Published:Updated:

பழைய ஓய்வூதியத் திட்டம்... என்ன தான் பிரச்னை?

அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஆலோசனை எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இனி, அரசு ஊழியர் அமைப்புகள் என்ன செய்யப்போகின்றன?

பழைய ஓய்வூதியத் திட்டம்... என்ன தான் பிரச்னை?

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஆலோசனை எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இனி, அரசு ஊழியர் அமைப்புகள் என்ன செய்யப்போகின்றன?

Published:Updated:
அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கான போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவருகிறார்கள். அதை உணர்ந்துதான், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன.

ஜெயலலிதா
ஜெயலலிதா

பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. அதனால், அ.தி.மு.க அரசு மீது அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வும் அதே வாக்குறுதியை வழங்கியது. தி.மு.க-வும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை தற்போது வரை நிறைவேற்றவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவரப்போவதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன. இவை இரண்டு காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருக்கும் இமாச்சலப்பிரதேசத்திலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. அங்கு, தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இதை முக்கிய வாக்குறுதியாக அறிவித்தார். ஆனால், எப்போது, எப்படி இதை அமல்படுத்தப்போகிறார்கள் என்பதை அரசியல் ஊழியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தி.மு.க அரசைப் பொறுத்தவரையில், தனது வாக்குறுதியை அது இன்னும் நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்ல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அதனால், தமிழக அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பக்வத் கரத் எழுத்து மூலமாகப் பதிலளித்திருக்கிறார். அதில், ‘ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அவற்றில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகள், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிதியைத் திருப்பித் தருமாறு ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டுள்ளன. ஆனால், அந்த நிதியைத் திருப்பித் தர முடியாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஆலோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று பக்வத் கரத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசனிடம் பேசினோம்.

“பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்குப் பிறகு குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியமும் பணிக்கொடை போன்ற பயன்களும் அளிக்கப்பட்டன. 2004-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்தப் பயன்கள் இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஆனால், அந்தப் பொறுப்பை அரசுகள் தட்டிக்கழிப்பது போல நடந்துகொள்வது ஏற்கத்தக்கது அல்ல.

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தது. இது தொடர்பாக, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட எந்தக் கருத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை தி.மு.க அரசு மீண்டும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால், நாங்கள் போராட்டத்தில் இறங்கத் தயங்க மாட்டோம்” என்றார்.