Published:Updated:

தீ…தி - 2: Mood swing அரசியல்வாதி என ஏன் விமர்சிக்கப்பட்டார் மம்தா பானர்ஜி?!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

‘’மேற்கு வங்கத்தில் சத்தமில்லா புரட்சி ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் வரலாற்றை மாற்றி எழுதிகொண்டிருக்கிறார்கள். புதிய சகாப்தம் தொடங்கப்போகிறது’’ என்று புதுக்கட்சி தொடங்கிய நாளில் பேசினார் மம்தா.

"முதல் தேர்தலில் தோற்பதற்காகப் போட்டியிடுவோம். இரண்டாவது தேர்தலில் நாம் யார் என்று மக்கள் கவனிப்பார்கள். மூன்றாவது தேர்தலில் நமக்கு வெற்றிகிடைக்கும்."
கன்ஷிராம், நிறுவனர், பகுஜன் சமாஜ் கட்சி

1984-ல் பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கியபோது கன்ஷிராம் சொன்னவார்த்தைகள் இவை. எல்லா அரசியல் கட்சிகளுக்கும், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வார்த்தைகள் இது.

1990-களில் உடைந்துவிழும் கட்சியாக இருந்தது காங்கிரஸ். 1996 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி உடைந்தது. உள்ளூர் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து புதுப்புது கட்சிகளை ஆரம்பித்தார்கள். 1996 தேர்தலில் காங்கிரஸ், தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்ததால் ஜி.கே.மூப்பனார் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கினார். இப்படி பல மாநிலத்தலைவர்கள் கட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுப்பட்ட காலம் அது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே கட்சியை வெளிப்படையாக விமர்சித்துப் பேசிகொண்டிருந்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
Twitter/@MamataOfficial

"மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும், மேற்கு வங்காளத்தை ஆளும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் ரகசியக்கூட்டு இருக்கிறது. இந்தக் கள்ளத்தொடர்பு இருக்கும்வரை காங்கிரஸால் மேற்கு வங்கத்தில் எப்போதும் ஆட்சியைப்பிடிக்க முடியாது’’ என்று விமர்சித்தார் மம்தா பானர்ஜி. இதனால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தது. சீதாராம் கேசரி என்பவர் தலைமையில் அப்போதைய காங்கிரஸ் சிதறுண்டு போய் இருந்தது. குஜ்ரால் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டே ஆண்டுகளில் மற்றுமொரு பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாரானது இந்தியா. இந்த சூழலில்தான் 1998 பிப்ரவரியில் நடைபெற்ற இருந்த தேர்தலில் மம்தாவுக்கு போட்டியிட சீட் கிடைப்பதே கஷ்டம் என்கிற சூழல் உருவாகிறது. இத்தனைக்கும் அப்போது கொல்கத்தா தெற்கு தொகுதி எம்பி மம்தா பானர்ஜி.

கட்சியைவிட்டு வெளியேறும் முடிவை மம்தா எடுக்க, சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடக்க ஆரம்பித்தது. ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோதே கட்சி தொடங்குவதற்கான வேலைகளை மம்தா செய்ய, காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. ‘’விலகுகிறேன் என்று சொன்னவரை எப்படி நீக்கமுடியும்?’’ எனக் கொந்தளித்தார் மம்தா.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் கட்சியாக மலர்ந்தது மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ். அஜித் பான்ஜா, சுதிப் பந்யோப்பதாய், முகுல் ராய் ஆகியோர் மம்தாவுடன் இணைந்து கட்சி தொடங்கக் காரணமாக இருந்தார்கள். சாமான்ய மக்களுக்கான கட்சி என்பதைக் குறிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எனப் பெயர்வைத்தார் மம்தா. புல்லிலிருந்து இரண்டு இலைகள் துளிர்த்து எழுவதுபோல கட்சி சின்னத்தையும் அவரே வடிவமைத்தார். ‘’இரண்டு இலைகள் இந்து, முஸ்லீமைக் குறிக்கிறது. ஒன்று கண் என்றால் மற்றொன்று ஜீவன்’’ என்றார் மம்தா பானர்ஜி.

