Published:Updated:

ஜெ நினைவு இல்ல சர்ச்சை... எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் விஷயத்தில் என்ன நடந்தது தெரியுமா?

வேதா இல்லம்

மதுக்கடை திறப்பு எதிர்ப்பை திசை திருப்ப ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறதா எடப்பாடி அரசு? எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திலிருந்து ஏன் பாடம் கற்கவில்லை? எம்.ஜி.ஆர் இல்லம் சொல்லும் பாடம் என்ன? அலசுகிறது கட்டுரை!

Published:Updated:

ஜெ நினைவு இல்ல சர்ச்சை... எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் விஷயத்தில் என்ன நடந்தது தெரியுமா?

மதுக்கடை திறப்பு எதிர்ப்பை திசை திருப்ப ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறதா எடப்பாடி அரசு? எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திலிருந்து ஏன் பாடம் கற்கவில்லை? எம்.ஜி.ஆர் இல்லம் சொல்லும் பாடம் என்ன? அலசுகிறது கட்டுரை!

வேதா இல்லம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணியை கொரோனா காலத்திலும் தீவிரப்படுத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

ஜெயலலிதா
ஜெயலலிதா

`மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும்' எனக் கடந்த 2017 ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார் முதல்வர் எடப்பாடி. 10 கிரவுண்ட் 0322 சதுர அடி நிலத்தைக் கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைக்க சென்னை கலெக்டருக்கு நிர்வாக அனுமதியை வழங்குவதற்கான அரசாணையை 2017 அக்டோபர் 5-ம் தேதி வெளியிட்டார்கள். நில எடுப்புக்கான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது அரசு.

இந்த நிலையில்தான், நில எடுப்பிற்கான அறிவிப்பைச் சென்னை கலெக்டர் இன்று வெளியிட்டிருக்கிறார். `பொது நோக்கத்துக்காக ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்படுகிறது. நில எடுப்பால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை. யாரையும் அப்புறப்படுத்தவோ, மறுகுடியமர்த்தவோ அவசியம் ஏற்படவில்லை. வேதா நிலையத்தில் 3 அடுக்கு கட்டடம், 2 மா மரங்கள், ஒரு பலா மரம், 5 தென்னை மரங்கள் மற்றும் 5 வாழை மரங்கள் உள்ளன' எனத் தெரிவித்திருக்கிறது சென்னை கலெக்டர் அலுவலகம்.

தீபா
தீபா

அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டபோது வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கும் அரசின் முடிவுக்கு போயஸ் கார்டன் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். `24,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஜெயலலிதாவின் வீட்டுக்கு 32.09 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, கையகப்படுத்தப்படும்' என அரசு சொன்னது. அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. அப்படி வழக்கு போட்டவர்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அண்ணன் மகன் தீபக்கும் முக்கியமானவர்கள்.

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற, வருமான வரித் துறையின் பதிலை உயர் நீதிமன்றம் கேட்டது. இந்த வழக்கில் 2019 ஜனவரியில் அதிர்ச்சி தகவலை நீதிமன்றத்தில் வெளியிட்டது வருமானவரித் துறை.

"10.13 கோடி சொத்து வரியும், 6.62 கோடி ரூபாய் வருமான வரியும் நிலுவையில் இருப்பதால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், ஹைதராபாத்தில் உள்ள வீடு, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள கடை உட்பட 4 சொத்துகள் 2007-ம் ஆண்டே முடக்கியிருக்கிறோம். இந்த வரி பாக்கியைச் செலுத்திவிட்டால் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபனை இல்லை" என வருமானவரித் துறை பதில் அளித்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதன்பிறகு வேதா இல்லத்தைக் கையகப்படுத்துவதற்காகத் தீவிர நடவடிக்கையை 2019 ஜூன் மாதம் மேற்கொண்டது அரசு. இதற்காகப் பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டது. சென்னை கிண்டி மண்டல வருவாய் அலுவலர் சார்பில் வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில், `வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதில் ஆட்சேபம் இருந்தால் 60 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என சொன்னது.

`சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வேதா இல்லத்தை வெறும் 35 கோடிக்கு அரசு வாங்குகிறது' என தீபாவும் தீபக்கும் நீதிமன்றத்தில் அரசின் மீது குற்றம் சாட்டினார்கள். இந்த வழக்கு 2019 ஜூலையில் விசாரணைக்கு வந்தபோது `மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? ஜெயலலிதாவின் புகழைப் பரப்ப பல வழிகள் இருக்கின்றன. தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் அமைச்சர்கள் பாடுகிறார்கள். கோடநாட்டில் ஜெயலலிதா தங்கினார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பியது உயர் நீதிமன்றம்.

வேதா இல்லம், போயஸ் கார்டன்
வேதா இல்லம், போயஸ் கார்டன்
File Photos

இதன் பிறகு வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார். `ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதே பொருத்தமான நடவடிக்கை. இதற்குச் சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை. வேதா இல்லத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் நினைவு இல்லம் அமைத்தால் அது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதாக அமையும். அதனால், பொதுமக்கள் உணர்வும் பாதிக்கப்படும்' எனச் சொன்னார் கலெக்டர்.

இப்படி தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ``ஜெயலலிதா வீடு விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும்' எனக் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் அறிவித்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு. இப்போது நினைவு இல்லம் ஆக்கும் பணிகள் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

போயஸ் கார்டன்
போயஸ் கார்டன்

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துகளை எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் நடந்தன. வழக்கில் சம்பந்தப்படாத ஜெயலலிதா சொத்துகளுக்கு சட்டப்படி வாரிசு என அறிவிக்கை கோரி தீபாவும் தீபக்கும் வழக்கு தொடர்ந்தார்கள்.

ஜெயலலிதா வீடு நினைவு இல்லம் ஆக்கினால் பொதுமக்கள் அதைப் பார்வையிட முடியும். போயஸ் கார்டன் நினைவு இல்லம் ஆக்கப்பட்ட பிறகு அது வெறுமனே வீடாக இருந்தால், பார்வையாளர்களுக்குப் பயன் இல்லை. அந்த இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்களைப் பார்வைக்காக வைக்க வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய உடைகள், கண்ணாடி, செருப்பு, கார், குடை, நாற்காலி, கட்டில், சாப்பாடு தட்டு, டம்ளர் என நிறைய பொருள்கள் அந்த இல்லத்தில் இடம்பெற வேண்டும். அரசிடம் இந்தப் பொருள்கள் எல்லாம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்

அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் நில எடுப்பு பற்றிய தகவல் மட்டுமே உள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு போயஸ் கார்டன் சில காலம் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு ஜெயலலிதாவின் பி.ஏ பூங்குன்றன் நிர்வகித்து வந்தார். இப்படியான சூழலில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்கள் அப்படியே போயஸ் கார்டனில் இருக்கிறதா?

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார் எம்.ஜி.ஆர். அவர் மறைவுக்குப் பிறகு அந்த அலுவலகம் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லம் ஆக்கப்பட்டது. அந்த நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆரின் சிலை, அவர் பயன்படுத்திய TMX 4777 பதிவு எண் கொண்ட அம்பாசிடர் கார், பரிசுப் பொருள்கள், எம்.ஜி.ஆர் படித்த புத்தகங்கள், பொருள்கள், உடற்பயிற்சி கருவிகள், எம்.ஆர்.ராதா சுட்ட பிறகு எம்.ஜி.ஆருக்கு போடப்பட்ட மாவுக் கட்டு என நிறைய பொருள்கள் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

``அலுவலகமாகப் பயன்படுத்திய வீடு என் மரணத்துக்குப் பிறகு நினைவு இல்லமாக மாறும். அதன் பராமரிப்பு செலவுக்காக எனக்குச் சொந்தமான ஆலந்தூர் மார்க்கெட் கட்டடங்களில் இருந்து பெறப்படும் வருமானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என எம்.ஜி.ஆர் உயில் எழுதி வைத்திருந்தார்.

அதன்படிதான் தியாகராயர் நகர் அலுவலகம் எம்.ஜி.ஆர் இல்லமாக மாறியது. அரசுக்குச் செலவு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த ஏற்பாட்டை எம்.ஜி.ஆர் செய்துவிட்டுப் போனார். அவருடைய அரசியல் வாரிசு எனச் சொல்லும் ஜெயலலிதாவுக்கு அதே பாணியில் நினைவு இல்லம் அமைக்கலாமே. அந்த எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் இன்று வரையில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அப்படி ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை ஜெயலலிதாவின் சொத்தில் கிடைக்கும் வருவாயை வைத்தே பராமரிக்க முடியும். அரசின் சார்பில் நினைவு இல்லம் அமைக்க வேண்டியதில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவருக்கு அரசின் சார்பில் நினைவு இல்லம் அமைப்பது தேவையில்லா சர்ச்சை உருவாக்கும்.

ஜெயலலிதா சமாதியில்  எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி
எம்.ஜி.ஆர் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைப் போல ஜெயலலிதா இல்லத்திலும் பொருள்களை வைக்க அரசால் முடியுமா? ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அவசர அவசரமாக அமைப்பது அப்பட்டமான அரசியல்தான்.

கொரோனா நடவடிக்கையைவிட வேகமாக இதில் அரசு செயல்பட்டிருப்பது ஏன்?

மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இன்று சென்னையைத் தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. 43 நாள்கள் இப்படித் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட வரலாறு இல்லை. அப்படியே நிரந்தமாக மூட வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனப் பல தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தும், அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் இன்று (மே 7) மதுக்கடைகளைத் திறக்கிறது அரசு. மதுக்கடைகள் திறப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் நிலையில், அதைத் திசை திருப்ப ஜெயலலிதா நினைவு இல்லத்தை அமைக்கும் ஃபைலை தூசி தட்டியிருக்கிறார்கள்.

டாஸ்மாக் கோவை
டாஸ்மாக் கோவை
`வேதா இல்லத்தைத் தவிர்த்து வேறு இடங்களில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டால் அது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதாக அமையும். அதனால், பொது மக்கள் உணர்வு பாதிக்கப்படும்' எனக் காரணம் சொல்கிறது அரசு. `டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது' எனச் சொல்லும் பொதுமக்கள் செவ்வாய் கிரகவாசிகள் அல்ல. அவர்களும் எடப்பாடி சொல்லும் அதே பொதுமக்கள்தான். அவர்களின் உணர்வுகளைப் பாதிக்கச் செய்துவிட்டு ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லத்தை எடப்பாடி அமைப்பது நகை முரண்.

43 நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுக் குடிப் பழக்கமே பலருக்கும் மறந்து போயிருக்கும் இந்தச் சூழலில், மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு நல்ல வாய்ப்பு. 2016 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனச் சொன்னார் ஜெயலலிதா. அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவருக்கு நினைவு இல்லம் அமைப்பது அக்மார்க் அரசியல் விளையாட்டு. `பொது நோக்கிற்காக வேதா இல்லம் நினைவிடமாக்கப்படுகிறது. நினைவு இல்லமாக மாற்றுவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என விளக்கம் கொடுக்கிறது எடப்பாடி ஆட்சி. மதுக்கடைகள் திறந்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதா முதல்வரே!

* அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

* அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் சார்பில் சிலை.

* ஒவ்வொரு வருடமும் ஜெயலலிதா பிறந்தநாளில் அரசின் சார்பில் லட்சக்கணக்கில் மரக்கன்று.

* பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசின் சார்பில் அனுசரிப்பு.

* சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்.

* ஜெயலலிதா சமாதியில் 50 கோடி ரூபாயில் நினைவு மண்டபம்.

* ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக அரிய நூல்கள் வெளியீடு.

இத்தனையும் செய்தது எடப்பாடி ஆட்சிதான். இன்னும் என்ன வேண்டும்?