Published:Updated:

ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்... ஆளுநருக்கு அக்கறை இல்லாதது ஏன்?!

ஆளுநர் ரவி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அது காலாவதியாகிவிட்டது.

ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்... ஆளுநருக்கு அக்கறை இல்லாதது ஏன்?!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அது காலாவதியாகிவிட்டது.

Published:Updated:
ஆளுநர் ரவி

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 30-க்கும் மேற்பட்டோர், கடந்த 15 மாதங்களில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில், 2020-ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. அந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பலர் பணத்தை இழந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாலும், பலர் தற்கொலை செய்துகொள்வதாலும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவர தி.மு.க அரசு முடிவுசெய்தது.

தொடர்ந்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு கடந்த ஜூன் மாதம் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. அதன் அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

நீதிபதி சந்துரு
நீதிபதி சந்துரு

முன்னதாக கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கான கால அவகாசம் நவம்பர் 27-ம் தேதியுடன் முடிந்தது. எனினும் ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதான், இன்றைக்குப் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில், இந்த அவசரச் சட்டம் காலாவதியாகியிருக்கிறது. ஆளுநர் கையெழுத்திடாதது மட்டுமே இதற்கு முழுமுதற் காரணம் என்பதால், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநர் ரவியைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, எதிர்க்கட்சி உட்பட பல்வேறு கட்சிகளின் சம்மதத்துடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுவரும் நிலையிலும், அதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மசோதாவையும் ஆளுநர் கையெழுத்திடாதது சர்ச்சையாகியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை வரைக்கும் போகும் நிலையில், ஆளுநருக்கு ஏன் இதில் அக்கறை இல்லை என்ற கேள்வியைப் பலர் முன்வைக்கிறார்கள்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “இந்த மசோதா மட்டுமல்ல, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்ட மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் அரசுத் தரப்பில் பதில்கள் தரப்பட்டன. அதன் பிறகு, அதற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், அதைக் காலாவதியாக ஆவதற்கு ஆளுநர் விட்டிருக்கிறார். இதற்காக, ஆளுநர்மீது பழிபோடுகிறார்கள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறார். அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி, அதைக் காலாவதியாகச் செய்தவரே ஆளுநர்தானே... பிறகு, ஆளுநர் மீது பழிபோடாமல் யார் மீது பழிபோடுவார்கள்?

இந்த மசோதா குறித்து ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடியாக பதில்களை அனுப்பியது என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று ஆளுநரிடம் விளக்குவதற்குத் தயாராக இருந்தார். ஆனால், அவருக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை. பா.ஜ.க தலைவருக்கும், அ.தி.மு.க தலைவருக்கும் சந்திக்க நேரம் கொடுக்கும் ஆளுநர், ஆன்லைன் சூதாட்டம் போன்ற மக்களைப் பாதிக்கும் பிரச்னை தொடர்பான மசோதா குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன் என்று சொன்ன சட்ட அமைச்சருக்கு ஏன் நேரம் கொடுக்கவில்லை... அதற்கு என்ன காரணம்... அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும் என்பது ஆளுநருக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அதில் அவர் கையெழுத்து போடாததற்கு என்ன காரணம்... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மசோதாவில் அவர் கையெழுத்துப்போடவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் உயிரிழப்பதையும், பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்ற அக்கறை ஏன் அவருக்கு இல்லை... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்போது, அதில் கையெழுத்திடவேண்டியது ஆளுநரின் கடமை. அதை அவர் செய்யாதபோது, மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள்” என்கிறார் ப்ரியன்.

இந்த விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.