1997 டிசம்பரில் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட மம்தா பானர்ஜி 1998 ஜனவரி 1-ல் புதுக்கட்சித் தொடங்கினார். ‘’மேற்கு வங்கத்தில் சத்தமில்லா புரட்சி ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் வரலாற்றை மாற்றி எழுதிகொண்டிருக்கிறார்கள். புதிய சகாப்தம் தொடங்கப்போகிறது’’ என்று கட்சி தொடங்கிய நாளில் பேசினார் மம்தா. அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை மாத காலமே இருந்தது. ‘’மேற்கு வங்கத்துக்குள் எப்போதும் பாஜகவால் நுழைய முடியாது’’ என்று இப்போதும் சொல்லும் மம்தா தனது முதல் தேர்தலையே பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துதான் சந்தித்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பா.ஜ.க-வுடன் கூட்டணிப்போட்டு மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் 29 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் வெற்றிபெற்றது திரிணாமுல் காங்கிரஸ். குறிப்பாக கொல்கத்தாவின் வடமேற்கு, வடகிழக்கு மற்றும் தெற்கு என மூன்று தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்று கொல்கத்தாவைக் கைப்பற்றியது. கொல்கத்தா தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி 5,03,551 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்துப்போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரைவிட 2 லட்சத்து 24 ஆயிரத்து 81 வாக்குகள் அதிகம். மேலும் தன்னை வெளியேற்றிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரைவிட கிட்டத்தட்ட நான்கரை லட்சம் வாக்குகள் அதிகம். தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தன் தொகுதியில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வாக்குகளைப்பெற்று அனைவரையும் வியக்கவைத்தார் மம்தா. 1996 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இதே தொகுதியில் போட்டியிட்டு பெற்ற வாக்குகளைவிட கிட்டத்தட்ட 70 ஆயிரம் வாக்குகள் அதிகம். 29 தொகுதிகளில் மொத்தமாகக் கிட்டத்தட்ட 90 லட்சம் வாக்குகளைப்பெற்று, போட்டியிட்ட தொகுதிகளில் 35 சதவிகித வாக்குகளைப் பெற்றது திரிணாமுல். முதல் தேர்தலிலேயே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்தது.

1999-ல் ஜெயலலிதாவால் வாஜ்பாய் ஆட்சி கவிழ, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல். 1999 தேர்தலில் மீண்டும் பாஜகவோடு கூட்டணி வைத்து 28 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளைக் கைப்பற்றியது திரிணாமுல். இந்த முறையும் கொல்கத்தாவின் மூன்று தொகுதிகளையும் திரிணாமுல் தக்கவைத்துகொண்டது. இந்த முறையும் நான்கரை லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் மம்தா. ஆனால், பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது மம்தாவின் முதலமைச்சர் கனவை ஒருபோதும் நிறைவேற்றாது என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 25 சதவிகிதத்துக்கும் மேலாக இருக்கும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மம்தா இழக்கிறார் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கவேண்டிய திரிணாமுல் காங்கிரஸால் வெறும் 8 தொகுதிகளையே கைப்பற்றமுடிந்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்பதையே கட்சியின் நோக்கமாகக் கொண்டு கட்சி தொடங்கியவர் முஸ்லிம் வாக்காளர்களைக் கவரவில்லை என்றால் என்றைக்கும் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வரமுடியாது என்கிற விமர்சனங்களில் இருந்த உண்மைத்தன்மையைப் புரிந்துகொண்டார் மம்தா.

சோனியா காந்தி - மாயாவதி மம்தா பானர்ஜி
சோனியா காந்தி - மாயாவதி மம்தா பானர்ஜி

ஆனால், பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்ததால்தான் 1999-ல் ரயில்வே அமைச்சரானார் மம்தா. இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர். முழுக்க முழுக்க மேற்கு வங்கத்தையே மனதில் வைத்து பல்வேறு புதிய ரயில்களை அந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தினார் மம்தா. ஆனால், முஸ்லிம் வாக்குகள் அவரின் மனதை உறுத்தின. தனிக்கட்சி தொடங்கி முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கப்போகும் நேரம். என்ன செய்வது என்று யோசித்த மம்தா, 2001-ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகினார். அப்போது மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு சில வாரங்களே இருந்தன. அப்படியே யூ-டர்ன் போட்டார் மம்தா. எந்தக் கட்சியில் இருந்து பிரிந்தாரோ அதே காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து 2001-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை சந்தித்தார். இந்தத் தேர்தலுக்கு முன்பாகத்தான் இடைத்தேர்தலில் முக்கியமான தொகுதியில் வெற்றிபெற்றிருந்ததோடு, கொல்கத்தா மாநகராட்சி தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

அதனால், இந்தமுறை ஆட்சி நிச்சயம் எனக் கணக்குப்போட்ட மம்தாவுக்கு மிகுந்த அவமானகரமானத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. திரிணாமுல் காங்கிரஸ் 60 இடங்களில் வெற்றிபெற, காங்கிரஸ் 26 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மீண்டும் மேற்கு வங்கத்தில் புத்ததேப் பட்டாசார்ஜி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைத் தக்கவைத்தது. முதலமைச்சர் வேட்பாளரான மம்தா பானர்ஜி இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. நகரங்களில் வெற்றிபெற்ற திரிணாமுல் கட்சியில் சிறு நகரங்களில், கிராமங்களில் வெற்றிபெறமுடியவில்லை. அங்கெல்லாம் கம்யூனிஸிட்டுகளின் கொடியே உயரப் பறக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியது. இரண்டு நாள்களுக்கு வெளியே வராமல், தேர்தல் முடிவுகளைப் பற்றியும் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார் மம்தா பானர்ஜி.

இரண்டு நாள்களுக்குப்பிறகு வெளியேவந்த மம்தா பானர்ஜி தோல்விக்கு பா.ஜ.க-வைக் குற்றம் சாட்டியதோடு, தலைமைத்தேர்தல் அதிகாரியான எம்.எஸ்.கில்லை கடுமையாக விமர்சித்தார். ‘’பா.ஜ.க-வோடு கூட்டு சேர்ந்துகொண்டு கில் தேர்தல் முடிவுகளை மாற்றிவிட்டார். பித்தலாட்டம் செய்துவிட்டார்கள்’’ என்றார் மம்தா.

தீ...தி -1 மம்தா பானர்ஜி தொடர்
தீ...தி -1 மம்தா பானர்ஜி தொடர்

இந்தத் தேர்தலுக்கு முன்புவரை பா.ஜ.க-வோடு கூட்டணியில் இருந்துவிட்டு திடீரென தேர்தலுக்கு முன்பு காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்ததால் அஜித் பாஞ்சா, சுதீப் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகளே மம்தாவை கடுமையாக விமர்சித்தார்கள். சுதீப், திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் துணையோடு போட்டியிட்டார்.

கூட்டணியில் சேருவது பின்னர் கூட்டணியை விட்டு விலகுவது, அமைச்சர் ஆவது, திடீரென ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போய் அமைச்சராவது, காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸோடே சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது என இந்திய அரசியலில் மிகுந்த குழப்பமான, நிலையற்ற ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கப்பட்டார் மம்தா பானர்ஜி. எந்த காங்கிரஸைக் குற்றம் சாட்டினாரோ அவர்களோடே சேர்ந்து தேர்தலைச் சந்தித்தது மிகப்பெரிய விமர்சனமாக எழுந்தது. இவரைப்போன்ற Mood swing அரசியல்வாதிகளால் ஒருகாலத்திலும் தேர்தலில் வெல்ல முடியாது, கம்யூனிஸ்டுகளை அசைக்கமுடியாது என்று தீர்ப்புகள் எழுதப்பட்டன.

எழுதப்பட்ட விமர்சனங்களையும், தீர்ப்புகளையும் எப்படி மாற்றி எழுதவைத்தார் மம்தா, மேற்கு வங்கத்தின் முதல்வராக ஆனது எப்படி, மூன்று தேர்தல்களாகத் தொடர்ந்து வெற்றிபெறுவது எப்படி… அடுத்த வாரம்!

- வங்கம் விடாது!

அடுத்த கட்டுரைக்கு