ.தி.மு.க துணைச் செயலாளர் தட்சணாமூர்த்தியின் காருக்கு மாறினார் சசிகலா. இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை. இது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க வடக்கு மண்டல மூத்த நிர்வாகி ஒருவர், “சசிகலாவின் காரிலிருந்து கொடியைக் கழற்றினால் பிரச்னை வெடிக்கும். இதைவைத்தே சசிகலா மீது ஏதேனும் வழக்கைப் பதிவுசெய்து கைது செய்யலாம் என்று காத்திருந்தது எடப்பாடி அரசு. அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் காரை மாற்றி ராஜதந்திரமாக நடந்துகொண்டார் சசிகலா. மேலும், சசிகலாவின் காரிலிருந்துதானே அ.தி.மு.க கொடியைக் கழற்ற முடியும்? அ.தி.மு.க உறுப்பினரின் காரிலிருந்து கட்சிக்கொடியைக் கழற்ற முடியாதே... இதுவும் சசிகலாவின் ஐடியாதான். பயணத்தின் இடையே, ஓசூரிலுள்ள முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார் சசிகலா. அங்கு அவருக்கு ஜீவிதா என்கிற பெண்மணி அ.தி.மு.க சால்வையை அணிவித்தார். அடுத்து, கிருஷ்ணகிரி அருகே மோரணபள்ளியிலுள்ள மஹா ப்ரத்யங்கரா தேவி கோயிலுக்கு சசிகலா சென்றபோது ஒரு சம்பவம் நடந்தது.

துரோகிகளையும் எதிரிகளையும் வதம் செய்யும் ப்ரத்யங்கரா தேவியிடம் மனமுருகி வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. கோயிலில் சில நிமிடங்கள் அமர்ந்து மனமுருகி ப்ரத்யங்கரா தேவியிடம் வேண்டிக்கொண்ட சசிகலா கிளம்பும் தறுவாயில் தொண்டர் ஒருவர் வந்தார். “அம்மா, துரோகிங்களை நீங்க வதம் செய்யணும்மா’ என்று உணர்ச்சிப்பெருக்கில் பொங்கினார் அந்தத் தொண்டர். வெறித்துப் பார்த்த சசிகலா, ‘நிச்சயமா வதம் செய்வேன்ப்பா’ என்று கூறவும், அருகிலிருந்த டாக்டர் வெங்கடேஷ், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் உணர்ச்சி மேலிட்டது. சசிகலாவின் அதிரடி இனிமேல்தான் ஆரம்பமாகப்போகிறது” என்றார் ஆவேசமாக!

இதைத் தொடர்ந்து வாணியம்பாடி அருகே தொண்டர்களிடையே பேசிய சசிகலா, “தீவிர அரசியல் ஈடுபடுவேன். அடக்குமுறைக்கு என்றுமே அடிபணிய மாட்டேன். அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். மிக விரைவில் மக்களை நேரில் சந்திப்பேன். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இருந்து, வரும் தேர்தலில் பொது எதிரியை வீழ்த்த வேண்டும்” என்றார்.

இப்படியொரு பெரிய கூட்டத்தைக் கூட்டி, மாஸ் காட்டினாலும், சசிகலாவை நம்பி அவர் பக்கம் செல்ல அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் தயங்குகிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய தென்மாவட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், “சசிகலாவை நாங்கள் இப்போது ஆதரித்துவிடலாம். அவர் கையில் அதிகாரம் சென்றுவிடும். ஆனால், நாளைக்கே அவருடைய உறவுகள் அவரைச் சுற்றி அகழி அமைத்து விடுவார்கள். மீண்டும் உறவுகள் மூலமே நாங்கள் சசிகலாவைக் காண முடியும். ஆனால், எடப்பாடியை ஒரு சாதாரண கட்சி நிர்வாகியோ அல்லது எம்.எல்.ஏ-வோகூட எளிதாக அணுக முடிகிறது. தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே சசிகலா பக்கம் நிர்வாகிகள் வருவார்கள்” என்றார்.

“வதம் செய்வேன்!” -  புது ஆயுதம் எடுக்கும் சசி...

சசிகலாவின் புது ஆயுதம்!

அந்த எம்.எல்.ஏ சொல்வது உண்மை என்பது போலத்தான் பெங்களூரில் சசிகலா தங்கியிருந்தபோது சில காட்சிகள் அரங்கேறின. ரிசார்ட்டில் டாக்டர் வெங்கடேஷுக்கும் தினகரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோபத்தில்தான், தான் புறப்படும்போது தினகரனை அழைத்து, ‘நீ தனியாக வா. என் காரில் வெங்கடேஷ் மட்டும் வரட்டும்’ என்று சசிகலா சொல்லிவிட்டாராம். அதேபோல இளவரசி, விவேக் இருவரையும் அதிகாலை

5 மணிக்கே மற்றொரு காரில் சென்னைக்குக் கிளம்பச் சொல்லிவிட்டார் சசிகலா. சசிகலா உறவுகளெல்லாம் பெங்களூரில் முகாமிட்ட நேரத்தில், திவாகரன் மட்டும் மன்னார்குடியிலேயே இருந்திருக்கிறார். திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சசிகலாவைக் காண பெங்களூரு சென்றபோது அவரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லையாம். “சசிகலா சென்னை திரும்பிய பிறகு குடும்ப உறவுகளைச் சரிக்கட்ட அவர் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

“வதம் செய்வேன்!” -  புது ஆயுதம் எடுக்கும் சசி...

உறவுகளை ஒருபக்கம் சரிக்கட்டிவிட்டு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆயுதமாகக் கையிலெடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கவும் சசிகலா தயாராகிவிட்டார் என்கிறார்கள். மற்றொருபுறம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகளை தி.நகர் வீட்டுக்குப் படையெடுக்கவைக்கவும் சசி தரப்பு மும்முரமாகிவருகிறது. எதிர்முனையில், சசிகலா பக்கம் யாரும் அணி தாவிவிடக் கூடாது என்பதற்காக, அவருக்கு வாகனம் அளித்து உதவிய அ.தி.மு.க நிர்வாகிகள் ஏழு பேரை கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறது அ.தி.மு.க தலைமை.

பிப்ரவரி 14, 2017-ல் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதியில் ஆவேசமாக ஒரு சபதத்தை எடுத்தார் சசிகலா. இப்போது, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ப்ரத்யங்கரா தேவி முன்னிலையில் மற்றொரு சபதமெடுத்திருக்கிறார். சசிகலா, தனது எதிரிகளையும் துரோகிகளையும் வதம் செய்வாரா என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism