Published:Updated:

'எப்போது வெளியில் வருகிறார் சசிகலா?' - தினகரனின் 'அமைதி' பின்னணி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா எப்போது வெளியே வருவார் என்பது குறித்து அவரின் உறவுகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளன.

Sasikala
Sasikala ( ம.அரவிந்த் )

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை காலம் முடிந்து சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளதாக அவரின் உறவுகள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

சசிகலா
சசிகலா

இது குறித்து சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பெருமளவில் மாற்றங்கள் நிகழ்ந்தன. சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா சிறைக்குச் சென்றார். சிறைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதா சமாதிக்கு சென்றவர் சூழ்ச்சி, துரோகம், இவற்றிலிருந்து மீண்டு வருவதுடன் இழந்தவற்றை மீட்பேன் எனச் சபதமெடுத்தார்.

அதன்படி அவருடைய சபதம் நிறைவேறுவதற்கான நாள்கள் நெருங்கிவிட்டதாகத் தெரிகிறது. சசிகலாவின் விடுதலைக்காக மறுசீராய்வு மனு போடப்பட்டதுடன் டெல்லியில் உள்ள பி.ஜே.பி-யின் முக்கிய தலைவர்கள் மூலமாக அவரின் குடும்பத்தினர் காய்கள் நகர்த்திக்கொண்டே இருந்தனர். குறிப்பாக, சசிகலாவின் தம்பி திவாகரன் இதற்காகத் தொடர்ந்து பெரு முயற்சி மேற்கொண்டார். ஆனால், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

sasikala - Divakaran
sasikala - Divakaran

தினகரன்- திவாகரன் மோதலைத் தொடர்ந்து சிறையில் இருந்தபடியே வழக்கறிஞர் மூலமாக சசிகலா, திவாகரனுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், ``திவாகரன் என்னை அக்கா என்று அழைக்கவோ, எதற்கும் என் பெயரை பயன்படுத்தவோ கூடாது'' எனக் குறிப்பிடிருந்தார். அதன் பிறகு திவாகரன், சசிகலாவை முன்னாள் சகோதரி என்றே மீடியாக்களிடம் கூறி வந்தார். அதன் பிறகும் ``சசியின் வாழ்க்கையில் துன்பத்தை தவிர வேறு எதையுமே அவர் அனுபவித்தது இல்லை. நிம்மதியாக இருக்க வேண்டிய இந்த வயதிலும் சிறையில் இருக்கிறார். அவரை வெளியே கொண்டு வர வேண்டும் அதற்கான எந்த வேலையையும் நிறுத்த மாட்டேன் என நெருக்கமானவர்களுடன் கூறி வந்தார்.

அதன் பிறகு, அடிக்கடி டெல்லி சென்ற அவர், அமித்ஷா, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்களைச் சந்தித்து சசிகலா விடுதலை தொடர்பான முயற்சிகளை செய்து வந்திருக்கிறார். இரண்டு வாரத்துக்கு முன்பு மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரிக்குள் இருக்கும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது சசி சீக்கிரமே வெளியே வர வேண்டும் என வேண்டிக்கொண்டார். அதற்காகவே கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

Dinakaran with Divakaran
Dinakaran with Divakaran

இதையடுத்து சிறையில் சசிகலா - சந்திரலேகா சந்திப்புக்குப் பிறகு இதற்கான பணிகள் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. பி.ஜே.பி-யும் இதற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்குச் சென்ற சசிகலா முறைப்படி பார்த்தால் 2020 இறுதியில்தான் வர வேண்டும். இதில் அரசு விடுமுறை, கைதிக்கான விடுமுறை, பெரும் தலைவர்கள் பிறந்தநாள் விடுமுறை என எல்லாம் சேர்த்து ஒரு வருடத்துக்கு 40-லிருந்து 45 நாள்கள் வரை தண்டனை காலத்தில் இருந்து குறைக்கப்படும். மேலும், இந்த வழக்கில் முன்பே சிறையில் இருந்த நாள்களும் கழிக்கப்படும். அதன்படி பார்த்தால் சசிகலா 2020 ஜுன் மாதம் வெளியே வர வேண்டும்.

இந்த நிலையில் அவரின் வயது, நன்னடத்தை, பெண் போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி சீக்கிரமே விடுதலை செய்ய உள்ளனர். அதாவது, வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் விடுதலையாகி வெளியே வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. தன் விடுதலை குறித்த விஷயத்தை சசிகலாவும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாகச் செய்து வந்ததுடன் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கினார்.

Sasikala
Sasikala

அதன்படிதான் தினகரனிடமும் நான் வெளியே வரும் வரை அமைதியாக இரு. பி.ஜே.பி அரசை பற்றி விமர்சனம் செய்து பேசாதே எனக் கூறினார். அதனால்தான் தினகரன் அமைதியாக இருந்து வருகிறார். இவையெல்லாம் அவர் வருவதை உறுதிபடுத்துவதாக உள்ளன. சசிகலா வெளியே வர இருக்கிறார் என்ற செய்தியை அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல், அ.தி.மு.க-வினரும் உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன் பரபரப்பாகவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சசிகலா வந்த பிறகே, அரசியலிலும் அவர் குடும்பத்திலும் என்னென்ன மாற்றங்கள் நிகழும் எனத் தெரியவரும்'' என்றனர்.