Published:Updated:

இந்திய - சீன ராணுவ மோதல்... விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு... ஒன்றுசேரும் எதிர்க்கட்சிகள்!

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச்சின்னம்

அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய - சீன எல்லைப்பகுதியில் நிகழ்ந்த ராணுவ மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. அதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்திய - சீன ராணுவ மோதல்... விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு... ஒன்றுசேரும் எதிர்க்கட்சிகள்!

அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய - சீன எல்லைப்பகுதியில் நிகழ்ந்த ராணுவ மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. அதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Published:Updated:
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச்சின்னம்

அருணாச்சலப் பிரதேச எல்லையில், இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றபோது, இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. டிசம்பர் 9-ம் தேதி நடந்ததாகச் சொல்லப்படும் அந்தச் சம்பவம் குறித்த செய்தி மூன்று நாள்களுக்குப் பிறகுதான் வெளியே தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இல்லை.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதனால், நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13-ம் தேதியன்று கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட  எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளிநடப்பு செய்தனர்.

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக இருந்துவருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசம், லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று சீனா உரிமை கோரிவருகிறது. இந்த நிலையில்தான், 2020, ஜூன் 15-ம் தேதி,  கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது.

அதில், 20 இந்திய வீரர்கள்  கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 38 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், தங்கள் தரப்பில் நான்கு பேர் மட்டும் உயிரிழந்ததாக சீனா கூறியது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்திய - சீன எல்லை
இந்திய - சீன எல்லை

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்துக்குப் பிறகு, தற்போது அருணாசலப்பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றிருக்கிறது. அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் இருக்கும் தவாங் செக்டார் யாங்ட்ஸி பகுதியில் டிசம்பர் 9-ம் தேதி இரவு இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து எந்தத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. ஒரு நாளிதழில் செய்தி வெளியான பிறகுதான், இப்படியொரு மோதல் எல்லையில் நடந்திருக்கிறது என்ற உண்மை வெளியுலகுக்கு தெரியவந்தது.

அதன் பிறகுதான், இந்தச் சம்பவம் குறித்து இந்திய ராணுவம் டிசம்பர் 12-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். மோதலுக்குப் பிறகு, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி, தத்தமது நிலைகளுக்குத் திரும்பிவிட்டனர்’ என்று ராணுவம் கூறியது. அதையடுத்து, ‘நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையை மூன்று நாள்கள் வரை மோடி அரசு மூடிமறைத்தது ஏன்?’ என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்தன.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், சீன ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.  

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் டிசம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன. அதில், காங்கிரஸ் கட்சி, சி.பி.எம்., சி.பி.ஐ., தி.மு.க., ம.தி.மு.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம், ஆம் ஆத்மி உட்பட 17 கட்சிகள் கலந்துகொண்டன. எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

“எல்லை மோதலில் நம் வீரர்கள் கொல்லப்படவோ, படுகாயமடையவோ இல்லை. இரு தரப்பிலும் வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நம் ராணுவம் உரிய நேரத்தில் நடவடிக்கையில் இறங்கியது. அதனால், சீன ராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு திரும்பிச் சென்றனர். மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து டிசம்பர்  11-ம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, எல்லை ஊடுருவல் முயற்சிகளை சீன ராணுவம் மறுத்தது. அதே நேரம், எல்லையில் அமைதி நிலைநாட்டப்படும் என்று சீனா தரப்பு தெரிவித்தது” என்று ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

இந்திய - சீன எல்லை
இந்திய - சீன எல்லை

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆளும் தரப்பு மறுத்த காரணத்தால், காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் அவைகளிலிருந்து வெளிநடப்பு செய்தன. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் தீவிரமாக விவாதித்துவருகின்றன.