Published:Updated:

பாபர் நுழையாத பாபர் மசூதி: அயோத்தியில் என்ன நடந்தது? பாகம் 1

அயோத்தி ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி

பாபர் மசூதி எப்படி இருக்கும் என்று உங்களுக்குச் சொல்வதற்கு முன்பு இந்தியாவின் மற்ற எந்த பகுதியிலும் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சில மசூதிகளின் பெயர்களைத் தங்களுக்கு நினைவுபடுத்தவேண்டியதாகி இருக்கிறது.

பாபர் நுழையாத பாபர் மசூதி: அயோத்தியில் என்ன நடந்தது? பாகம் 1

பாபர் மசூதி எப்படி இருக்கும் என்று உங்களுக்குச் சொல்வதற்கு முன்பு இந்தியாவின் மற்ற எந்த பகுதியிலும் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சில மசூதிகளின் பெயர்களைத் தங்களுக்கு நினைவுபடுத்தவேண்டியதாகி இருக்கிறது.

Published:Updated:
அயோத்தி ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி

சட்டத்துக்கு அஞ்சாத மக்கள் சாமிக்கு அஞ்சுவதைக் கண்டதும், அரசியல் மதங்களைக் கையிலெடுக்கத் தொடங்கியிருந்தது. மதங்களின் அடிப்படையில் உலகநாடுகளின் எல்லைக் கோடுகள் வரையப்பட்டதும் அப்படித்தான். கடவுளின் பெயரால் அரசியல் செய்யத் தொடங்கியதும் அரசியலுக்காகவே சில கடவுள்கள் தோற்றுவிக்கப்பட்டதும் அப்படித்தான் நிகழ்ந்தது. யூதர்களுக்கு எதிராகக் கிறிஸ்தவர்களுக்கு இருந்த வெறுப்பை ஹிட்லர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அரசியல். உலகின் ஒரே யூதப் பெரும்பான்மை தேசமான இஸ்ரேல் அங்கே சிறுபான்மையினருக்கு எதிரான நில அரசியலில் ஈடுபட்டிருப்பதும் மதத்தின் காரணத்தால்தான்.

பாபர் மசூதி
பாபர் மசூதி

மண்ரொட்டி சாப்பிடும் அளவுக்கான பட்டினிப் பஞ்சம் நிலவினாலும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான போர் நின்றபாடில்லை. இந்திய தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல. சர்ச்சையாகக் கிளைத்த சம்பவம்தான் இன்று தேசத்தின் ஆபத்தான அரசியலாகி இருக்கிறது. அடிப்படைவாத உணர்வுகளால் மூன்றடி நிலத்துக்காக தேசமே இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. தெருவில் காய்கறி விற்பவர்கள் தொடங்கி மளிகைக்கடை நடத்துபவர் வரை அனைவருக்கும் அயோத்தி பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்தான கருத்து இருக்கிறது. ராமர் பிறந்த இடம் என்பதற்கான தொல்லியல் சான்றுகளே இன்னும் நிருபிக்கப்படவில்லை என்று ஒரு தரப்பினர் விவாதிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் கட்டிடத்தைக் எழுப்பினார், ஆனால் அது மினாராகவோ, மசூதியாகவோ அல்லது தொழுகைக்காகவோ ஒரு காலத்திலும் அவரால் உபயோகிக்கப்படவில்லை என்று வேறொரு வாதத்தை முன்வைக்கின்றனர் வேறு சிலர். நாம் அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என விவாதிக்கப் போவதில்லை. ஏனென்றால், தற்போது அயோத்தியில் நிலம் யாருக்குச் சொந்தம் எனப் பேசத்தொடங்கினால், நாளை மதுராவிலும் வாரணாசியிலும் நிலம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழும். அஜ்மீரிலும் மத்தியப்பிரதேசத்தின் ஷிவ்பூரியிலும் நிலம் யாருக்குச் சொந்தம் என விவாதிக்க வேண்டியிருக்கும்.

பாபர் மசூதி
பாபர் மசூதி

மூன்றடி நிலத்துக்காக நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் துப்பாக்கி முனையில் பறிபோன சூழலில், இன்னும் பலரது உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் சூழலில் மனிதத்தை விட மதங்கள் பெரிதல்ல என நினைவூட்டுவதே பத்திரிகை அறம். உச்சநீதிமன்றத்தில் அயோத்தி நிலவிவகாரம் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் இந்த தருணத்தில் மதங்களை அரசியல் எப்படியாகக் கையிலெடுத்துக் கொள்ளத் தொடங்கியது என்பதை வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு மக்களின் முன்வைப்பது காலத்தின் தேவையாகிறது.

பாபருக்கே தெரியாத பாபர் மசூதி!

பாபர் மசூதி எப்படி இருக்கும் என்று உங்களுக்குச் சொல்வதற்கு முன்பு இந்தியாவின் மற்ற எந்த பகுதியிலும் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சில மசூதிகளின் பெயர்களைத் தங்களுக்கு நினைவுபடுத்தவேண்டியதாகி இருக்கிறது. மூன்று நுழைவுவளைவுகளைக் கொண்ட (Arches) மசூதிகளைக் கட்டும் வழக்கம் 15-ம் நூற்றாண்டிலும் 16-ம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும்தான் இருந்ததாக தொல்லியல் வரலாற்றுத்தகவல்கள் சொல்கின்றன. அதன்படி 1505-ல் எழுப்பபட்ட டெல்லி ஹௌஸ்காஸ் நிலு மஸ்ஜித் (மசூதி), டெல்லி மெஹ்ரௌலி மஸ்ஜித் , டெல்லி, ஷேக் சராய் மஸ்ஜித் ஆகியவை அரசர் லோதி காலகட்டத்தில் எழுப்பப்பட்டன. அதேபோல டெல்லி அப்சர்வாலி மஸ்ஜித், பாபர் காலத்தில் கட்டப்பட்டது. பாட்னாவில் 1540-ல் ஷேர்ஷாவும் அதுபோன்றதொரு மசூதியை எழுப்பினார். இப்படியான மூன்று நுழைவு வளைவு கொண்ட மசூதிகளில் கடைசியாக இடம்பெறுவது அக்பர் காலத்தில் கட்டப்பட்ட கயர்-உல்-மன்சில் எனத் தொல்லியல் தகவல்கள் சொல்கின்றன.

சரயூ நதிக்கரையின் வடகிழக்கில், முகடுபோன்ற பகுதியான ராம்கோட்டில்தான் பாபர் மசூதி அமைந்திருக்கிறது.

ஆஃப்கானிய முறை வடிவங்களான இந்த மசூதிகளின் வரிசையில்தான் அயோத்தியின் பாபர் மசூதியும் இடம்பெறுகிறது. சரயு நதிக்கரையின் வடகிழக்கில், முகடுபோன்ற பகுதியான ராம்கோட்டில்தான் பாபர் மசூதி அமைந்திருக்கிறது. மூன்று சதுரவடிவிலான கட்டடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒவ்வொரு சதுரத்தின் மேலும் ஒரு குவிமாடம் (Dome) எழுப்பப்பட்டிருக்கும். முக்கிய நுழைவு வளைவின் கூரையில் (Chhajja) இருக்கும் எட்டு பத்திகளைக் கொண்ட பெர்சிய எழுத்துருக்கள்தான் பாபருக்கு அந்த மசூதியை உரிமைக்குரியவாக்குகின்றன. எழுத்துரு ஆய்வாளர் மௌல்வி அஷ்ரப் ஹுசைன் இதனை மொழிபெயர்த்துள்ளார்.

வரி 1: நலம்பயக்கும் கருணையுள்ளம் கொண்ட அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின் பெயரால்...

வரி 2: தனக்கென எதையும் உரிமைகொள்ளாத விவேகன், பெரியவனின் பெயரால்... அவரது புகழாலும் அருளாலும் நிரம்பப்பெற்ற உலகின் அதிசிறந்தவரான முகமது நபியின் பெயரால்... இந்த உலகம் செழிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து நாடோடித் துறவியான பாபரின் புகழ் கொண்டாடப்படுகிறது.

வரி 3: பேரரசரின் (பாபர்) ஆளுமை வானம் வசப்பட்ட ஏழு காலநிலைகளின் அளவுக்கு உயர்ந்தது. அவரது அவையின் மிர்-பாக்கி, ஆலோசகராகவும் இந்தப் பகுதியின் ராஜாங்க நிர்வாகியாகவும் இருந்தார். மிர்-பாக்கி, கோட்டையை மீட்டுருவாக்கம் செய்து அங்கே மசூதியையும் எழுப்பினார். (kaz-in masjid va hisar hast-bani)

வரி 4: இறைவா! அவர் (பாபர்) தனது வளமும் வாழ்வும் ராஜாங்கமும் கிரீடமும் சூழ இந்த உலகில் நீடுழி வாழட்டும்.

இது எழுப்பப்பட்ட புனித காலம் 935/1528-29. அல்லாஹின் பெயராலும் நபியின் அருளாலும் அரசரின் அருளாலும் இது முடிக்கப்பட்டது. இதற்கு அல்லாஹின் திருவொளியே சாட்சி. இதை எழுதியவர் மாண்புமிகு ஃபத்துல்லாஹ் மொஹமத் கோரி.

மேலே குறிப்பிட்டிருப்பதில் பாபரை ஆட்சியாளராகக் குறிப்பிட்டிருக்கிறதே தவிர மசூதியைக் கட்டியவராகக் குறிப்பிடவில்லை. மாறாக அவரது காலத்தில் அந்தப் பகுதியின் நிர்வாகியாக இருந்த மிர்-பாக்கி பற்றி குறிப்பிடுகிறது. அதுவுமே பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் உருவம் கொடுத்தார் என்றே குறிப்பிடுகிறது. அதனால் மசூதிக்கு பாபரை உரிமைதாரராக்குவதே பொருத்தமாக இருக்காது. இன்னும் சொல்லப்போனால் பாபர் இந்த பகுதிக்கு வந்திருக்கவே இல்லை என்பதை அங்கிருக்கும் மேலதிக எழுத்துருத் தடயங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் ராம்கோட் பகுதியில் அதற்கு முன்னர் கோயில் இருந்ததற்கான எவ்வித சான்றையும் அந்த எழுத்துருக்கள் குறிப்பிடவில்லை.

பாபர்
பாபர்

மாறாக, ஒரு கோட்டை மட்டும் இருந்ததாகவும் அது மிர்-பாக்கியால் மறுசீரமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் 15-ம் நூற்றாண்டில் முகலாயர்கள் மீது ஆஃப்கானியர்கள் படையெடுக்கத் தொடங்கிய காலம் என்பதால் நெருக்கடிகளுக்கு நடுவே மிர்-பாக்கி புதிதாக மசூதியை எழுப்பியிருக்க வாய்ப்பில்லை, ஏற்கெனவே இருந்த ஒன்றை பழுதுபார்த்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். பாபர் காலத்தில் கட்டப்பட்ட மசூதிகளும் கோட்டைகளும் பெரும்பாலும் சிவப்புநிறக் கற்கள் கொண்டு எழுப்பப்பட்டவை. அவரது பாணிக்குச் சற்றும் பொருந்தாத ரகத்தில்தான் மிர்-பாக்கி எழுப்பிய மசூதி இருந்தது. கோயில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது என்று மிர்-பாக்கி குறிப்பிடவேண்டியதற்கான தேவை என்ன என்கிற கேள்வி எழலாம். அதே உத்தரப்பிரதேசத்தின் சம்பால் பகுதியில் கோயில் இருந்த இடத்தில்தான் அரசர் இப்ராஹிம் லோதி காலத்தில் மசூதி கட்டப்பட்டது.

அதனை பாபர் தனது காலத்தில் மீட்டுருவாக்கம் செய்தார் என்று இன்றும் அந்த மசூதியின் எழுத்துருத் தடயங்கள் குறிப்பிடுகின்றன (மாமன்னர் அரசர் பாபரின் ஆணைப்படி மிர் ஹிந்து பெக் இந்த மசூதியைக் கட்டினார்). அதுவும் 933-1526 பானிபட் போருக்கு ஏழு மாதங்களுக்குப் பிறகு (ஆங்கில வருடப்படி 6 டிசம்பர் 1526) அன்று கட்டி முடிக்கப்பட்டதாக எழுத்துரு தகவல்கள் குறிப்பிடுகின்றன. கோயில் இருந்ததாகத் தடயங்கள் கொண்ட, அதுவும் 6 டிசம்பர் 1526 அன்று நிர்மாணித்து முடிக்கப்பட்ட சம்பால் மசூதி மீது இதுநாள்வரை எந்த மதச்சார்பு அமைப்பும் உரிமை கோரவில்லை. அப்படியிருக்க, பாபர் கட்டாத பாபர் மசூதிக்குள் ராமர் எப்படித் தோன்றினார்?

(அடுத்த பகுதியில்...)

குறிப்புகள்:

White Paper On Ayodhya- Government of India, Feb 1983

Architecture of the Baburi Masjid of Ayodhya, R.Nath, Historical Research Documentation Programme, May 1995

Ascetic Games: Sadhus,Akharas and the Making of the Hindu Vote, Dhirendra K.Jha, Apr 2019

Ayodhya:The Dark night, Krishna Jha and Dhirendra K.Jha,Harper Collins, Dec 2012

Anatomy of Confrontation:Ayodhya and the Rise of Communal Politics in India, Sarvepalli Gopal, Zed Books Ltd, Mar 1992