அரசியல் கட்சிகளில் பயணிப்பவர்களுக்கு, கட்சிப் பதவிகளைத்தாண்டி, மக்கள் பிரநிதி ஆக வேண்டும் என்கிற ஆசை நிச்சயம் இருக்கும். உள்ளாட்சி அளவில் பல பதவிகளை வகித்தாலும், ஒருமுறையாவது எம்.எல்.ஏ, எம்.பி ஆகிவிட வேண்டும் என்கிற கனவும் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால், கட்சித் தலைமையிடம் நல்லபெயரெடுத்து சீட்டு வாங்கி, மக்களிடம் வாக்கு வாங்கி, சட்டமன்ற, நாடாளுமன்ற வாயில்களுக்குள் காலடி எடுத்து வைப்பதென்பது லேசுபட்ட காரியமில்லை. ஆனால், ஒருமுறை, இருமுறை அல்ல ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் தற்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் செயல்பட்டுவருபவர், காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான கே.ஆர்.ராமசாமி.

இவர், 1989 முதல் 2006 வரை தொடர்ந்து ஐந்து முறை திருவாடனை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார். தொடர்ந்து, 2011-ல் தொகுதி மறு சீரமைப்பின் காரணமாக, அவரின் திருவாடனை தொகுதிக்குட்பட்ட பல பகுதிகள், காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்குள் சென்றுவிட, முதன்முறையாக காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவுகிறார். தொடர்ந்து, 2016-ம் ஆண்டு மீண்டும் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால், அந்தக் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தவிர, தமிழ்நாடு பொதுக்கணக்குக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் மட்டுமல்ல, இவரது தந்தையும் திருவாடனை சட்டமன்றத் தொகுதியில் இருந்து நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தன் வெற்றியின் ரகசியமாக இவர் சொல்லும் விஷயங்கள்தாம், நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
தன் முதல் தேர்தல் அனுபவத்தையும் தொடர் வெற்றியின் சூத்திரத்தையும் அவரே பகிர்ந்துகொள்கிறார்...
''என்னுடைய தந்தை நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். எங்கள் தொகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகம். அதனால், தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. முதல்முறை நான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலிலேயே நான் போட்டியிட நாமினேஷன் செய்திருந்தேன். ஆனால், கடைசி நாளில், என்னை வாபஸ் வாங்கும்படி கட்சி கேட்டுக்கொண்டது. நானும் வாபஸ் வாங்கிக்கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை, எனக்கு சீட்டு வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் நான் கேட்டதே இல்லை. கட்சியே என்னை வேட்பாளராக அறிவிக்கும். நான் போட்டியிடுவேன். தவிர, தலைவர்கள், மூப்பனாரும், சிதம்பரமும் இருந்ததால் எனக்கு சீட்டுக் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை.

தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும்போது, வாக்குகளுக்காக, மக்களிடம், இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என எந்தக் குறிப்பிட்ட வாக்குறுதிகளும் கொடுக்கமாட்டேன். மாறாக, நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபிறகு உங்களுக்குத் துணையாக இருப்பேன் என்கிற வாக்குறுதியை மட்டும்தான் கொடுப்பேன். என்னுடைய தொடர் வெற்றி ரகசியமும் இதுதான். நான் முதல்முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்தேன். அப்போதே மக்களிடம் நான் நெருக்கமாக இருந்தேன். அதனால், சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்ட போது மக்களைச் சந்திப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. என் தந்தை எங்கள் பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், நான் மிக எளிமையாக மக்களைச் சந்தித்தேன். அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். என்னால் முடிந்த நல்ல காரியங்களை அவர்களுக்கு உடனடியாக செய்துகொடுக்க முயற்சிப்பேன். ஆனால், துரதிஷ்டவசமாக, தொடர்ந்து ஆறுமுறையும் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. 2011 தேர்தலில் தோல்வியடைந்தது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், தொகுதி மறு சீரமைப்புதான் அதற்குக் காரணம்.
ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் இன்று தமிழக அரசியல் களம் தள்ளப்பட்டிருக்கிறது. பணத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்துவிடலாம் என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அது நிச்சயம் மாறவேண்டும். மக்கள் தேர்தல் நேரத்தில் வாக்குக்காக பணம் பெறுவதை நிறுத்தவேண்டும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் நாட்டில் மலரும், மக்கள் யார் நல்லவர்கள் எனப் பார்த்து வாக்களிக்கவேண்டும்'' என்கிற வேண்டுகோளை மக்களிடம் முன்வைக்கிறார் அவர்.

தொகுதி மக்கள் பேசும்போது, ''தொகுதிக்கு பெரிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை என்கிற விமர்சனங்கள் அவர்மீது சிலருக்கு உண்டு. ஆனால், தனிப்பட்ட முறையில், யார் உதவி கேட்டுப்போனாலும் தன்னால் ஆன உதவியைச் செய்வார். அதைவிட முக்கியமாக, ஒரு கவுன்சிலர் ஆனாலே அந்த அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் தராதவர். அதனால்தான் மக்களின் விருப்பமானவராக அவர் இருக்கிறார்'' என தங்களின் தேர்வு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.