Published:Updated:

தீ...தி - 3: கலவரங்களில் இருந்து தொடங்கியதா மம்தாவின் மறுமலர்ச்சி?!

காலம் எல்லோருக்குமே இரண்டாவது வாய்ப்பை வழங்கும் என்பார்கள். அப்படி வீழ்ந்துபோய், இனி அரசியல் எதிர்காலமே இல்லை என்கிற நிலையில் இருந்த மம்தாவுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அதிரடியாக!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அரசியலில் காத்திருத்தல் மிகவும் அவசியம். திடீரென புகழ் வெளிச்சத்துக்கு, பெரும்பாலான வாக்குகள் பெற்று அடுத்த தலைவர் இவர்தான் என அடையாளம் காட்டப்படுபவர்கள் பொறுமையிழந்தால் என்னவாகும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். 2005-ல் கட்சி தொடங்கி, 2006 சட்டமன்றத் தேர்தலில் ஒற்றையாளாக வெற்றிபெற்று எம்எல்ஏ ஆன விஜயகாந்த், 2011 தேர்தலில் 29 எம்எல்ஏக்களோடு எதிர்க்கட்சித்தலைவரானார். ஆனால், பொறுமையையிழந்து, காத்திருந்தலை மறந்ததன் விளைவு அடுத்த முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட விஜயகாந்த் வீட்டுக்குள் முடங்கிப்போனார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்குமே ஃபார்ம் பிரச்னை உண்டு. தொடர்ந்து சதங்களாக விளாசும் விராட் கோலி, திடீரென சதம் அடிக்கமுடியாமல் திணறுவார். அவரது கிரிக்கெட் கரியரில் ஒரு சின்ன இடைநிறுத்தம் ஏற்படும். இது அரசியல்வாதிகளுக்கும் நடக்கும். அந்த இடைநிறுத்ததில் ஏன் விழுந்தோம், எங்கே தவறு நடந்தது, என்னவெல்லாம் மாற்றங்கள் செய்யவேண்டும் எனக் கவனித்து, தவறுகளைக் களைந்து அடுத்த அடி எடுத்துவைப்பவர்களே வெற்றுபெறுவார்கள். அதற்கான நிகழ்கால உதாரணம் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
பிடிவாதம், முன்கோபம், எப்போதுமே எரிச்சல்… இதுதான் மம்தாவின் உண்மையான முகம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்க உறுதுணையாக இருந்தவர்களே மம்தா மீது குற்றம்சாட்ட கட்சி உடைய ஆரம்பித்தது. இப்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உடைவதுபோல திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜியின் கண்முன்பே உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்தது.

ஆனால், மம்தா இதுகுறித்தெல்லாம் பெரிதாகக் கவலைப்படவில்லை. அவருடைய நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவும் இல்லை. முரட்டுப் பிடிவாதத்தோடு மீண்டும் கூட்டணி மாறினார் மம்தா. 2003-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து மீண்டும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்குத் தாவினார். வாஜ்பாய் தலைமையிலான மத்தியில் அரசில் மீண்டும் அமைச்சரானார். ஆனால், எந்த இலாகாவும் நிர்வகிக்க இல்லாமல்!

சில வாரங்களுக்குப் பிறகு அதாவது 2004 ஜனவரியில் அவருக்கு கனிமம் மற்றும் சுரங்கத்துறை ஒதுக்கப்பட்டது. 2004 மே மாதத் தேர்தல் வரை மந்தியாகத் தொடர்ந்தவர் 2004 நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க-வுடன் இணைந்தே சந்தித்தார்.

வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு இந்தத் தேர்தலில் கவிழ்ந்ததோடு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. மம்தா போட்டியிட்ட கொல்கத்தா தெற்கு தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. கம்யூனிஸ்டுகள் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றினார்கள். கட்சியாகப் பெருந்தோல்வியை சந்தித்தாலும் மம்தா பானர்ஜி கொல்கத்தா கிழக்கு தொகுதியில் 50 சதவிகித வாக்குகளைக் கைப்பற்றி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், கட்சி காணாமல் போனது.

வாஜ்பாய்
வாஜ்பாய்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலான 1998 தேர்தலில் 7 தொகுதிகளை வென்றவர்கள், 1999 தேர்தலில் 8 தொகுதிகளை வென்று கூடுதலாக ஒரு தொகுதியையும் கைப்பற்றி இருந்தார்கள். கொல்கத்தாவின் வடகிழக்கு, வடமேற்கு, தெற்கு என மூன்று தொகுதிகளுமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், 2004 தேர்தலில் மிக மிக மோசமாகக் கட்சி அதளபாதாளத்தில் விழும் என யாருமே நினைக்கவில்லை. இந்தப் படுதோல்விக்கு மம்தா மட்டுமே காரணம் என்று கட்சியினர் மட்டுமல்ல மம்தாவே நம்பினார்.

வேலையில்லாத் திண்டாட்டம், எல்லைப்பிரச்னைகள், பலவீனமான மருத்துவ மற்று கல்வி கட்டமைப்பு எனப் பல சிக்கல்களால் மேற்கு வங்கம் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்ட மம்தாவுக்கு பாடம் புகட்டினார்கள் மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தபோது நாடாளுமன்ற கூட்டங்களுக்கு ஒற்றை மனுஷியாகப் பாராளுமன்றம் செல்வதை நினைத்துக் குறுகிப்போனார் மம்தா. தனிமை அவரை ஆட்கொண்டது. காங்கிரஸை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கி மிகப்பெரிய வெற்றிகளைப்பெற்று, மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்ட மம்தா பானர்ஜியின் பிம்பம் உடைந்து கொண்டேயிருந்தது. கட்சித்தலைவர், கம்பீரமானப் பெண் என அவருக்கான மரியாதை முற்றிலும் மறைந்தது. ‘’கட்சி தொடங்கிய ஆறே ஆண்டுகளில் கட்சிக்கு மூடு விழா நடத்திவிட்டார் மம்தா’’ என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மம்தாவை கேலி செய்தன. சொந்த கட்சிக்காரர்களுமே மம்தாவைப் பார்த்து சிரித்தார்கள்.

பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய தோல்வியை நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்தும் பாடம் கற்காத மம்தா பானர்ஜி மீண்டும் 2006 சட்டமன்றத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணிவைத்தே சந்தித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணிப்போட்டு முதல் தேர்தலை சந்தித்தவர் 60 தொகுதிகளில் வென்றிருந்தார். ஆனால், 2006-ல் பாஜகவுடன் கூட்டணி போட்டவருக்கு தோல்வியும், அவமானங்களும் தொடர்ந்தது. 257 இடங்களில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 30 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மீண்டும் புத்ததேவ் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது.

Mamata Banerjee
Mamata Banerjee

மேற்கு வங்கத்தின் முதல்வராக வேண்டும் என்கிற மம்தாவின் கனவு மொத்தமாகக் கலைந்ததாகவே எல்லோரும் நினைத்தார்கள்.

கட்சியை முழுவதுமாக சீரமைக்க வேண்டும் என்கிற உண்மை மம்தாவுக்குப் புரிந்தது. அவமானகரமான தோல்விக்கான காரணம் பிஜேபியுடன் கூட்டணி போட்டது என்பது அவருக்குப் புரிந்தது. 2002 குஜராத் கலவரத்துக்கு பிறகு மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததை மேற்கு வங்க முஸ்லிம்களும், சிறுபான்மையினரும் சிறிதும் விரும்பவில்லை என்பதை தேர்தல் முடிவு அவருக்கு சொல்லிக்கொடுத்தது. மேலும் கட்சியின் செல்வாக்கு கொல்கத்தா மற்றும் நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கிறது என்கிற உண்மையும் புரிந்தது. வெறும் நகரங்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் தன்னால் எப்போதும் மேற்கு வங்கத்தின் முதல்வராக முடியாது என்பதைப் புரிந்துகொண்ட மம்தா பானர்ஜி கிராமங்களை நோக்கி தன் பார்வையைத் திருப்பினார்.

காலம் எல்லோருக்குமே இரண்டாவது வாய்ப்பை வழங்கும் என்பார்கள். அப்படி வீழ்ந்துபோய், இனி அரசியல் எதிர்காலமே இல்லை என்கிற நிலையில் இருந்த மம்தாவுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அதிரடியாக!

கொல்கத்தாவில் இருந்து 40 கிமீட்டர் தொலைவில் இருக்கும் சிற்றூர் சிங்கூர். சென்னைக்கு ஶ்ரீபெரும்புதூர் போல, கொல்கத்தாவுக்கு சிங்கூரை ஒரு தொழிற்சாலை நகரமாக நிறுவவேண்டும் என முடிவெடுத்தார் மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

டெல்லி போராட்டத்தில் மம்தா
டெல்லி போராட்டத்தில் மம்தா

‘’மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை கம்யூனிஸ்கள் கெடுத்துவிட்டார்கள். எந்த முன்னேற்றமும், வேலைவாய்ப்பும், தொழிற்சாலைகளும் மேற்கு வங்கத்தில் இல்லை’’ என்கிற விமர்சனங்களுக்கு முடிவு கட்ட நினைத்த மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் நான்கு முக்கிய தொழிற்சாலைகளை நிறுவ முயன்றார். அதில் இரண்டு முக்கிய திட்டங்களுக்கு அவர் தேர்ந்தெடுத்த ஊர்கள் சிங்கூர் மற்றும் நந்திகிராம்.

முன்னேற்றம் குறித்து சிந்திக்கும் மார்க்ஸிஸ்ட் என்று மீடியாக்கள் கொண்டாட, எதிரியாக முளைத்த மம்தாவும் இருக்கும் இடம் தெரியாமல் தோல்வியில் துவண்டு விட மேற்கு வங்கத்தை மொத்தமாக மாற்றிக்காட்டும் முயற்சியில் இறங்கினார் புத்ததேவ்.

ரத்தன் டாடாவின் கனவு திட்டமான 1 லட்சம் ரூபாய் நானோ காரைத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க சிங்கூரில் 1000 ஏக்கர் இடத்தை டாடா நிறுவனம் கேட்க, அனுமதி கொடுத்தார் புத்ததேவ். சிங்கூர் முன்னர் விவசாயம் செழிக்கும் பூமியாக இருந்த இடம். இந்த இடத்தை டாடாவுக்கு தாரைவார்த்தது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்தது.

அடுத்ததாக கொல்கத்தாவில் இருந்து 132 கி.மீட்டர், அதாவது சென்னைக்கும் - பாண்டிச்சேரிக்கும் இடையேயான தொலைவில் இருந்த நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் ஒதுக்கி இந்தோனேஷியாவின் சலீம் குரூப் எனும் நிறுவனத்துக்கு கெமிக்கல் தொழிற்சாலை அமைக்க இடம் கொடுத்தார். இவர்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தன.

‘’விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் கம்யூனிஸ்டுகளை அழிப்போம்'’ என்கிற கோஷம் மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

தீ...தி | மம்தா பானர்ஜி தொடர்
தீ...தி | மம்தா பானர்ஜி தொடர்

மிகப்பெரியளவில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஆரம்பத்தில் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மம்தா பானர்ஜி தன் இரண்டாம் இன்னிங்ஸுக்கான சரியான நேரம் இதுதான் எனக் களத்தில் இறங்கினர்.

மேற்கு வங்கம் கலவரப் பூமியானது. போராட்டங்களும், வன்முறைகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்தன. மம்தா போராட்டங்களின் முகமாக மாறினார்!

சிங்கூரிலும், நந்திகிராமிலும் மம்தா என்னவெல்லாம் செய்தார், கலவரங்களில் என்ன நடந்தது, கம்யூனிஸ்ட் கோட்டை எப்படி தகர்ந்தது… அவையெல்லாம் அடுத்த வாரம்!

- வங்கம் விடாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு