Published:Updated:

அமித் ஷாவைச் சந்திக்கக் காத்திருக்கும் மம்தா!- உறுமிய வங்கப்புலியின் மாற்றத்துக்குக் காரணம் என்ன?

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேற்கு வங்கத்துக்குள் வர தடை விதித்த மம்தா, இப்போது அவரைச் சந்திக்கவும் முயன்றுகொண்டிருக்கிறார்.

மம்தா மோடி சந்திப்பு
மம்தா மோடி சந்திப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், மேற்கு வங்க முதல்வருக்குப் பிரதமர் அலுவலகத்திலிருந்து போன் செய்தால், `மேடம் பிசியா இருக்காங்க... அப்புறம் பேசுங்க' என்று பதில் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்ல, `காலாவதியான பிரதமர்' என்று மம்தா மோடியைக் கடுமையாக விமர்சித்தார். ஆனால், மீண்டும் அசுர பலத்துடன் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்; மோடியே பிரதமராகத் தொடருவார் என்று மம்தா நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.

மோடியின் மனைவியுடன் மம்தா சந்திப்பு
மோடியின் மனைவியுடன் மம்தா சந்திப்பு

இனி, எப்படியும் 5 ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சிதான் இந்தியாவில் நடைபெறும். மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்வதே கட்சிக்கும் மாநிலத்துக்கும் நல்லது என்பதை மம்தா உணர்ந்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

பிரதமர் மோடியை மம்தா டெல்லி சென்று சந்தித்ததன் பின்னணி இதுதான். அதுமட்டுமல்ல, அமித் ஷாவை மேற்கு வங்கத்துக்குள் வர தடைவிதித்த மம்தா, இப்போது உள்துறை அமைச்சரைச் சந்திக்கவும் முயன்றுகொண்டிருக்கிறார். `அமித் ஷா என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கினால், சந்திப்பேன்' என்று கூறியுள்ள மம்தா, டெல்லியில் இப்போது காத்திருக்கிறார். மோடியின் 69-வது பிறந்த நாளுக்கு அடுத்த நாள் பிரதமரை டெல்லியில் உள்ள வீட்டில் மம்தா சந்தித்தார். அப்போது, மோடிக்குப் பிடித்த பெங்காலி ஸ்வீட்டுகளும், குர்தாவும் கொடுத்து பிரதமருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார். மேற்கு வங்கத்துக்கு வர வேண்டும் என்றும் மோடிக்கு மம்தா அழைப்புவிடுத்தார். மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவது உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்ததாகவும், இது அரசியல் சந்திப்பு அல்ல, தனிப்பட்ட சந்திப்பு என்றும் செய்தியாளர்களிடத்தில் மம்தா கூறினார்.

மோடியுடன் மம்தா
மோடியுடன் மம்தா

முன்னதாக, டெல்லி செல்வதற்காகக் கொல்கத்தா விமான நிலையத்துக்கு மம்தா வந்தபோது, விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் இருப்பதாக மம்தாவிடம் சொல்லப்பட்டது. உடனடியாகச் சென்று அவரைச் சந்தித்த மம்தா, பிரதமரின் மனைவிக்குப் புடவை பரிசளித்து மகிழ்ந்தார்.

சாரதா சிட் ஃபன்ட் மோசடி வழக்கு விசாரணை தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது கவனத்திற்குரியது. கொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் மீது சி.பி.ஐ, பிணையில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்துள்ளது. அவர் கைதானால், மேற்கு வங்கத்தின் முக்கியப் புள்ளிகள் இந்த வழக்கில் சிக்கும் சூழல் உருவாகும் எனக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கவே, பி.ஜே.பி.யுடன் இணக்கமாக நடந்துகொள்ள இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.