Published:Updated:

பாமக: இளைஞரணியின் தலைவர் பொறுப்பிலிருந்து தமிழ்க்குமரன் விலகலுக்கு என்ன காரணம்?!

மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்

“மருத்துவர் ராமதாஸ் பங்கேற்கும் நிகழ்வுகளில் மட்டும் அண்ணன் ஜி.கே.மணி பங்கெடுத்துவந்தார். அன்புமணியின் நிகழ்வுகளைத் தவிர்த்துவந்தார்.”

பாமக: இளைஞரணியின் தலைவர் பொறுப்பிலிருந்து தமிழ்க்குமரன் விலகலுக்கு என்ன காரணம்?!

“மருத்துவர் ராமதாஸ் பங்கேற்கும் நிகழ்வுகளில் மட்டும் அண்ணன் ஜி.கே.மணி பங்கெடுத்துவந்தார். அன்புமணியின் நிகழ்வுகளைத் தவிர்த்துவந்தார்.”

Published:Updated:
மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்

பாமக-வின் இளைஞர் அணித் தலைவராக இருந்த அன்புமணி, கடந்த மே மாதம் இறுதியில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கௌரவத் தலைவரானார். இதையடுத்து அவர் வகித்துவந்த இளைஞரணித் தலைவர் பதவியைக் கைப்பற்ற பாமக முன்னணி நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர். அந்தப் பதவிக்குப் படித்த, நிர்வாகத் திறமைமிக்க ஒருவரை அமர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அன்புமணி, தொடர்ந்து தேடலில் இருந்துவந்தார்.

அப்போதுதான் அன்புமணிக்காக பாமக-வில் தலைவர் பதவியை ராஜினாமா செய்து வழிவிட்டு ஒதுங்கிக்கொண்ட ஜி.கே.மணி, தனது மகன் தமிழ்க்குமரனை பாமக இளைஞரணித் தலைவராக்க விரும்பினார். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி பாமக இளைஞரணித் தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனை நியமித்த ராமதாஸ், அதற்கான நியமனக் கடிதத்தை வழங்கினார். இதனால், ராமதாஸ்-அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. நிர்வாகிகளும் குழப்பத்தில் இருந்தனர்.

அன்புமணி - ஜி.கே.மணி
அன்புமணி - ஜி.கே.மணி

இந்த நிலையில், இளைஞரணித் தலைவராகச் செயல்பட்டுவந்த தமிழ்க்குமரன் சமீபத்தில், தான் வகித்துவந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக, கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ``பாமக-வில் இளைஞரணித் தலைவர் பொறுப்பை, தாங்களே விரும்பி எனக்கு நியமனக் கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இந்தப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அக்டோபர் மாதத்தில் இளைஞரணித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அதற்கடுத்த மூன்று மாதங்களில் கட்சிப் பதவியிலிருந்து விலகியிருப்பது கவனிக்கத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு பாமக தலைவர் அன்புமணிக்கும் தமிழ்க்குமரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்

இது குறித்து பாமக-வின் சீனியர்கள் சிலரிடம் விசாரித்தபோது, “கட்சியில் சில பொறுப்புகளைத் தேவையின் அடிப்படையில்தான் உருவாக்க முடியும். அந்த வகையில் மருத்துவர் ஐயாவுக்கு அடுத்து சின்னய்யாவுக்கு, ஒரு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. இளைஞர் அணியில் சிறப்பாகப் பணியாற்றிவந்த அன்புமணிக்கு, தலைவர் பதவி கொடுக்க வேண்டுமென்று கட்சியில் ஒருமனதாகப் பேசி முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்புமணியும் தலைவர் பதவி பொறுப்பேற்றார். அவருக்கு முன்பு தலைவர் பதவி வகித்த அண்ணன் ஜி.கே.மணிக்கு கௌரவத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இதற்கடுத்து மருத்துவர் ராமதாஸ் பங்கேற்கும் நிகழ்வுகளில் மட்டும் அண்ணன் ஜி.கே.மணி பங்கெடுத்து வந்தார். அன்புமணியின் நிகழ்வுகளைத் தவிர்த்து வந்தார். அன்புமணியும் ஒருகட்டத்தில் அவரை அழைப்பதை நிறுத்திவிட்டார் என்றே சொல்லப்படுகிறது. இவர்களுக்கு இடையே இருக்கும் சிற்சில அதிருப்திகளைத் தெரிந்துகொண்ட மருத்துவர் ராமதாஸ், அண்ணன் ஜி.கே.மணியின் மகன், தமிழ்க்குமரனை அழைத்து இளைஞரணித் தலைவர் பதவி கொடுத்தார். அவரும் கட்சிப் பணியோடு, திரைப்படத்துறையிலும் இயங்கிவந்ததால், அரசியலில் அவரால் முழுவதுமாக கவனம் செலுத்த முடியவில்லை. அதோடு அன்புமணிக்கும் தமிழ்க்குமரனுக்கும் இடையேயான கருத்து மோதல் முற்றவே, ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து விலகி, தான் சார்ந்த திரைப்படத்துறை வேலையில் கவனம் செலுத்த முடிவுசெய்துவிட்டார்” என்கிறார்கள்.