சேலம், அண்ணா பூங்கா பகுதியில் அமைந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவசிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா பூங்காவுக்கு வருகை தந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக உற்சாகமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் , தாரை தப்பட்டை எனப் பல்வேறு கிராமியக் கலைகளை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியபோது, ``நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க தயாராகிவருகிறது. இதில், கூட்டணி குறித்து முடிவுசெய்வது மத்தியில் இருப்பவர்களே தவிர, மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தொடர்வதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர்” என்றார். மேலும், ``அ.தி.மு.க விலிருந்து வெளியேறிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை” எனவும் தெரிவித்தார்.
``எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கியபோது பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார். அவரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார். அதேபோல் அ.தி.மு.க ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனையைத் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது, இறுதியில் தர்மமே வெல்லும்” என்றார்.