Published:Updated:

கிஷோர் கே.சாமி கைது... சரியான நடவடிக்கையா, பழிவாங்கும் படலமா?!

கிஷோர் கே.சுவாமி
கிஷோர் கே.சுவாமி ( facebook - kishore k.swamy )

தலைவர்கள்மீது அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கைதைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுப் பேசிவரும் சூழலில், சிலர் அது தி.மு.க-வின் பழிவாங்கும் படலம் என விமர்சித்துவருகிறார்கள். உண்மை என்ன?

பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஜூன் 10-ம் தேதி புகார் அளித்தார். அதனடிப்படையில் 153 - கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) ( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இதனையடுத்து கிஷோர் கே. சாமியை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில்வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் சைதாப்பேட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் படத்தைப் பயன்படுத்தி யூடியூப்பில் அவதூறுக் கருத்துகளைப் பதிவு செய்ததாக, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாகப் பேசிய ‘டாக்ஸிக் மதன் 18+’ என்ற பெயரில் யூடியூப் நடத்திவந்த மதன் என்பவர் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதனின் யூடியூபை முடக்கத் திட்டமிட்ட புளியந்தோப்பு போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

கடந்த மூன்று நாள்களில் மூன்று வெவ்வேறு யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனிமனிதத் தாக்குதல்களுடன், அவதூறான கருத்துகளைப் பரப்பியதற்காக இவர்களின் கைதைப் பலரும் வரவேற்றுப் பேசினாலும் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றப் பேசியதற்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனவே, இது தி.மு.க-வின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிஷோர் கே.ஸ்வாமி கைது: தி.மு.க தலைவர்கள் பற்றி அவதூறு கருத்துகள்... 3 பிரிவுகளின் கீழ் வழக்கு!

கிஷோர் கே.சாமி, சாட்டை துரைமுருகன் ஆகியோர் பழிவாங்கும் நோக்கில்தான் கைதுசெய்யப்பட்டார்களா என தி.மு.க செய்தித்துறை இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் கேட்டோம். “கிஷோர் கே சாமி மற்றும் 'சாட்டை' துரைமுருகன் உள்ளிட்டோர் மீது ஏற்கெனவே தலைவர்கள் குறித்துத் தவறான கருத்துகளை அவதூறு பரப்பும் நோக்கில் பேசியதாகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் வேலையைத்தான் இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். கிஷோர் கே. சாமி பெண் பத்திரிகையாளரைத் தவறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். வெளியில் வந்தும் அதே பெண் பத்திரிகையாளர் குறித்து மீண்டும் தவறாகப் பேசியிருக்கிறார். இதேபோல 14 வழக்குகள் கிஷோர் கே. சாமி மீது இருக்கின்றன. அப்போது ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருந்தார் என்பதற்காகவே வேலுமணி போன்ற அமைச்சர்கள் புகார்தாரர்களை அழைத்து கிஷோர் கே. சாமியுடன் சமாதானம் செய்துவைத்தனர். அதன் பிறகு தொடர்ந்து ‘முடிந்தால் கைது செய்து பாருங்கள், என்னை என்ன செய்ய முடியும்’ என அரசை மிரட்டவும், வேலை செய்யவிடாமல் தடுக்கவும் செய்தால் அதைச் சட்டத்தின் வழியில் நடக்கும் தி.மு.க அரசு அனுமதிக்காது. பொதுவெளியில் என்னென்ன சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல், நாகரிகம் இன்றி, கேட்கக்கூட கூச்சப்படும் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இதே கிஷோர் கே. சாமி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி வானதி சீனிவாசன் குறித்தும் அவதூறாகப் பேசியிருக்கிறார். சட்டவிரோதமாக நடப்பவர்களுக்குச் சாதகமாக செயல்பட இது அடிமை எடப்பாடி ஆட்சியல்ல. விமர்சனம் என்ற பெயரில் தலைவர்கள் குறித்து அவதூறான, உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பகிர்வதுதான் இவர்கள் செய்யும் மிகப்பெரிய குற்றம். அதைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிக்க முடியாது இல்லையா...

 ராஜீவ் காந்தி, தி.மு.க
ராஜீவ் காந்தி, தி.மு.க

கைதுசெய்யப்பட்ட இருவரின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். கிஷோர் கே. சாமி முழுக்க முழுக்க மனப்பிறழ்வு ஏற்பட்டவர்போல நடந்துகொள்கிறார். சாட்டை துரைமுருகன் எப்போதும் தனிமனித விமர்சனத்தையே செய்துவருகிறார். கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர்களின் மாண்பிலோ, உணர்விலோ தலையிடும் வகையில் இருக்கக் கூடாது. தனிமனிதத் தாக்குகள் இல்லாத உண்மையான விமர்சனங்களை திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் வரவேற்கும். அதை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் செய்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார் தீர்க்கமாக.

கரு.நாகராஜனின் `வாய்ஸ்’ என்ற பெயரில் புதிதாக யூடியூப் சேனல் தொடங்கியிருக்கும் பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம். “யூடியூப் என்பது வளர்ந்துவரும் நவீன காலத்தில் அவரவர் கருத்துகளை வெளியிடக் கிடைத்துள்ள தளம். யூடியூப் தளம் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற்போல சேனலை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது. ஆனால், அப்படி யூடியூப்களில் சொல்லப்படும் கருத்துகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதைக் கேட்பவர்களும் பார்ப்பவர்களும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் அதைக் கடந்துவிடுவதுதான் நல்லது. எளிதில் மக்களைச் சேரும் என்பதால் யூடியூப்பில் கருத்துகளைப் பகிர்பவர்களும் சமூக அக்கறையோடு நடந்துகொள்ள வேண்டும். நல்ல கருத்துகளைச் சொல்பவர்களுக்கு மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும். அவற்றை விட்டுவிட்டு யூடியூப் தளம் நம் கையில் இருக்கிறது என்பதற்காக எல்லோரையும் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை.

கரு.நாகராஜன் யூடியூப் பக்கம்
கரு.நாகராஜன் யூடியூப் பக்கம்

கற்பனையாகவோ, தலைவர்களையோ, தனிநபரையோ பாதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிடுபவர் யாராக இருந்தாலும் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும். வக்கிரமான சிந்தனைகளைப் பதிவிடுவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. யாரையும் மனரீதியாக, மதரீதியாகப் பாதிக்கும் கருத்துகளைப் பதிவிடுவதும் தவறானது. தலைவர்கள் மீது மாற்றுக் கருத்து இருக்கும் பட்சத்தில் விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், அது அறத்தை மீறியதாக இருக்கும்பட்சத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு