Published:Updated:

சசிகலாவை விட்டு விலகுகிறாரா தினகரன்? அறிக்கையின் பின்னணி என்ன?!

தினகரன்

அ.ம.மு.க -வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி...

சசிகலாவை விட்டு விலகுகிறாரா தினகரன்? அறிக்கையின் பின்னணி என்ன?!

அ.ம.மு.க -வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி...

Published:Updated:
தினகரன்

`கட்டளையிட்ட சசிகலா... கட்சியைக் கலைத்துவிடு' என்கிற தலைப்பில் 11.7.21 தேதியிட்ட ஜூ.வி- யில் கட்டுரை வெளியாகியிருந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனை எங்கும் பார்க்க முடியவில்லை. கட்சியின் நிர்வாகிகளாலும் தொடர்புகொள்ள முடியவில்லை. எங்கே போனார், ஏன் சைலன்ட் ஆனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் தாவினர். இவர்கள் தாவப்போகிற விஷயம் முன்கூட்டியே கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குத் தெரிந்தே நடந்தது. அவர்களைப் போக வேண்டாம் என்று தினகரன் சொல்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், தினகரனிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. அதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சசிகலாவுக்குத் தகவல் அனுப்பினர். உடனே அவர் தலையிட்டு, கட்சித் தாவ ரெடியான சிலருடன் போனில் பேசினார். அவர்கள் தாவல் திட்டத்தைத் தள்ளிப்போட்டனர். தினகரனின் உட்கட்சி விஷயத்தில் சசிகலா தலையிடாமல் இருந்துவந்தவர், ஒருகட்டத்தில் தலையிட ஆரம்பித்தார். அண்மையில் தஞ்சாவூருக்கு தினகரன் வந்திருந்தார். தனது வருகையை கட்சியின் முக்கியப் பிரமுகர்களிடம் தெரிவிக்கவில்லை. கொரோனா பரவல் காரணமாக வெளியில் தலைகாட்டாத தினகரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தஞ்சாவூர் வந்தபோதுகூட கட்சியினரிடம் ஏதும் பேசவில்லை என்றதும், கட்சியினர் அப்செட் ஆனார்கள். அதேநேரம், அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவி, சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து அமைச்சரான செந்தில் பாலாஜி, அவரின் அ.ம.மு.க நண்பர்களை `பிரெயின்வாஷ்' செய்து தி.மு.க-வுக்கு அழைத்துப்போக ஆரம்பித்தார். அவரின் வலையில் அ.ம.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பழனியப்பன் விழுந்து தி.மு.க-வுக்குத் தாவினார். தொடர்ந்து பலரும் தாவ தயாராகிக்கொண்டிருந்த சூழ்நிலையில்தான் சசிகலாவின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. அதன் பிறகு, அ.ம.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் கொஞ்சம் அடங்கினர். மன்னார்குடியிலுள்ள சசிகலா தரப்பினர், கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனை சசிகலா தொடர்புகொண்டு, `கட்சியை கலைத்துவிடு!’ என்று சொல்லிவிட்டார் என்கிற தகவலைச் சொல்ல ஆரம்பித்தனர். இந்தத் தகவல் தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்வலையை உண்டாக்கிவிட்டது.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

இது பற்றி சசிகலா ஆதரவாளர் ஒருவர் கூறும்போது,

``2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடுவதை சசிகலா விரும்பவில்லை. சசிகலாவின் ஆதரவை தினகரன் எதிர்பார்த்தார். ஆனால், சசிகலா அதற்கு மறுத்துவிட்டார். தேர்தலின் போட்டியிட வேண்டாம். தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அட்வைஸ் சொன்னார். அதை தினகரன் ஏற்கவில்லை.`தேர்தலில் 30 தொகுதிகளிலாவது அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பை நாம் தகர்க்கலாம். அப்போதுதான், நமது செல்வாக்கு என்ன என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு புரியவைக்க முடியும்’ என்றார். ஆனால், தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. அரசியலில் பழுத்த அனுபவமுள்ள சசிகலாவின் வார்த்தையைக் கேட்காததால், தினகரனுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்பட்டது. அது கட்சியின் கடைக்கோடி தொண்டர்களையும் பாதித்தது. உடனே, சசிகலாவைத் தேடிச் சென்றனர். அவரும் ஏராளமானவர்களுடன் போனில் பேசி ஆறுதல் சொன்னார். சசிகலாவின் இந்த அணுகுமுறை பலருக்கும் பிடித்திருந்தது. ``எங்களுக்கு இனி தினகரன் வேண்டாம். உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம்" என்று அறிவித்தனர். அதையடுத்துதான், அ.ம.மு.க-வின் கட்சிப் பிரமுகர்களுடன் சசிகலா தொடர்புகொண்டு பேசிவந்தார். சசிகலாவின் இந்த அதிரடியை தினகரன் ரசிக்கவில்லை. சசிகலாவின் போக்கைக் கண்டு அதிருப்தியடைந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று (9.7.21) தினகரன் ஓர் அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை காலம்கடந்த அறிக்கை என அவரது கட்சியினர் இதை வெறுப்பாகத்தான் பார்க்கின்றனர். சமீபகாலமாக தினகரனுக்கும் சசிகலாவுக்கும் பேச்சுவார்த்தையே இல்லை’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``காலத்தையும் காட்சிகளையும் மாற்றும் சக்தி நமக்கு உண்டு. நம் வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. யாராலும் அதை மொத்தமாகத் தடுத்துவிட முடியாது. புதிய பொலிவோடும் வலிவோடும் முன்பைவிட வேகமாகச் செயல்படுவோம். ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் - மாநகராட்சி, நகராட்சித் தேர்தலுக்கு தயாராவோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் தினகரன். அறிக்கையில் சசிகலாவைப் பற்றி எங்கும் குறிப்படவேயில்லை. தி.மு.கழக ஆட்சியையும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க-வையும் சாடியிருந்தார்.

தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை
தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை
தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை
தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை
தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை
தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்த அறிக்கை பற்றி அ.ம.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களிடம் நாம் கேட்டோம்.

``கொரோனாதான் எங்கள் பொதுச்செயலாளர் வெளியே வராததற்கு முக்கியக் காரணம். தற்போது பரவல் குறைந்ததுவிட்டதால், அறிக்கைவிட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் வேலையில் பிஸியாகிவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் சசிகலா திடீரென அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்தார். அப்படி அறிவிக்க வேண்டாம் என்று தினகரன், சசிகலாவிடம் மன்றாடிப்பார்த்தார். சசிகலா கேட்கவில்லை. ஒருவேளை, கடந்த தேர்தலில் எங்கள் கட்சியை சசிகலா ஆதரித்திருந்தால், தேர்தல் முடிவே மாறியிருக்கும். பெங்களூரு சிறைச்சாலையிலிருந்து சென்னைக்கு சசிகலா திரும்பியபோது, தினகரனின் ஏற்பாட்டில்தான் கூட்டம் ஆர்ப்பரித்தது. கட்சியினரை உற்சாகப்படுத்தி பிரமாண்ட வரவேற்பைக் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதையெல்லாம் மறந்துவிட்டார் சசிகலா. அ.ம.மு.க-வுக்கு எல்லா ஊர்களிலும் கட்சி கட்டமைப்பு இருக்கிறது. விரைவில் சசிகலா டூர் போகப்போவதாக சொல்லியிருக்கிறார். அவர் போகும்போது, பிரசார புரோகிராமை தினகரனால்தான் வெற்றிகரமாக நடத்த முடியும். அவரது தலைமையை நாங்கள் மதிக்கிறோம். அவர் இல்லாமல், அ.ம.மு.க-வை தன் கஸ்டடிக்குள் எடுத்துவிடலாம் என்று சசிகலாவுடன் இருக்கிற சிலர் தவறான அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அது ஒரு நாளும் நடக்காது. நாங்கள் இன்றும் தினகரனின் விசுவாசிகள்தான். ஒருசிலர் சுயலாபத்துக்காக கட்சியைவிட்டுப் போயிருக்கலாம். அதெல்லாம் கட்சியை பாதிக்கவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். `கட்சியைக் கலைத்துவிடு’ என்று சசிகலா சொன்னதாகச் சிலர் வதந்தியைப் பரப்பிவருகிறார்கள. அது உண்மையில்லை’’ என்கிறார்கள். இவர்களில் யார் சொல்வதை நம்புவது என்கிற பெருங்குழப்பத்தில் கட்சித் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism