Published:Updated:

களத்துக்கு வந்த புரட்சி நாயகன்... நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த கதை!

விஜயகாந்த்

ஆளுமைமிக்க தலைகள் யாருமில்லாத, தமிழக அரசியல் மைதானத்தில், ஆளாளுக்கு ஸ்கோர் செய்ய நினைக்க, கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருபெரும் ஆளுமைகள் இருக்கும்போதே களத்தில் இறங்கி அடித்து ஆடியவர் நடிகர் விஜயகாந்த்.

களத்துக்கு வந்த புரட்சி நாயகன்... நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த கதை!

ஆளுமைமிக்க தலைகள் யாருமில்லாத, தமிழக அரசியல் மைதானத்தில், ஆளாளுக்கு ஸ்கோர் செய்ய நினைக்க, கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருபெரும் ஆளுமைகள் இருக்கும்போதே களத்தில் இறங்கி அடித்து ஆடியவர் நடிகர் விஜயகாந்த்.

Published:Updated:
விஜயகாந்த்
ஆளுமைமிக்க தலைகள் யாருமில்லாத, தமிழக அரசியல் மைதானத்தில், ஆளாளுக்கு ஸ்கோர் செய்ய நினைக்க, கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருபெரும் ஆளுமைகள் இருக்கும்போதே களத்தில் இறங்கி அடித்து ஆடியவர் நடிகர் விஜயகாந்த்.

ஸ்டைலால் ரஜினியும், ஜனரஞ்சக நடிப்பால் கமலும் தமிழ்த்திரை உலகில் பல ரசிகர்களைக் கொண்டிருந்த நேரத்தில் இயல்பான நடிப்பாலும் பேச்சாலும், சமூகக் கருத்துகளாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் நடிகர் விஜயகாந்த். நுழைந்த சிலவருடங்களிலேயே, வெளிப்படையானவர், வெள்ளந்தி மனிதர், உதவும் குணம் உடையவர் என மற்ற நடிகர்களிடமிருந்து தனித்த அடையாளமானார் விஜயகாந்த்.

ரசிகர் மன்ற செயல்பாடுகள்!

நடிக்க ஆரம்பித்த வெகு சில காலத்திலேயே அவரின் நெருங்கிய நண்பர்களால் அவர் பெயரில், ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அது குறுகிய காலத்திலேயே பல்லாயிரமாகப் பெருகியது. இலவச தையல் மெஷின் வழங்குவது; மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது; இலவசத் திருமணங்கள் நடத்தி வைப்பது; வருடந்தோறும் தன் சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென 25 லட்ச ரூபாய் ஒதுக்குவது... எனத் தனி சேவை சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தார். அரசியல் நோக்கத்தோடு இவை எல்லாவற்றையும் செய்யாவிட்டாலும்கூட, ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்து இவற்றை எல்லாம் ஏன் செய்யக்கூடாது என நினைக்கத் தொடங்கினார் விஜயகாந்த். அதற்குக் காரணமாய் அமைந்தது தன் மன்ற நிர்வாகிகளுக்கு அரசியல் கட்சிகளும் ஆளும் அரசின் காவல்துறையும் கொடுத்த நெருக்கடிகள்தான் என தன் அரசியல் வருகைக்கு அறிமுகமும் தந்தார் நடிகர் விஜயகாந்த். ஆனால், 2000-ம் ஆண்டிலேயே, தன் மன்றத்துக்கென, தனிக்கொடியை உருவாக்கினார் விஜயகாந்த்.

Vijayakanth
Vijayakanth

அரசியல் என்ட்ரி!

2001- ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், விஜயகாந்த்தின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுயேச்சையாகப் போட்டியிட்டு கணிசமான வெற்றியையும் பெற்றிருந்தனர். 2002–ல் ராஜ்ஜியம் படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கியது. அப்படி, விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டதாலேயே ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகள் கொடுத்து வந்தன. அதேவேளையில், அரசியலுக்கு வர, சரியான களத்துக்காக, காரணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார் நடிகர் விஜயகாந்த். 2004-ம் ஆண்டு அவருக்குச் சரியான வாய்ப்பாக அமைந்து. 2002-ல் பாபா பட விவகாரத்தால் ரஜினிக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே மிகப்பெரிய யுத்தம் வெடித்தது. அது 2004 நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடித்தது. மறுபுறம் அந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஒட்டுமொத்த தமிழ்த் திரை உலகமும் ராமதாஸுக்கு எதிராகக் கொந்தளிக்க. அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த்தான் அதற்குக் காரணம் என, அவரின் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் ராமதாஸ். கள்ளக்குறிச்சியில் தன் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் விஜயகாந்த் வருகையை முன்னிட்டு கட்டப்பட்ட மன்றக் கொடிக் கம்பங்களை பா,ம.கவினர் வெட்டிச் சாய்த்ததாகச் சொல்லப்பட்டது.

விஜயகாந்த் Vs ராமதாஸ்

அதைத் தொடர்ந்து, அந்த நிகழ்வில் பேசிய விஜயகாந்த். ``தன் சுயநலத்துக்காகச் சாதிய அரசியலைக் கையிலெடுக்கிறார்" என ராமதாஸையும் ``மக்களைச் சந்திக்காமல் எம்.பி ஆவதே தப்பு. அதுலயும் மந்திரி ஆவது அயோக்கியத்தனம்’’ என அப்போதுதான் ராஜ்யசபா எம்.பியாகி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மந்திரியும் ஆகியிருந்த ராமதாஸின் மகன் அன்புமணியையும் விமர்சிக்க, அது ராமதாஸை இன்னும் கோபமுறச் செய்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய ராமதாஸ், தேர்தலில் போட்டியிடாமல் தமிழக அரசியலில் பதவி வகித்த தலைவர்களை அடுக்கியதோடு மட்டுமல்லாமல் அரைவேக்காடு எனவும் விஜயகாந்தை விமர்சித்தார். இது விஜயகாந்த் ரசிகர்களிடத்தில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது ராமதாஸ்- விஜயகாந்த் மோதல், பா.ம.க தொண்டர்கள் – விஜயகாந்த் ரசிகர்கள் என விரிவடையத் தொடங்கியது. பல இடங்களில் விஜயகாந்தின் மன்றக் கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட மன்ற நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். விஜயகாந்த் நடித்த கஜேந்திரா படத்துக்கு ராமதாஸால் சிக்கல் எழுந்தது. விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வட மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

ராமதாஸ் - விஜயகாந்த்
ராமதாஸ் - விஜயகாந்த்

சுற்றுப்பயணம்!

கண்கள் சிவக்க வெகுண்டெழுந்தார் நடிகர் விஜயகாந்த். ஊர் ஊராகச் சென்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க ஆரம்பித்தார். சென்ற இடங்கள் எல்லாம் விஜயகாந்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது, விஜயகாந்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் கட்சி அறிவிப்பு, ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதி, மாநாடு அறிவிப்பு என அதிரடி காட்டத் தொடங்கினார் விஜயகாந்த். ராமதாஸுக்கு எதிராக ரஜினி கட்சி தொடங்குவார் என ஒட்டு மொத்த தமிழகமும் வழக்கம்போல அவரின் ரசிகர்களும் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் அதிரடியாகக் களத்துக்கு வந்தார் நடிகர் விஜயகாந்த். அந்த நேரத்தில் கோயம்பேடு மேம்பால விரிவாக்கத்துக்காக விஜயகாந்தின் மண்டபம் கையகப்படுத்த இருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து விஜயகாந்துக்கு நோட்டீஸ் பறந்தது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

கட்சி தொடக்கம்!

2005 செப்டம்பர் 14 மதுரையில் தன் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். ஒட்டு மொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் திரண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியின் பெயர், நோக்கம், கொள்கைகள் ஆகியவற்றை அறிவித்தார் நடிகர் விஜயகாந்த். இதுவரை ஆட்சி செய்து கொண்டிருந்த இரு திராவிட கட்சிகளுக்கு மாற்று, ஊழல் ஒழிப்பு இதுதான் முதன்மைக் கொள்கைகள். `புரட்சி வந்தால் அரசியலுக்கு வருகிறேன்’ என இப்போது ரஜினிகாந்த் சொல்லிக்கொண்டிருக்க, 15 ஆண்டுகளுக்கு முன்பே, நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய, ஊழலை ஒழிக்கக் களத்துக்கு வந்த புரட்சி நாயகனாகத்தான் அப்போது விஜயகாந்த் பார்க்கப்பட்டார். அடிப்படையில் எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தாலும் திரைத்துறைக்கு வந்த பிறகு கருணாநிதியோடே நெருக்கமாக இருந்தார் விஜயகாந்த். நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதியின் திரைத்துறையில் பொன்விழா ஆண்டு விழாவில் தங்கப்பேனாவையும் பரிசளித்தார். ஆனால், அரசியல் வருகைக்குப் பிறகு தன்னை எம்.ஜி.ஆரின் வழித்தோன்றலாகவே காட்டிக்கொள்ள முனைந்தார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

ஜானகி அம்மையார் பரிசளித்த எம்.ஜி.ஆரின் பிரசார வாகனத்தையே தன் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார் விஜயகாந்த். அப்போது ஆளும்கட்சியாக இருந்த ஜெயலலிதாவை விட்டு கருணாநிதியையே அதிகமாக விமர்சித்தும் வந்தார். அதற்கு அவரின் கல்யாண மண்டப இடிப்பு அறிவிப்பு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. அப்போது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக தி.மு.கவின் டி.ஆர்.பாலு பதவி வகித்து வந்தார் என்பதே அதற்குக் காரணமாக இருந்தது.

மாஸ் காட்டிய முதல் தேர்தல்!

வந்தது, 2006 சட்டமன்றத் தேர்தல். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 232 தொகுதியில் தனித்துப் போட்டியிட்டது தே.மு.தி.க.கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்துப் போட்டியிட்ட மற்ற யாரும் மக்கள் மத்தியில் மிகப்பெரும் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால், 8.45 சதவிகித வாக்குகள் பெற்று இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் அதுவரை வட மாவட்டங்களில் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருந்த பா.ம.கவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து தே.மு.தி.க.

முதல் தேர்தலில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம்
முதல் தேர்தலில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம்
Vikatan Infographics

தி.மு.கவின் மெகா வெற்றியைச் சிதைத்ததும் அ.தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாகவும் தே.மு.தி.கவின் வாக்குகளே காரணம் என அப்போது சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 100 தொகுதிகளுக்கும் மேலாக, வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக தே.மு.தி.கவின் வாக்குகளே இருந்தன. வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விருத்தாசலம் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் கோவிந்தசாமியைத் தோற்கடித்து முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார் விஜயகாந்த். தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது தே.மு.தி.க. அதே நேரத்தில் விஜயகாந்தின் மண்டபம் இடிக்கப்பட ``என் அரசியல் வளர்ச்சி பொறுக்காமல்தான் என் மண்டபத்தை இடிக்கின்றனர்’’ என தி.மு.கவின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் . ``மாற்றுத் திட்டங்கள் கொடுத்தும் என் மண்டபம் வேண்டுமென்றே இடிக்கப்பட்டுள்ளது’’ எனக் கடுமையாக விமர்சித்தார் விஜயகாந்த். ஆனால், விஜயகாந்த் கொடுத்த திட்டத்தில் பல பகுதிகளுக்குச் செல்ல பாதையே இல்லை என நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

Vijayakanth
Vijayakanth

மிரள வைத்த வாக்கு சதவிகிதம்!

தே.மு.தி.க பெற்ற வாக்கு சதவிகித்தை புரிந்துகொண்ட இரண்டு திராவிடக் கட்சிகளும், தொடர்ந்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வலைவிரிக்க, பிடிகொடுக்காத தே.மு.தி.க மீண்டும் தனித்தே களம் கண்டது. விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மாபா பாண்டியராஜன் மட்டுமே ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமானவர்களாக இருக்க, 10.45 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பெரும்பாலான தொகுதிகளில் 50,000-த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர் தே.மு.தி.க வேட்பாளர்கள்.

தமிழகத்தில் மிகப் பெரிய பலம் வாய்ந்த மூன்றாவது கட்சியாக தே.மு.தி.க வளர்ந்தது.

கூட்டணி முடிவு!

தொடர்ச்சியாக வந்தது 2011 சட்டமன்றத் தேர்தல். தே.மு.தி.கவின் எழுச்சியும் வீழ்ச்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது. அதுவரை ஆட்சியில் இருந்த தி.மு.கவின் மீது கடுமையான எதிர்ப்பலை மக்கள் மத்தியில் இருந்து. அதுவரை, மக்களுடனும் கடவுளுடனும்தான் கூட்டணி எனப் பேசிவந்த விஜயகாந்த், சேலத்தில் நடந்த மக்கள் உரிமை மாநாட்டில் கூட்டணிக்குச் செல்வது குறித்து தொண்டர்களிடம் கருத்துக் கேட்டார். தன் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி செல்வதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த், அருகில் பண்ருட்டி ராமசந்திரன்
சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த், அருகில் பண்ருட்டி ராமசந்திரன்

அ.தி.மு.கவுடன் கூட்டணி & எதிர்க்கட்சித் தலைவர் பதவி!

2006-11 வரையிலான `தி.மு.கவின் குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு, கரண்ட் கட்' ஆகியவற்றை காரணமாகச் சொல்ல அ.தி.மு.கவுடன் கூட்டணி செல்வதாக அறிவித்தார் விஜயகாந்த். கடந்த முறை போல, இந்தமுறையும் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது எனக் கண்ணும் கருத்துமாக இருந்த ஜெயலலிதாவும் விஜயகாந்தோடு கூட்டணி வைக்க மிகுந்த ஆவலோடு இருந்தார். அதுவரை விமர்சித்துக்கொண்டதெல்லாம் காற்றில் பறந்து கூட்டணி ஒப்பந்தமும் கையொப்பமானது. தே.மு.தி.கவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது தே.மு.தி.க. வாக்கு சதவிகிதம் 7.9 ஆகக் குறைந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது விஜயகாந்துக்கு.

அ.தி.மு.கவுடன் மோதல் & எம்.எல்.ஏக்கள்- ஜெ சந்திப்பு!

தேர்தல் முடிந்து சில மாதங்கள்தான் அ.தி.மு.கவுக்கும் தே.மு.தி.கவுக்கும் இடையே முட்டத் தொடங்கியது. பால்விலை உயர்வு, பேருந்துக்கட்டண உயர்வு குறித்த விவாதத்தில், சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான மோதல் வெடிக்க, ஜெயலலிதாவின் முன்னிலையிலேயே, விஜயகாந்த் நாக்கைத் துருத்தி `ஏய்ய்...' என அ.தி.மு.கவினரை எச்சரிக்கை செய்தார். விஜயகாந்தின் இந்தச் செயலுக்கு, வெளியில் மட்டுமல்லாது. கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் வெடிக்கத் தொடங்கின. கட்சியின் பொருளாளரும் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏவுமான சுந்தர்ராஜன், தே.மு.தி.க திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ, தமிழழகன் ஆகிய இருவரும், விஜயகாந்தின் அனுமதி இல்லாமலேயே ஜெயலலிதாவைச் சந்தித்தனர். விஜயகாந்த் அதைக் கண்டிக்க, தொகுதி வளர்ச்சிக்காகச் சந்தித்ததாகவும், அதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவை இல்லை எனவும் சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போனார் விஜயகாந்த். தொடர்ச்சியாக தே.மு.தி.க எம்.எல் ஏ-க்கள் `தொகுதி வளர்ச்சிக்காக' முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கத் தொடங்கினர்.

சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்...
சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்...

மாபா.பாண்டியராஜன், நடிகர் அருண் பாண்டியன் உள்ளிட்ட எட்டு எம்.எல்.ஏக்கள் அப்படிச் செல்ல, தே.மு.தி.க கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகத் தொடங்கியது. மற்றவர்கள் போனதுகூட பரவாயில்லை, ஆனால், தன் நீண்ட கால நண்பர் சுந்தர்ராஜன் மற்றும் சினிமாத்துறை நண்பர் அருண் பாண்டியன் சென்றதை விஜயகாந்தால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. மறுபுறம், ஆளும்கட்சியினரின் கிண்டலையும் கேலியையும் சமாளிக்க முடியாத விஜயகாந்த் சட்டமன்றமா அது எங்க இருக்கு எனும் கேட்குமளவுக்கு மட்டம் போடத் தொடங்கினார். ஆளும் கட்சிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக எந்தவித நடவடிக்கைகளும் தே,மு.தி.க மேற்கொள்ளவில்லை. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதிலிருந்து நழுவினார் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து, கட்சியில் இருந்து விலகாமல் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக செயல்பட்டு வந்த எட்டு எம்.எல் ஏக்களும், 2016 பிப்ரவரியில் தங்களின் எம்.ஏல்.ஏ வை பதவியை ராஜினாமா செய்ய, எதிர்க்கட்சித் தலைவர் என்கிற என்கிற அந்தஸ்தையும், தன்னால் பதவிக்கு வந்தவர்களாலேயே இழந்தார் விஜயகாந்த். ஒருபுறம் விஜயகாந்தின் அரசியல் இமேஜ் மெல்ல மெல்லச் சரிந்து வர, மறுபுறம் அவரின் உடல்நிலையும் மோசமானது. வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பவும், 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரவும் சரியாக இருந்தது.

சரிந்த வாக்கு வங்கி!

தேர்தலை முன்னிட்டு, உளுந்தூர் பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தினார் விஜயகாந்த். அங்கே கட்சித் தொண்டர்களிடம், ``கடந்த காலத்தில் கூட்டணிக்குச் சென்று பட்ட துன்பங்கள் அதிகம். இனி கூட்டணியே வேண்டாம், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’’ என தொண்டர்களைப் பார்த்துக்கேட்க அவர்களும், `வேண்டாம் வேண்டாம்’ என்றே குரல் எழுப்பினர். தே.மு.தி.கவில், தி.மு.கவும் இருக்கிறதே என கருணாநிதி அழைப்பு விட்டுப் பார்த்தும், அந்தத் தேர்தலில், யாரைத் தன் அரசியல் எதிரியாகக் கருதினாரோ, அதே ராமதாஸ் அங்கம் வகித்த தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். அவருக்கு அந்தக் கூட்டணியில் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் முடிவுகளும் வந்தன. ஒரு இடத்தில்கூட தே.மு.தி.கவால் வெற்றிபெற முடியவில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகள் சரிபாதியாகக் குறைந்து போனது. 2011-14 வரையில் தே.மு.தி.கவின் விஜயகாந்தின் இமேஜ் சரிய, 2014 தேர்தலில் அந்தக் கட்சிக்கு இருந்த வாக்கு வங்கியும் சரிவைக் கண்டது.

விஜயகாந்த்
விஜயகாந்த்
விகடன்

முதல்வர் வேட்பாளர்

தே.மு.தி.க இனி அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில், அது இல்லை என நிரூபித்தது 2016 தேர்தலில் தே.மு.திகவுக்கு கட்சிகள் மத்தியில் எழுந்த டிமாண்ட். பி.ஜே.பி, மக்கள் நலக்கூட்டணி, தி.மு.க பல கட்சிகள் தே.மு.தி.கவை நோக்கிப் படையெடுத்தன. பழம் நழுவிப் பாலில் விழும் எனக் கடைசிவரை தங்களின் கூட்டணிக்குள் வந்துவிடுவார் என நம்பிக்கையோடு இருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. ஆனால், அவரின் நம்பிக்கையை மட்டுமல்லாமல், தன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் நம்பிக்கையையும் உடைத்த விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைய முடிவெடுத்தார். அதுவரை விஜயகாந்தின் வலதுகரமாக, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்பட்டு வந்த சந்திரக்குமார், சேலம் பார்த்திபன் போன்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இணைந்து, ``இது மக்களின், தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக எடுத்த முடிவு. எனவே இதை மாற்றிக்கொள்ளவேண்டும் '' என கால அவகாசம் கொடுத்தனர். ஆனால், அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத விஜயகாந்த் அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். விஜயகாந்த் சொந்தக் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சம்பவம் இது.

``கட்சி நிர்வாகிகளுடன், கட்சி அலுவலகத்தில் இருக்கும்போது ஒரு முடிவு எடுக்கும் விஜயகாந்த். வீட்டுக்குச் சென்றதும் தன் முடிவுகளை மாற்றி வேறு ஒரு முடிவை அறிவிப்பார். கட்சி கேப்டனின் கைகளில் இருந்து அண்ணியின் கைகளுக்கு முழுமையாகப் போய்விட்டது’’
தே.மு.தி.கவில் இருந்து விலகிய நிர்வாகிகளின் விமர்சனம்

தே.மு.தி.கவுக்குள் நிலவி வந்த குடும்ப ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியது. எந்த குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து கட்சி தொடங்குவதாக அறிவித்தாரோ, அதே ஆதிக்கம் தன் மனைவி, மைத்துனர் மூலம் தன் கட்சியில் உண்டான போது கண்டுகொள்ளாமல் போனார் விஜயகாந்த். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், மக்கள் தே.மு.தி.க எனச் செயல்படத் தொடங்கி பின்னர் தி.மு.கவில் ஐக்கியமானார்கள். மறுபுறம், ம.தி.மு.க, இரண்டு கம்யூனிஸ்ட்கள், வி.சி.க ஆகியோர் அடங்கிய மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், யார் எந்தத்துறைக்கு அமைச்சர் என்றெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த் மைத்துனரும் இளைஞரணிச் செயலாளருமான சுதீஷ்.

தேர்தலில் படு தோல்வி!

அந்தத் தேர்தலில், 104 தொகுதிகளில் போட்டியிட்டு 103 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது தே.மு.தி.க. கட்சியின் நிறுவனர் விஜயகாந்தே உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் டெபாசிட்டை இழந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார் தனித்துப் போட்டியிட்டபோது, 10.08 சதவிகிதத்தைத் தொட்ட தே.மு.தி.கவின் வாக்கு சதவிகிதம், 2.39 ஆகக் குறைந்தது. கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தபோது, எனக்கு கிங் மேக்கராக இருக்க விருப்பமில்லை. கிங்காக இருக்கத்தான் விருப்பம் என பேசிய விஜயகாந்த் ஜோக்கராகிப் போன காலகட்டமும் இதுதான். தேர்தல் தோல்வி மட்டுமல்லாது. மேடையில் தொடர்பற்ற மற்றும் தெளிவில்லாத பேச்சு, பொதுவெளியில் தன் கட்சிக்காரர்களை அடிப்பது, திட்டுவது, பத்திரிகையாளர்களை `தூ' எனத் துப்புவது எனத் தனிப்பட்ட முறையிலும் தன் மொத்த இமேஜையும் இழந்திருந்தார் நடிகர் விஜயகாந்த்.

Vijayakanth
Vijayakanth
மிச்சம் மீதியிருந்த, தே.மு.தி.கவின் இமேஜ் பர்னிச்சரை உடைத்த சம்பவம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அரங்கேறியது.

சரிந்த இமேஜ்!

ஒருபுறம் அ.தி.மு.க கூட்டணியில் இணைய, பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை, மறுபுறம் தி.மு.கவுடன் பேச்சு நடத்த ஆள் அனுப்பி வசமாக மாட்டிக்கொண்டார் பிரேமலதா. அரசியலில் இது சகஜமான ஒன்றுதான் என்றாலும் வெளிப்படையாக மாட்டிக்கொண்டதால் மிச்சம் மீதிருந்த தே.மு.தி.கவின் இமேஜை மொத்தமாகச் சரித்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இதே தேசிய ஜனநாயகக் கூட்டணியில், 8 இடங்களைப் பெற்ற பா.ம.கவுக்கு, 2019 தேர்தலில், ராஜ்யசபாவுடன் சேர்த்து 8 ஒப்பந்தமாக, 2014-ல் 14 இடங்களைப் பெற்ற தே.மு.தி.கவுக்கு வெறும் நான்கு இடங்கள் மட்டுமே ஒப்பந்தமானது. தி.மு.க - அ.தி.மு.கவுக்கு மாற்றாகப் பார்க்கப்பட்ட கட்சி, பா.ம.கவை விடவும் பின்னுக்குப் போய் பரிதாபமாகக் காட்சியளித்தது. தேர்தல் முடிவுகளும் வந்தன. ஒரு இடத்தில்கூட தே.மு.தி.கவால் வெற்றிபெற முடியவில்லை. தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தே.மு.தி.கவுக்கு மரண அடி, இடைத்தேர்தலில் நோட்டாவுக்கும் குறைவாகவே வாக்குகள் கிடைத்தன. ராஜ்யசபா சீட் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்க, அதுவும் ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கப்பட்டது.

