Published:Updated:

`மகாராஷ்டிராவுக்கு பா.ஜ.க செய்த பாவம் கழுவினாலும் போகாது!' - காங்கிரஸ் சாடல்

நடிகை கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத்

`மும்பையையும் மகாராஷ்டிராவையும் நடிகை கங்கனா ரணாவத் மூலம் களங்கப்படுத்தும் பா.ஜ.க-வின் பாவத்தைக் கழுவினாலும் போக்க முடியாது’ என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்துள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மும்பையில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாலிவுட் நடிகை ஊர்மிளா மாடோன்கர் சமீபத்தில் சிவசேனா கட்சியில் சேர்ந்தார். இவருக்கும் `பா.ஜ.க-வின் செல்லப்பிள்ளை' என்று அழைக்கப்படும் நடிகை கங்கனா ரணாவத்துக்கும் இடையே எப்போதும் மோதல் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

நடிகை ஊர்மிளா
நடிகை ஊர்மிளா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர்மிளாவை ஆபாசப் பட நடிகை என்று கங்கனா சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு ஊர்மிளாவும் பதிலடி கொடுத்திருந்தார்.

மும்பையில் ஊர்மிளா மூன்று கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலகம் வாங்கியிருக்கிறார். இது குறித்து இருவருக்கும் மீண்டும் வார்த்தைப் போர் ஏற்பட்டிருக்கிறது. கங்கனா, தனது ட்விட்டர் பக்கத்தில், ஊர்மிளா 3 கோடி ரூபாயில் அலுவலகம் வாங்குவதற்குப் பணம் வந்த வழிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை காங்கிரஸ் இடிக்கிறது. `பா.ஜ.க-வுக்கு சாதகமாகப் பேசியதால், 25 முதல் 30 வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறேன்’ என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஊர்மிளா உடனே பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், ``நான் 25 ஆண்டுகள் கஷ்டப்பட்டு அந்தேரியில் வாங்கிய வீட்டைக் கடந்த மார்ச் மாதம்தான் விற்பனை செய்தேன். அதன் மூலம் கிடைத்த பணத்தில்தான் புதிய அலுவலகம் வாங்கினேன். இது தொடர்பான ஆவணங்களை எப்போதும், எங்கு வேண்டுமானாலும் காட்டத் தயாராக இருக்கிறேன்.

சச்சின் சாவந்த்
சச்சின் சாவந்த்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கொடுப்பதற்காக உங்களிடம் அதிகம் பேரின் பட்டியல் இருப்பதாகத் தெரிவித்திருப்பதால், உங்களது அரசு உங்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கிறது. உங்களிடமிருக்கும் பட்டியலை எப்போது வெளியிடப்போகிறீர்கள்’’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். கங்கனா மும்பை போலீஸார் குறித்தும், மும்பை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மும்பையை கராச்சியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விவசாயிகள் போராட்டத்தில் `ஷாஹீன் பாக்' பாட்டி கலந்துகொண்டாரா... - கங்கனா பதிவு உண்மையா? #FACTCHECK

கங்கனாவின் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ``மகாராஷ்டிராவையும் மும்பையையும் களங்கப்படுத்தும் சதியில் பா.ஜ.க இருக்கிறது என்று தெளிவாகியிருக்கிறது. கங்கனாவே பா.ஜ.க-வுக்கு ஆதரவானவர் என்று தெரிவித்திருப்பதன் முலம் பா.ஜ.க இந்தச் சதியின் பின்னணியில் இருப்பது தெரிகிறது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் மும்பை போலீஸாரையும், மகராஷ்டிராவையும் பா.ஜ.க களங்கப்படுத்துகிறது. இதற்காக மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும் பா.ஜ.க செய்த பாவத்தைக் கழுவ முடியாது’’ என்று மும்பை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தெரிவித்தார்.

இதே போன்று சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார் அளித்த பேட்டியில், ``பா.ஜ.க-வை மகிழ்ச்சிப்படுத்தவே, தான் மகாராஷ்டிரா அரசை விமர்சிப்பதாக கங்கனாவே ஒப்புக்கொண்டிருப்பதற்கு வாழ்த்துகள். இப்போது பா.ஜ.க-வின் துரோகம் குறித்து மகாராஷ்டிரா மக்கள் முடிவு செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு