Published:Updated:

`முதல்வருடன் லண்டன் செல்வது ஏன்?' - அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் 3 ஒப்பந்தங்கள்

பிரேம் குமார் எஸ்.கே.

`லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் புதிய கிளை சென்னையில் உருவாக்கப்படும்’ என்கிறார் விஜயபாஸ்கர்

Minister Vijaya baskar
Minister Vijaya baskar

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். முதற்கட்டமாக இங்கிலாந்து செல்லும் அவர் அங்கிருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்குச் செல்கிறார். பின்னர் துபாய் செல்லும் எடப்பாடி பழனிசாமி, செப்டம்பர் 10-ம் தேதி தமிழகம் திரும்ப இருக்கிறார்.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், ``அதிக அளவில் தமிழகத்துக்கு முதலீட்டைக் கொண்டு வருவதற்காகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறேன். நான் தொழில் அதிபர் கிடையாது. சாதாரண விவசாயியான நான் மக்கள் நலனுக்காகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறேன். தமிழகம் அனைத்து அம்சங்களும் உள்ள மாநிலம். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே தொழிற்சாலைகள் இங்கு வந்துவிடாது. ஸ்டாலின் அடிக்கடி சொந்த விஷயத்துக்காக வெளிநாடு செல்கிறார் எனக் கூறுகிறார். அந்தச் சொந்த விஷயம்தான் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் பழனிசாமியுடன் லண்டன் செல்லும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் லண்டனில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு இது.

Minister Vijaya baskar
Minister Vijaya baskar

டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களை ஏற்கெனவே நாம் சிறப்பாகக் கையாண்டு வருகிறோம். இதை உலகத்தரத்தில் கையாளுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக செவிலியர்கள் லண்டனிலும் லண்டன் செவிலியர்கள் தமிழகத்திலும் பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் புதிய கிளையை சென்னையில் உருவாக்கவும் உலகத் தரத்திலான சேவைகளை நம்முடைய அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்துவதற்கும் பல்வேறு துறைகளில் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் சேர்த்து 3 ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட இருக்கிறார்.

14 நாள்கள் வெளிநாடு பயணம்; புறப்பட்டார் முதல்வர்! - உடன் செல்லும் அமைச்சர்கள் யார் யார்?

நம்முடைய 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் சிறந்த சேவையை வழங்கிவரும் நிலையில், சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், லண்டனில் உள்ள 999 என்று சொல்லக்கூடிய அதிநவீன ஆம்புலன்ஸ் சேவையை இங்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு தமிழக அரசால் டெங்கு நோய் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நோய்களை, வளர்ந்த நாடுகளில் எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொண்டு அதேபோன்ற தொழில்நுட்பத்தை இங்கும் கையாளும் வகையில் இந்தப் பயணம் பயனுள்ளதாக இருக்கும்.

லண்டனில் உள்ள 999 என்று சொல்லக்கூடிய அதிநவீன ஆம்புலன்ஸ் சேவையை இங்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்
அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தப் பயணத்தின் மூலம் தமிழக சுகாதாரத்துறை அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க இருக்கிறது. இந்திய மருத்துவர்கள் லண்டனில் 20 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் யார் எந்தச் சிகிச்சையைப் பெற விரும்பினாலும் உடனடியாகச் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். இந்தப் பயணத்தின் மூலமாகத் தமிழகத்தின் மெடிக்கல் டூரிஸம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார் உறுதியாக.