விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்றைய தினம், இந்த உயிரிழப்பு 10-ஆக இருந்தபோது, விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர், மருத்துவமனை வளாகத்துக்குள்ளாகவே இந்தச் சம்பவம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

அப்போது, கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் உறவினர்கள், மருத்துவமனைக்கு முன்பு திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, "இந்த மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை. சிகிச்சையில், நன்றாக இருந்தவர்களெல்லாம் திடீர் திடீரென இறக்கிறார்கள். டாக்டர்களும் சரியான பதில் சொல்வதில்லை. இதையெல்லாம் உள்ளடக்கி, எங்கள் குறைகளையும் முதலமைச்சரிடம் கூறலாம் என இருந்தோம். ஆனால், அவர் வந்ததும் எங்களை ஒரு வராண்டாவில் அடைத்துவிட்டார்கள்.
எங்களில் யாரையும் அவரிடம் பேசவேவிடவில்லை. நேராகச் சென்று சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்த்துவிட்டு வெளியேறிவிட்டார் முதல்வர். எங்களைப் பார்க்கத்தானே இங்கு வந்தார்... ஆனால், எங்களின் குறைகளைக் கேட்காமல், அதிகாரிகளுடன் பேசச் சென்றுவிட்டார். அதனால்தான் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, எங்களில் ஐந்து பேரை அழைத்து முதலமைச்சரிடம் பேசவைப்பதாக அழைத்துச் சென்றார்கள். ஆனால், வாசல் அருகிலேயே நிற்க வைத்துவிட்டார்கள். வெளியே வந்த முதலமைச்சர், எங்களின் மனுவை வாங்கியதோடு சரி, ஏதும் பேசவில்லை. அப்படியே காரில் ஏறிச் சென்றவர், முற்றுகை செய்தவர்களை கண்டுகொள்ளவுமில்லை. எங்களுக்கு முறையான சிகிச்சை வேண்டும்" என்றனர்.

முதலமைச்சர் இருக்கும்போதே நடைபெற்ற இந்தச் சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் ஸ்டாலின் சென்றதும், மாவட்ட வருவாய் அலுவலர், திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகியோர், அந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.