Published:Updated:

தொடரும் தற்கொலை... ஒரே ஆண்டில் மரணித்த 10,281 விவசாயிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் தற்கொலை மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என 10,281 பேர் 2019-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

தொடரும் தற்கொலை... ஒரே ஆண்டில் மரணித்த 10,281 விவசாயிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

விவசாயிகள் தற்கொலை மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என 10,281 பேர் 2019-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்

டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்’ (Centre for Science and Environment) என்கிற அமைப்பு விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் தற்கொலைகள் தொடர்பான அதிர்ச்சிக்குரிய புள்ளிவிவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கை ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு இந்திய அளவில் 12 விவசாயிகளின் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 11 போராட்டங்கள் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானவை. இந்தப் போராட்டங்களுடன் விவசாயிகள் நலன்களுக்கு எதிரான மாநிலச் சட்டங்களை எதிர்த்தும், பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதைக் கண்டித்தும் மிகப்பெரிய அளவில் 96 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன என்கிறது சி.எஸ்.இ அறிக்கை.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு 15 மாநிலங்களில் 34 மிகப்பெரிய போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். பின்னர் அது, 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என விரிவடைந்து 165 போராட்டங்களாக அதிகரித்தன. விவசாயிகளுக்கான நெருக்கடிகளும், சிக்கல்களும் தீர்க்கப்படாத சூழலில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 28-க்கும் அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 2019-ம் ஆண்டு 5,957 விவசாயிகளும் 4,324 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

அதேநேரத்தில், மத்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்தாலும், வேளாண் சந்தை மற்றும் வேளாண் விளைபொருள்களுக்கு விலைகளை நிர்ணம் செய்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்வி காரணமான 38 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. நெடுஞ்சாலைகள், விமான நிலையம் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக வேளாண் நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கண்டித்து 17 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய போராட்டங்களின்போது விவசாயிகள் மீதான கைது நடவடிக்கையும் புதிய போராட்டங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

மத்திய பா.ஜ.க அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியின் எல்லையில் நடைபெற்றுவரும் போராட்டத்தை மிகப்பெரிய அளவுக்கு முன்னெடுத்துச் செல்பவர்கள் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள். இதேகாலகட்டத்தில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் மிகப்பெரிய போராட்டங்களை விவசாயிகள் நடத்தியிருப்பதாக சி.எஸ்.இ அறிக்கை குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மிகப்பெரிய போராட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவசாயிகளின் தற்கொலை தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் வேதனை அளிக்கின்றன. இத்தனை பேர் தற்கொலை செய்துகொண்ட செய்தி, இப்படியோர் ஆய்வு அறிக்கை வழியாக, இவ்வளவு தாமதாக வெளியுலகுக்குத் தெரியவருகிறது என்பதே அதிர்ச்சிக்குரிய ஒன்றுதான். விவசாயிகளின் தற்கொலை என்பது மலிவான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிற அவலம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து தென்னிந்திய விவசாய இயக்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் பொதுச்செயலாளரான எஸ்.கண்ணையனிடம் பேசினோம்.

“முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய ஒப்பந்தங்கள் உலக வர்த்தக அமைப்பு போன்ற அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டன. அவை மிக மோசமான விளைவுகளை இந்திய விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தின. விவசாயிகளின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியுடன் மோடி அரசு பதவியேற்றது. ஆனால், விவசாயிகளின் எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படவில்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள் தற்கொலைகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அதையும் மீறி சி.எஸ்.இ ஆய்வறிக்கையில் ஒரு புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது.

கண்ணையன்
கண்ணையன்

விவசாயக்கூலி உயர்வு, இடுபொருள்கள் விலை உயர்வு என விவசாயத்துக்கான செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், வேளாண் விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. வெள்ளம், வறட்சி, புயல் என இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.24,000 கோடி நிலுவைத்தொகை தரப்படாமல் இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை. லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகரை முற்றுகையிடும் வகையில் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தியும்கூட, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்பதில் மத்திய ஆட்சியாளர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இத்தகைய அணுகுமுறைதான் போராட்டங்கள் அதிகரிப்பதற்கும், தற்கொலைகள் தொடர்வதற்கும் முக்கியக் காரணம்” என்றார் எஸ்.கண்ணையன்.

இந்த விவகாரம் குறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணனிடம் பேசினோம்.

“விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும் என்று 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். வேளாண் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்கள். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை மானிய விலையில் அளிப்போம் என்றார்கள். பயிர்கள் சேதடைந்தால் காப்பீடு வழங்கப்படும் என்றார்கள். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நிறைய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. அதே நாளில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லியை நோக்கிப் பேரணி நடத்தினோம். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் ஏழு விவசாயிகளை பா.ஜ.க அரசு சுட்டுக்கொன்றது. அதைத் தொடர்ந்து 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து வேளாண் விளைபொருள்களுக்கு நியாயமான விலை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகிறோம்.

விஜு கிருஷ்ணன்
விஜு கிருஷ்ணன்

விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகள் தீவிரமடைந்திருப்பதன் காரணமாகவே, போராட்டங்களும் அதிகரித்துள்ளன. விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்காத காரணத்தால், கடன்வலையில் விவசாயிகள் சிக்கியுள்ளனர். அதனால், விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஓர் ஆண்டுக்கு 40 நாள்கள்கூட வேலை வழங்கப்படுவதில்லை. இவையெல்லாம்தான் விசாயிகளின் துயரங்களுக்கு முக்கியக் காரணங்கள். டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடிவருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பெற வேண்டும் என்பதில் மட்டுமே மத்திய ஆட்சியாளர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை” என்றார்.

இது குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் புரட்சிக்கவிதாசனிடம் பேசியபோது, விவசாயிகளின் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறைகள் குறித்து விவசாயிகள் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

“விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும் அவர்களின் வருமானம் இரட்டிப்பு ஆவதற்கும், விளைபொருள்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதற்கும், சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் உறுதியான பல நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்திருக்கிறது. விவசாயிகள் போராட்டங்களெல்லாம் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நடப்பவை என்பது அனைவரும் அறிந்ததே.

மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலைகளே நடக்கவில்லை. பயிப்ர் பாதுகாப்புத் திட்டம் போன்ற மிகச் சிறப்பான திட்டங்களை வெற்றிகரமாக மோடி அரசு செயல்படுத்திவருகிறது. அப்படியிருக்கும்போது எதற்காக விவசாயிகள் தற்கொலை செய்யப்போகிறார்கள்? வேளாண் நிலம் தரிசாகப் போடப்பட்டாலும், பயிர் கருகிப்போனாலும் காப்பீடு வழங்கப்படுகிறது. விளைந்த பயிர் வீடு வந்து சேர்ந்து 15 நாள்கள் வரை காப்பீடு உண்டு. இப்படியொரு சிறப்பான காப்பீட்டுத் திட்டத்தை இதற்கு முன் எந்த அரசும் அமல்படுத்தியதில்லை.

புரட்சிக்கவிதாசன்
புரட்சிக்கவிதாசன்

'கிசான் சம்மான் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 ஓய்வூதியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மட்டும் 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றிருக்கிறார்கள் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகிறார்கள். அதுபோல, மோடி அரசுக்கு எதிராகப் பல நிறுவனங்களும் அமைப்புகளும் செயல்படுகின்றன. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக வெளியிடப்படும் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் ஆதாரமற்றவை” என்றார் புரட்சிக்கவிதாசன்.