பிரேமலதா, விஜயகாந்த்
பிரேமலதா, விஜயகாந்த்

பிரேமலதாவின் ஆதிக்கம்

2016 தேர்தலில் கட்சி எடுத்த தவறான முடிவால் அங்கே இப்போது கட்சி அமைப்பே இல்லை. 90 சதவிகிதம் பேர் தி.மு.கவை நோக்கி நகர்ந்து வந்துவிட்டார்கள். இன்னும் பத்து சதவிகிதம் பேர்தான் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். கூட்டத்துக்கு 1000, 500 பேர் திரட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறார்கள். `கட்சிக்குள் அந்த அம்மா பிரேமலதாவின் ஆதிக்கத்தைச் சொல்லித்தான் நாங்கள் கட்சியை விட்டு வெளியில் வந்தோம். இப்போதும் அதேநிலைதான் நீடிக்கிறது’ அதுதான் தே.மு.தி.கவின் இந்த நிலைக்குக் காரணம். 2009 வரை கட்சி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அந்த அம்மாவின் ஆதிக்கம் வந்த பிறகுதான் கட்சி சீரழிந்து போனது. விஜயகாந்தின் ஆரம்பக் கால நண்பர்களான சுந்தர்ராஜன், ராமுவசந்தன் ஆகியோர் மிகவும் வருத்தத்தோடுதான் கட்சியில் இருந்தார்கள். ராமுவசந்தன் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். சுந்தர்ராஜன் அ.தி.மு.க பக்கம் போனார். 2011 தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கத்தான் விஜயகாந்தும் விரும்பினார். அந்த அம்மாதான் (பிரேமலதா) ஜெயலலிதாவின், சசிகலாவின் பேச்சைக் கேட்டு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார். அந்த அம்மாவின் பேராசைதான் கட்சியை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பார்த்திபன், எம்.பி
பார்த்திபன், எம்.பி
பார்த்திபன், எம்.பி

தோல்வியால் விலகல்!

``நாங்கள் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வாக்கு சதவிகித்தை, கூட்டணியில் போட்டிபடும் போது பெறும் வாக்குகளை வைத்து ஒப்பிடுகிறார்கள் இது தவறு. அதனால்தான் குறைந்திருக்கிறது.'' என்கிறார் தே.மு.தி.கவின் தலைமை நிலையைச் செயலாளர் பார்த்தசாரதி. கட்சியில் விஜயகாந்தின் குடும்ப ஆதிக்கம், பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறியது குறித்துக் கேட்டதற்கு, ``வெற்றி பெறும்போது உடன் இருந்தார்கள். தோல்வி அடைந்ததும் போய்விட்டார்கள். அவ்வளவுதான் வெறெந்தக் காரணமும் இல்லை'' என்கிறார் ஆணித்தரமாக.

விஜயபிரபாகரன் திமிர்ப் பேச்சு!

2018-ல் கட்சியின் பொருளாளராகப் பதவியேற்ற பிரேமலதா பொதுவெளியிலும் மிகச் சர்வாதிகாரமாக நடந்து கொண்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ` நீ, வா, போ, என் கட்சிக்குக் கொள்கை இல்லைன்னு உனக்குத் தெரியுமா?’ நீங்க என் வீட்டு வாசலையும், கட்சி வாசலையும் பழியா கெடந்தா நான் உடனே பதில் சொல்லணுமா?'' என ஏக வசனத்தில் பேசி, அவர் நடந்துகொண்டவிதம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. பிரேமலதாவது பரவாயில்லை, மன்ற செயல்பாடுகளில் இருந்து அரசியல் கட்சியாக மாற்றப்பட்டதுவரை விஜயகாந்த் உடனிருந்து வேலை செய்திருக்கிறார். நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், ``கூட்டணிக்காக எல்லோரும் மறைமுகமாக எங்கள் காலில் விழுகிறார்கள்'' எனச் சின்னப்பிள்ளைத்தனமாகப் பேசியது, மற்ற கட்சியினர் மத்தியில் வெறுப்புணர்வையே விதைத்தது. கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், குடும்ப ஆதிக்கத்தைக் கட்டுக்குள் வைத்து முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவதைத் தவிர்த்திருந்தால் ஜெயலலிதா, கருணாநிதி எனும் இருபெரும் ஆளுமைகள் இல்லாத இந்த அரசியல் களத்தை நிச்சயமாக விஜயகாந்த் கைப்பற்றியிருக்கலாம்.

பிரேமலதா
பிரேமலதா

விஜயகாந்தின் தீவிர ரசிகரும், கட்சி ஆரம்பித்து முதல் இன்று வரை கட்சியில் பயணித்து வருபவருமான திருமங்கலத்தைச் சேர்ந்த சித்திரக்குமாரிடம் பேசினோம்...

தமிழகத்தில் எங்கள் தலைவர் கட்சி ஆரம்பித்தபோது கிடைத்த வரவேற்பு யாருக்கும் கிடைக்கவில்லை. காசு, பிரியாணி கொடுக்காமலேயே லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். கட்சியை விட்டு பலர் விலகியிருந்தாலும் கேப்டனைப் பிடிக்காமல் யாரும் கட்சியை விட்டுப் போகவில்லை. ஆரம்பக் காலத்தில் பிரேமலதாவை மேடைகளில் எல்லாம் ஏற்றாமல்தான் இருந்தார் கேப்டன். அப்போது, கட்சி நிர்வாகிகள் யாரும் நேரடியாக கேப்டனைச் சந்திக்க முடியும். ஆனால்,அவரின் மனைவி, மைத்துனரின் ஆதிக்கம் அதிகமான பின்னர் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. கேப்டனின் உடல்நிலை மோசமானதுதான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைந்தது. கட்சியின் செயலாளராக இருந்த, ராமுவசந்தன் மறைவு கட்சிக்குப் பெரும் பின்னடைவு. அவர் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் கூட மிக இணக்கமாக இருந்தார். அடுத்ததாக, சந்திரக்குமார் போன்ற நிர்வாகிகளைக் கட்சியை விட்டு நீக்கியதும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியில் இல்லாமல் போனதும் கட்சிக்கு பெரும் பின்னடைவு. ஆனால், கேப்டன் மீதான கரிஷ்மா இன்னும் குறையவில்லை. போன வாரம் மதுரையில் நடந்த கூட்டத்துக்குக்கூட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார். வேறு யாருக்கும் இவ்வளவு கூட்டம் இப்போதும் கூடாது. கேப்டனின் ரசிகர்கள் எல்லோரும் இன்னும் கேப்டன் கூடத்தான் இருக்கிறோம். பதவி ஆசை உள்ளவர்கள்தான் விலகிச் சென்றுவிட்டார்கள்.
சித்திரக்குமார், தே.மு.தி.க
மாற்று என்று வந்த கட்சி, தேர்தல் சீட்டு என்றாகிப் போனது. தேர்தல் நேரத்தில் மட்டுமே அக்கட்சியின் நிர்வாகிகள் வெளியில் வருகிறார்கள். இனிவரும் காலங்களில் தே.மு.தி.க ஏதாவது ஒரு கூட்டணியில், பேரம் பேசி எத்தனை சீட்டுக்களை வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த புதிதில் களத்தில் இறங்கி வேலை செய்த நிர்வாகிகளில், தொண்டர்களில் பலர் எப்பவோ கூடாரத்தை காலி செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்குப் போய்விட்டார்கள். அப்படியே யாரையாவது வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை நம்பி மக்கள் வாக்களிப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.