Published:Updated:

`ரேஷன் அரிசிக்கு டாட்டா...' புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது அரிசி அரசியல்!

Representational Image
Representational Image

``புதுச்சேரி கடுமையான நிதிச் சிக்கலில் தவித்துவரும் நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களைக் கணக்கெடுத்து இலவச அரிசித் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஏழை மக்களுக்காவது அந்தப் பயன் முழுமையாகச் சென்றடைந்திருக்கும்."

புதுச்சேரியில் 2016-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் 30 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியோடு ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. அதன்படி, முதலில் 20 கிலோ இலவச அரிசி வாங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு. சில நாள்களிலேயே இலவச அரிசி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதோடு தரமற்ற அரிசியையும் விநியோகிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ``கொள்முதல் செய்யப்படும் அரிசியை சோதனை செய்த பிறகே மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்” என்று உணவு மற்றும் மருந்து ஆய்வுத்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார் கவர்னர் கிரண்பேடி. ஆய்வு முடிவுகள் வருவதற்குள் பெரும்பாலான மக்கள் அதைப் பயன்படுத்தி முடித்திருந்தார்கள். விவகாரம் சி.பி.ஐ வரை சென்றதால் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் அரசியல் செல்வாக்கோடு `எஸ்கேப்’ ஆகிவிட, விற்பனையாளர் மீது மட்டும் பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.

கவர்னர் மாளிகைக்கு எதிரில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்
கவர்னர் மாளிகைக்கு எதிரில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்

இதற்கிடையில் புதுச்சேரியில் உள்ள 3,20,000 ரேஷன் அட்டைகளுக்கும் இலவச அரிசி வழங்குவதற்காக ஒரு வருடத்துக்கு ரூ.160 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியது காங்கிரஸ் கட்சி. ஆனால், ``அரசு ஊழியர்களுக்கும் வசதியுள்ளவர்களுக்கும் ஏன் இலவச அரிசியை வழங்க வேண்டும்? கணக்கெடுப்பு நடத்தி வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் இலவச அரிசியை வழங்குங்கள். அரிசிக்குரிய பணத்தைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்” என்று உத்தரவிட்டார் கிரண்பேடி.

இந்த விவகாரம் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் பூதாகரமாக வெடித்ததால், அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பணத்துக்குப் பதில் அரிசி வழங்குவது என்று தீர்மானத்தை நிறைவேற்றி, அதன் நகலுடன் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கவர்னர் கிரண் பேடியை சந்தித்தார்கள். ஆனால், கிரண்பேடி அந்தத் தீர்மானத்தை ரத்து செய்ததால் வெளிநடப்பு செய்த முதல்வர் நாராயணசாமி, ``மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதை ஆளுநர் கிரண்பேடி தடுக்கிறார்” என்று காட்டமாகப் பேட்டி கொடுத்தார்.

அரிசி
அரிசி

ஆனால் ``ஏழைகளுக்கு அரிசி வழங்குவதை ஆளுநர் மாளிகை எதிர்க்கவில்லை. தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். தவிர, அரசாங்கம் நேரடியாக அரிசியை வாங்கக் கூடாது. மக்களிடம் அதற்கான பணத்தை தந்து, அதன் மூலம் அவர்களே பிடித்த அரிசியை வாங்க வேண்டும். உள்ளூர் கடைகளில் அரிசி வாங்குவதால் இங்குள்ள வர்த்தகர்களும் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். அதனால் உடனடியாகப் பயனாளிகள் கணக்கில் அரிசிக்கான பணத்தை தாருங்கள் எனக் கோருகிறோம்” என்று பதிலடி கொடுத்தார் கிரண்பேடி.

அதேசமயம், ``கோடிக்கணக்கில் கிடைக்கும் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு `மனிதர்கள் பயன்படுத்துவதற்கு தகுதியற்றது’ (Unfit for human consumption since it contains living insects) என்று ஆய்வுகள் கூறிய அரிசியை மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். அந்த அரிசியை உட்கொள்வதால் மக்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்கிறார் அரசு ஊழியர்கள் சங்க மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லட்சுமணசாமி. அதேபோல ``ஒரு கிலோ அரிசிக்கு 2 ரூபாய் கமிஷனாகப் பெற்று ஊழல் செய்கிறார்கள்.

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ சாமிநாதன்
பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ சாமிநாதன்

இதன்மூலம் வருடத்துக்கு ரூ.15 கோடி வரை சம்பாதிக்கிறார்கள். பணமாக வழங்கினால் இந்தச் சம்பாத்தியம் போய்விடும் என்றுதான் அரிசி வழங்கத் துடிக்கிறார்கள். இந்த முறைகேடுகள் தொடர்பாக 3 சி.பி.ஐ வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன” என்று பகீர் குற்றச்சாட்டை கிளப்பினார் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான சாமிநாதன்.

இவற்றை ஏற்காத முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, தேர்தல் வாக்குறுதிப்படி இலவச அரிசியைக் கொடுத்தே தீர்வோம் என்ற முடிவில் தீர்மானமாக நின்றது. இந்தநிலையில்தான் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்குமாறு இலவச அரிசிக் கோப்பை மத்திய உள்துறைக்கு அனுப்பினார் கவர்னர் கிரண்பேடி. அதற்கு மத்திய அரசு தற்போது பதில் அனுப்பியுள்ளது.

கிரண்பேடி
கிரண்பேடி

அதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``மத்திய அரசு 2015-ம் ஆண்டு இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 6.5 லட்சம் பயனாளிகளுக்கு மாதத்துக்கு 5 கிலோ அரிசி என்ற அடிப்படையில், அதற்கான பணத்தை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தியது. இதற்கிடையே புதுவை அரசு தனியாக அனைவருக்கும் இலவச அரிசி திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோவும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மக்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோவும் அரிசி வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் போதிய நிதி இல்லாததால், கடந்த 43 மாதங்களில் விட்டுவிட்டு 17 மாதங்களுக்கு அரிசியும் 10 மாதங்களுக்கு பணமும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே இலவச அரிசி திட்டம் தொடர்பாக நிறைய புகார்கள் என்னிடம் வந்தன. தரமற்ற அரிசி வழங்கியதாக ஒரு அரிசி விநியோகஸ்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விஜிலன்ஸ் விசாரணையில் மனிதன் உண்ணுவதற்குத் தகுதியுள்ள அரிசி அல்ல என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததோடு, அரசின் நிதி மடைமாற்றம் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. எனவே, நான் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் நேரடியாகப் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் அரிசிக்கான பணத்தை வழங்கும்படி கடந்த 1.4.2019 அன்று உத்தரவிட்டேன்.

நாராயணசாமி
நாராயணசாமி

ஆனால், கடந்த 7.6.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் அரிசி வழங்க வேண்டும் என முடிவு எடுத்தனர். இந்த விவகாரத்தில் அமைச்சரவைக்கும் நிர்வாகிக்கும் இரு வேறு கருத்துகள் ஏற்பட்டதால் இலவச அரிசி தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு 5.9.2019 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தற்போது மத்திய அரசு ஒரு முடிவு எடுத்து அதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளது. அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரிசிக்குப் பதிலாக பணம் வழங்குவதையே தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரிசின் முடிவுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் முறைகேடுகள் முழுமையாகக் களையப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் கிரண்பேடி.

அதைத் தொடர்ந்து, ``மத்திய அரசின் இந்த முடிவு புதுச்சேரி அரசுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது. மாநில அரசின் கொள்கையை மாற்றி அமைக்க ஆளுநருக்கோ, மத்திய உள்துறைக்கோ அதிகாரமில்லை” என்று வழக்கம்போல பேசிவிட்டு கடந்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி கொடுப்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. புதுச்சேரியில் தற்போது இரண்டு விதமான ரேஷன் அட்டைகள் நடைமுறையில் இருக்கின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு சிவப்பு அட்டையும் மேலே உள்ளவர்களுக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்படுகிறது.

`டெல்லியை உலுக்கிய பேரணி... ஒற்றைத் தலைமை!' - யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?

நடைமுறையில், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களும் அரசு ஊழியர்களும்தான் அதிக அளவு சிவப்பு அட்டைதாரர்களாக இருக்கின்றனர். கிரண்பேடி இதைக் கண்டுபிடித்ததால்தான் கணக்கெடுப்பு நடத்தி தேவைப்படுபவர்களுக்கு மட்டும் இலவச அரிசியை வழங்குங்கள் என்று கூறினார். ஆனால் ``ஏழை மக்களுக்கு அரிசி கொடுப்பதை கவர்னர் தடுக்கிறார்” என்று கிரண்பேடி சொன்னதை அப்படியே திரித்துவிட்டனர் ஆட்சியாளர்கள்.

இலவச அரிசி
இலவச அரிசி
ஒன் நேஷன், ஒன் ரேஷன் திட்டம்... தமிழகத்துக்கு வரமா, சாபமா?

``கடுமையான நிதிச் சிக்கலில் தவித்துவரும் நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களைக் கணக்கெடுத்து அந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஏழை மக்களுக்காவது அந்தப் பயன் முழுமையாகச் சென்றடைந்திருக்கும். குறைந்தபட்சம் இலவச அரிசி வேண்டாம் என்பவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் எழுதிக் கொடுக்கலாம் என்று ஒரு அறிவிப்பையாவது வெளியிட்டிருக்கலாம். ஆனால், இது எதையுமே செய்யாததால் ரேஷன் கடைகளுக்கும் குடிமைப்பொருள் வழங்கும் துறைக்கும் மூடுவிழா நடத்த அடித்தளமிட்டிருக்கிறது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு” என்று குமுறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு