Published:Updated:

தீ...தி - 4: ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றினாரா மம்தா பானர்ஜி?!

ஜெயலலிதா - மம்தா பானர்ஜி
News
ஜெயலலிதா - மம்தா பானர்ஜி

சிங்கூரில் தொடர்ந்து அரசியல் பவுண்டரிகள் அடித்துக் கொண்டிருந்தவருக்கு, தொடர் சிக்ஸர்கள் அடிக்கும் வாய்ப்பு நந்திகிராமில் கிடைத்தது. சிங்கூர், நந்திகிராம் என இரண்டு நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தியதால் ஸ்தம்பித்தது கம்யூனிஸ்ட் அரசு.

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், என் நெற்றியில் யாராவது துப்பாக்கியை வைத்து மிரட்டினால், ‘ஒன்று நீங்கள் சுட வேண்டும் அல்லது துப்பாக்கியை எடுக்கவேண்டும். நான் என் தலையை நகர்த்தமாட்டேன்’ என்று சொன்னேன். ஆனால், இப்போது மம்தா பானர்ஜி என்னைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டார்!"
ரத்தன் டாடா

ஜெயலலிதா, மம்தா பானர்ஜி… இருவரின் அரசியல் பயணத்திலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் பெரிய திருப்புமுனையாக இருந்தது சட்டசபையில் தான் தாக்கப்பட்டதாக ஜெயலலிதா அலறிய சம்பவம். "சேலையைப் பிடித்து இழுத்தார்கள்" என ஜெயலலிதா சொல்ல அன்று தமிழக சட்டசபை போர்க்களமானது. அதேபோல் முதலமைச்சராக இருந்தபோதும் தனது அரசியல் இமேஜை உயர்த்த காவிரி நீர் தரமறுத்த கர்நாடக அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட இதே பாணியிலான இரண்டு சம்பவங்கள் மம்தாவின் வாழ்விலும் நடந்தன.

ஜெயலலிதா
ஜெயலலிதா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரத்தன் டாடா, ஐரோப்பிய ஆட்டோ கண்காட்சியில் ஒரு பத்திரிகையாளரிடம் விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்த விஷயம்தான் உலகின் விலைக்குறைவானக் கார் கான்செப்ட். அந்தப் பத்திரிகையாளர் டாடாவிடம் உங்களால் விலை குறைவான காரைத் தயாரிக்க முடியாதா எனக் கேட்க, "ஏன் முடியாது" என ரத்தன் டாடா சொன்னதுதான் 'ஒரு லட்ச ரூபாய் கார்' கனவானது.

தனக்கு விடப்பட்ட சவால் என்று இந்த கார் திட்டத்தை மிகவும் பர்சனலாக எடுத்துக்கொண்ட ரத்தன் டாடா, 1 லட்சம் ரூபாய்க்கு கார் தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கான தனித் தொழிற்சாலை அமைக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலைக்கு குறைந்த விலையில் இடம் கிடைக்க வேண்டும், ஏகப்பட்ட வரிச் சலுகைகள் கிடைக்க வேண்டும் எனத் தேட அப்போது அவர் கண்களில் சிக்கியதுதான் சிங்கூர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"மேற்கு வங்கம் இந்தியாவின் பின்தங்கிய மாநிலமாகிவிட்டது, புதிய தொழிற்சாலைகள் உள்ளே வந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும்" என்ற மேற்கு வங்கத்தின் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 2006-ல் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு ரத்தன் டாடாவுக்கு நிலம் ஒதுக்கும் வேலைகளைத் தொடங்கினார்.

2006 செப்டம்பர் மாதம் சிங்கூரில் டாடாவுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் தொடங்கியது. ஆண்கள், பெண்கள் என 5000 பேர் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தார்கள். பெரிய தலைவன் இல்லாமல் போராடும் இந்த மக்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்க துடித்த மம்தா பானர்ஜி சிங்கூரில் போய் இறங்கினார்.

மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியையும், புத்ததேவ் பட்டாச்சார்யாவையும், நிலம் கையகப்படுத்தும் முறையையும் திட்டித்தீர்த்த மம்தா பானர்ஜி, ரத்தன் டாடாவைப் பற்றியோ, டாடா நிறுவனம் பற்றியோ எந்த விமர்சனமும் வைக்கவில்லை. "மம்தா ஏன் டாடாவைப் பற்றி வாய் திறக்கவில்லை" என மீடியாக்கள் எழுத ஆரம்பிக்க, மம்தாவை சந்திக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட டாடா அதிகாரிகள் வர இருப்பதாகத் தகவல் பரவ ஆரம்பித்தது. ஆனால், "மம்தா பானர்ஜியை நீங்கள் சந்திப்பது என்னை அவமதிப்பதற்கு சமம். நானே இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்" என ரத்தன் டாடாவிடம் புத்ததேவ் சொல்ல, டாடா அதிகாரிகள் மம்தாவுடனான மீட்டிங் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கேன்சல் செய்தனர். மம்தாவுக்கு தவறியும் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்தைக் கொடுத்து விடக்கூடாது என்பதுதான் புத்ததேவின் எண்ணம்.

புத்ததேவ் பட்டாச்சார்யா
புத்ததேவ் பட்டாச்சார்யா
பேச்சுவார்த்தை நடத்த வருகிறோம் என்று சொன்னவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என மம்தாவின் பிபீ இன்னும் உச்சத்துக்கு எகிறியது. தனது ஒட்டுமொத்த கவனத்தையும் சிங்கூரின் மீது வைப்பது என முடிவெடுத்து இன்னும் தீவிரமாக களமிறங்கினார் மம்தா.

டாடா நிறுவனம் சிங்கூரில் இருந்து வெளியேற தேதி குறிக்கிறார். சிங்கூர் கலவரப் பூமியாகிறது. சிங்கூருக்குப் போகும் மம்தாவை அந்த நகருக்குள் நுழையவிடாமல் தடுக்கும்போலீஸ், அவரை உலுக்கிப்பிடித்து தூக்கிச்சென்று கைது செய்கிறது. மீடியாக்கள் நேரடியாக மம்தா கைது செய்யப்படும் காட்சிகளைக் காட்டிக்கொண்டிருக்க மம்தாவின் மீது பரிதாப அலை வீச ஆரம்பித்தது. ஆனாலும், தாகம் தீராத மம்தா அங்கிருந்து நேராக சட்டசபைக்குப்போய் கூச்சல்போட, சட்டசபை நடந்துகொண்டிருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்காமல் அங்கும் காவல்துறை தடுக்க, அடுத்த கலவரம் மேற்கு வங்க சட்டசபைக்குள் அரங்கேறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மம்தா பானர்ஜி தனக்கு காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கதற, இதைப் பார்த்துக் கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸின் 30 எம்.எல்.ஏக்களும் சட்டசபையை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர். டேபிள், சேர்கள் உடைக்கப்பட்டன. பேருந்துகள் கொளுத்தப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. கொல்கத்தா பற்றியெறிந்தது. புத்ததேவ் பட்டாச்சார்யா எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தைத் தரவில்லையென்றாலும் மம்தாவுக்காக மேற்கு வங்கமே போராடுவது போன்ற சூழல் உருவாக, மம்தாவின் இமேஜ் உயர்ந்தது.

90-களில் காவிரிக்காக ஜெயலலிதா ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதுபோல, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகிறார் மம்தா பானர்ஜி. சிங்கூரில் இருந்து டாடா நிறுவனமும், குவிக்கப்பட்டிருக்கும் போலீஸும் உடனடியாக விலகவேண்டும் என்பதுதான் மம்தாவின் கோரிக்கை. வழக்கம்போல மம்தாவின் இமேஜ் உயர்வதை சரியாகப் புரிந்துகொள்ளாத கம்யூனிச அரசு மம்தாவின் உண்ணாவிரதப் போராட்டம் 26 நாள்கள் தொடரும் வரை வேடிக்கைப்பார்த்தது. மீடியாக்களின் லைவ் கவரேஜ், மம்தாவின் உண்ணாவிரதம் பற்றி தொடர்ந்து டிவி விவாதங்கள் நடக்க, பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் மிளிர்ந்தார் மம்தா பானர்ஜி. தினந்தோறும் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வாடி வதங்கும் மம்தாவின் முகம்தான் இருந்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க கவர்னர் கோபால் கிருஷ்ணா காந்தி மம்தாவிடம் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கோரிக்கைவைக்கிறார். உடல் உறுப்புகள் செயலிழக்கும் என எச்சரிக்கிறார். ஆனால், மம்தா போராட்டத்தைத் தொடர்கிறார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு. அதனால் மன்மோகன் சிங் அமைதிகாக்க, பா.ஜ.க., ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து மம்தாவிடம் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொள்ள சொன்னது. ஆனால், மம்தா தொடர்ந்தார்.

போராட்டம் 26-வது நாளைத்தொட்ட அன்று ஜனாதிபதி, பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்க கவர்னர் மட்டுமல்லாமல் மேற்கு வங்க முதல்வர் பட்டாச்சார்யாவும் "பேசித்தீர்க்கலாம்" எனச் சொல்ல, போராட்டத்தைக் கைவிட்டார் மம்தா பானர்ஜி. இரண்டு ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின்னர் மேற்கு வங்கத்தில் திட்டமிடப்பட்ட நானோ தயாரிப்பு தொழிற்சாலை குஜராத்துக்கு மாறுவதாக அறிவித்தார் ரத்தன் டாடா.

"இனி நான் செத்தாலும் கவலையில்லை. மக்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துவிட்டது" என்று முழங்கினார் மம்தா.

சிங்கூரில் தொடர்ந்து அரசியல் பவுண்டரிகள் அடித்துக் கொண்டிருந்தவருக்கு, தொடர் சிக்ஸர்கள் அடிக்கும் வாய்ப்பு நந்திகிராமில் கிடைத்தது. சிங்கூர், நந்திகிராம் என இரண்டு நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தியதால் ஸ்தம்பித்தது கம்யூனிஸ்ட் அரசு. நந்திகிராமுக்குள் அரசு அதிகாரிகள், ஊழியர்களைத்தவிர வேறு யாரும் நுழையக்கூடாது என நந்திகிராமை வெளி உலகத்தில் இருந்து துண்டித்து தனிமைப்படுத்தியது மாநில அரசு. ஆனால், போராட்டங்கள் ஓயவில்லை.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

‘’நந்திகிராமுக்குள் சாலைகள் சரியாக இல்லை. புதிதாக சாலைகள் போடவேண்டும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’’ என ஊருக்குள் போலீஸ் நுழைய முயல, அதை எதிர்த்து மக்கள் திரள பெரும் கலவரம் வெடித்தது. போலீஸாரோடு கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் சேர்ந்துகொண்டு மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாகினர். 30 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டது நாடு முழுக்கவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புத்ததேவ் பட்டாச்சார்யாவையும், கம்யூனிஸ்ட் ஆட்சியையும் மக்கள் வெறுக்கத் தொடங்கினார்கள். மம்தா பானர்ஜி மக்களைக் காக்கும் மீட்பராக அடையாளப்படுத்தப்பட்டார்.

2011-ல் மம்தா பானர்ஜி பெற்ற பெருவெற்றி, முதல்முறை முதலைமைச்சர் அடுத்தத்தேர்தலிலும் வெற்றி பயணம் தொடர்ந்தது எப்படி, நந்திகிராம் மக்களின் நிலங்களை மீட்டுத்தந்தவர் என்று கொண்டாடப்பட்ட மம்தா பானர்ஜி 2021 தேர்தலில் நந்திகிராமில் ஏன் தோற்றார்?! அடுத்தடுத்த வாரங்களில்!

- வங்கம் விடாது!