Published:Updated:

என்.எல்.சி போராட்டக் களத்தில் அரசியல் கட்சிகள் காட்டும் தீவிரம்... பின்னணி என்ன?

என்.எல்.சி நிறுவனம்

``என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக யாரோடு வேண்டுமானாலும் நாங்கள் இணைந்து போராடுவதற்குத் தயார். அது பாமக-வாக இருந்தாலும் சரி... நாங்கள் சாதியத்தைக் கடந்து மக்கள் நலனுக்காகப் போராடுகிறோம்.” - வேல்முருகன்

என்.எல்.சி போராட்டக் களத்தில் அரசியல் கட்சிகள் காட்டும் தீவிரம்... பின்னணி என்ன?

``என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக யாரோடு வேண்டுமானாலும் நாங்கள் இணைந்து போராடுவதற்குத் தயார். அது பாமக-வாக இருந்தாலும் சரி... நாங்கள் சாதியத்தைக் கடந்து மக்கள் நலனுக்காகப் போராடுகிறோம்.” - வேல்முருகன்

Published:Updated:
என்.எல்.சி நிறுவனம்

இந்தியாவில் லாபம் ஈட்டும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று கடலூர் மாவட்ட 'நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி).’ ஆனால் இன்று பல உயிர்களை விழுங்கும் இடமாக மாறியிருக்கிறது. `கடந்த 2016-2020 ஆண்டுவரை கொதிகலன் வெடித்தது, கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்து, பாய்லர் வெடிப்பு காரணம் என 29 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த மரணங்களுக்குத் தனிமனித கவனக்குறைவு காரணம் என அலட்சிய பதில்களை உதிர்க்கிறார்கள்’ என்கிறார்கள் மக்கள்.

வேறு எந்த அனல்மின் நிலையத்திலும் ஏற்படாத விபத்துகள் நடப்பது நிர்வாகச் சீர்கேட்டை வெளிப்படுத்துவதாகவும், அதை விசாரிக்க தமிழக அரசு தனி ஆணையம் அமைக்க வேண்டுமெனவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அமைப்புகள், விவசாயிகள் ஒருபக்கம் இதை எதிர்த்து போராடும் அதே சூழலில், சில அரசியல் கட்சிகளின் முழு ஃபோகஸ் நெய்வேலிப் பக்கம் திரும்பியிருக்கிறது. இரண்டு தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கிற களம் என்பதால் யார் முந்துவது என்பதும் பெரும் போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது.  

என்.எல்.சி விபத்து
என்.எல்.சி விபத்து

கூட்டணிக் கட்சிகளின் மாபெரும் பேரணி!

என்.எல்.சி விரிவாக்கத்துக்குக் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி என 17 கோரிக்கைகளை முன்வைத்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பாக நெய்வேலியில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை ஏற்று நடத்தினார். இதில் கூட்டணிக் கட்சி சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜாவாஹிருல்லா, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு ஆகியோர் கலந்துகொண்டு என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.

என்.எல்.சி பேரணி
என்.எல்.சி பேரணி
ட்விட்டர்

அப்போது பேசிய சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இங்கு வாழும் மக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கேட்கும் உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், இது குறித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``என்.எல்.சி-க்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான நிவாரணத் தொகை, வேலைவாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவை சரியாக வழங்கப்பட வேண்டும். சிலர், `நிறுவனம் வேண்டாம்’ என்கிறார்கள். வேண்டாமென்றால், அதானிக்கு விற்கப்படும். நிறுவனத்தை மூடப் போராட்டம் தேவையில்லை. நாங்கள் அரசியல் காரணத்துக்காக இந்தக் கூட்டணியை ஏற்படுத்தவில்லை. நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம்” என பாமக-வின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்தார்.

என்.எல்.சி போராட்டம்
என்.எல்.சி போராட்டம்
ட்விட்டர்

`நாமதான் போராடினோம்!

போராட்டக் களத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ``இதைச்  சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். என்.எல்.சி-க்குப் பூட்டுப் போடாமல் நாங்கள் ஓய மாட்டோம். இந்தப் பகுதியிலுள்ள மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உங்களுக்குத் தோள் கொடுப்பார்கள். என்றும் மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்” என்றார்.

மேலும், நிலக்கரியைவிட தரம் குறைவான லிக்னைட்டை எடுக்க 25,000 ஏக்கர் விளைநிலங்களைப் பிடுங்க முயற்சி நடக்கிறது. விரைவில் 'A' எனத் தொடங்கும் தனியார் கைக்கு என்.எல்.சி நிறுவனம் செல்வதைச் சுட்டிக்காட்டிப் பேசியவர், "நாம்தான் தடுப்பதற்குப் போராடிவருகிறோம். இப்பதான் சில பேர் நாங்கதான் என வருகிறார்கள்” என மறைமுகமான விமர்சனத்தை முன்வைத்தார். இவ்வாறு மற்ற கட்சிகளை விமர்சிப்பதற்கும், இந்தப் பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கும் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

`பா.ம.க-வுடன் இணைந்து போராட தயார்!’

இது தொடர்பாகப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ``பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியதிலிருந்து என்.எல்.சி வேலைவாய்ப்பு குறித்தும், ஒப்பந்தத் தொழிலாளர் குறித்தும் போராட்ட நடத்தும் குழுத் தலைவனாக இருந்தவன் நான். அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பும் மக்களுக்காக 30 ஆண்டுகளாகப் போராடிவருகிறேன். அதனால், நிலம் கொடுத்த 13,000 மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  தற்போது நெய்வேலியில் எங்கள் தலைமையில் வெற்றிபெற்ற குழுதான் தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருக்கிறது.

எனவே, பாமக சொல்வது பற்றி எனக்குக் கவலை இல்லை. அதே நேரம் அவர்கள் போராடுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபனையும் இல்லை.  மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக யாரோடு வேண்டுமானாலும் நாங்கள் இணைந்து போராட தயார். அது பாமக-வாக இருந்தாலும் சரி. நாங்கள் சாதியத்தைக் கடந்து மக்கள் நலனுக்காகப் போராடுகிறோம். இது உயர்மட்ட அளவில் சாத்தியமாவது கடினம். ஆனால், கீழ்மட்ட அளவில் பாமக-வைச் சேர்ந்தவர்களும் எங்களுடன் இணைந்துதான் பாணியாற்றுகிறார்கள்" என்றார்.

வேல்முருகன்
வேல்முருகன்

இது தொடர்பாக பாமக-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர் பேசியபோது, "நாங்கள் மக்களின் நலனுக்குத்தான் குரல் கொடுக்கிறோம். வரும் ஜனவரி 7, 8 தேதிகளில் தலைவர் நடைப்பயணமாகச் சென்று மக்களின் பிரச்னைகளைக் கருத்து கேட்கவிருக்கிறார். நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம். நீங்கள் சொல்லும் அந்தக் கட்சியுடன் ஒப்பீட்டு அளவில்கூட எங்களைப் பார்க்க வேண்டாம். எங்கள் உயரம் எது என எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என முடித்துக்கொண்டார்.

போராட்டத்தின் அரசியல் பின்னணி!

இது தொடர்பாகப் பேசிய அரசியல் விமர்சகர் பிரியன், "திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி இவையனைத்தும் கடலூர் மாவட்டத்தில் முக்கியமான தொகுதிகள். இதில் ஒவ்வொரு தொகுதியிலும் 30% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தன்  தொகுதிகளில் பாமகவால் வெற்றி வாகை சூட முடியவில்லை. ஆட்சியாளர்கள் நல்லது செய்தால் பாராட்டுவது, தவறான நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது, மதுவிலக்கு போராட்டம், மக்கள் நலனுக்குக் குரல் கொடுப்பது என பாமக கட்சியின் செயல்பாடுகள் பாசிட்டிவ்வாக இருந்தாலும், சாதிக் கட்சி என்னும் சாயல் நீங்கவில்லை.

ப்ரியன்
ப்ரியன்

அதனால், பாமக தனித்து நிற்கும்போது இடைநிலைச் சாதிகளிடம் பெற முடியாத வாக்குகளை, மற்ற கூட்டணிக் கட்சிகள் எளிதல் பெற்றுவிடுகிறது. 2011-ம் ஆண்டு பாமக-விலிருந்து விலகிய வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை உருவாக்கிக் களமாடத் தொடங்கிய பின்னர் கடலூரில் பாமக-வின் செல்வாக்கு சிறுகச் சிறுக சரிவைக் கண்டது. ஒரு காலகட்டத்தில் நெய்வேலி நிலக்கரி தொழிற்சங்கத்தில் டாப்பில் இருந்த பா.ம.க., மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த இடத்தை த.வா.க தொழிற்சங்கம் கைப்பற்றியது" என்றார்.

என்.எல்.சி தீ விபத்து
என்.எல்.சி தீ விபத்து

``இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு எதிராக பாமக-வும், மக்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற நிலையில் அவர்களுக்காகப் போராட்டங்களை நடத்துவதாக திமுக கூட்டணி கட்சிகளும் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கும் பாமக-வுக்கு ஒரு சமூக ஆதிக்கம் செலுத்தும் இடங்களிலும் வெற்றிப் பெற அனைத்து சாதியினர் வாக்கு முக்கியம். இதை உறுதி செய்யவே தனித்து நின்று போராட்டத்தை நடத்துகிறார்கள். ஆனால், தமிழக வாழ்வுரிமை கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து செயல்பட திட்டமிட்டு இருப்பதால் ஒன்றிணைந்து செயல்படுகிறது” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.