Published:Updated:

உள்ளாட்சித்தேர்தல் நடக்குமா நடக்காதா? என்ன சொல்கிறது மாநில தேர்தல் ஆணையம்?

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

அதிகாரிகள், வழக்கத்தைவிட அதிகமாகத் தங்கள் பங்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரே காரணத்துக்காகவே உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுகிறார்களோ என்றும் சந்தேகம் எழுகிறது.

‘எல்லோரும் நல்லவரே’ என்று ஒரு பழைய படம். கவுதம் கார்த்திக்கின் தாத்தா முத்துராமன் நடித்தது. அதிலொரு காட்சி... நண்பர்கள் ஐந்து பேர் பயங்கர பசியில் இருப்பார்கள். கையில் ஐந்து ரூபாய்தான் (அந்தக் காலத்தில் அது பெரிய காசு!) இருக்கும். ஒரு ஓட்டலில் எடுப்புச்சாப்பாடு (அளவில்லாத சாப்பாடு) ஐந்து ரூபாய் என்று போட்டிருக்கும். சாப்பிடப்போவார்கள். ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே சாப்பிடவில்லை என்று சொல்லி, அவரைச் சாப்பிடச் சொல்லிவிட்டு, மற்றவர்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள்.

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

சாப்பிடுபவர், தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு முகத்தைக் காட்டாமல் சாப்பிடுவார். அவர் ஏன் தலையில் துண்டைப் போட்டிருக்கிறார் என்று சப்ளையர் கேட்பார். அதற்கு அவர், ரொம்ப கூச்ச சுபாவம் என்று சொல்வார்கள் பக்கத்தில் இருப்பவர்கள். அவர் சாப்பிட்டு முடித்ததும், அடுத்த நபர் அதே துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு சாப்பிடுவார். முதலில் இருந்து சாம்பார், ரசம், தயிர் என்று ஐந்து பேரும் சாப்பிடச் சாப்பிட ஓட்டலில் சாப்பாடே காலியாகிவிடும்.

‘வெண்ணிலா கபடிக்குழு’வில் புரோட்டா சூரி, ‘பந்தயத்துக்கு நாங்க வரலாமா?’ என்று வாலண்டியராக வந்து 50 புரோட்டாக்களையும் சாப்பிட்டுவிட்டு, கடைசியில் ‘நீங்க கள்ளாட்டம் ஆடுறீங்க... கோட்டையெல்லாம் அழிங்க, நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!’ என்று ஓட்டல்காரரைத் தெறித்தோட விடுவார். காமெடிகளும் காலமாற்றத்தை நன்றாகவே பிரதிபலிக்கின்றன. இந்தக் காமெடிகளுக்கிடையிலான வித்தியாசம்தான், அன்றைய இன்றைய ஆட்சியாளர்களுக்கு இடையிலான வித்தியாசமும்கூட.

அன்றைக்கு, ஒரு சாப்பாட்டை யாருக்கும் தெரியாமல் பலரும் பங்கிட்டுக்கொண்டார்கள். இன்றைக்கு, எல்லாவற்றையும் ஒருவரே பந்தயம் கட்டிச் சாப்பிடுகிறார், அதுவும் பகிரங்கமாக. ஒருவர் என்றால் ஒருவரில்லை. ஒரு சமூகம் அல்லது ஒரு கூட்டம். அ.தி.மு.க-வில் அள்ளமுடியாத துறைகளை வைத்திருக்கும் அமைச்சர்கள் தொடங்கி, எம்.எல்.ஏ-க்கள்... அவ்வளவு ஏன்... எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்பது ஒன்றையே உயரிய நோக்கமாகக்கொண்டுள்ள தி.மு.க தலைமைக்கும்கூட இதுதான் கடுப்பே.

இதற்கு ஆகச்சிறந்த உதாரணம்... நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு, நடப்பு நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ள தொகை ரூ.53,891.69 கோடி. கடந்த மூன்றாண்டுகளுக்கு சராசரியாகக் கணக்கிட்டால், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். இவற்றைத் தவிர்த்து, மத்தியஅரசின் 100 நாள் வேலை திட்டம், ஸ்மார்ட் சிட்டி, அம்ருட், தூய்மைப் பாரதம் போன்ற திட்டங்களில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஓரிடம்... யாரிடம்?

உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால், இந்தத் தொகையில் 10 சதவிகிதம். அதாவது, 15 ஆயிரம் கோடி ரூபாய், ஊராட்சி மன்ற உறுப்பினர், தலைவர் தொடங்கி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர்கள், மேயர்கள், ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், பெருந்தலைவர்கள் என 1,31,794 பேருக்கு கமிஷனாகப் பகிரப்பட்டிருக்கும். ஆனால், மூன்றாண்டுகளாகப் பங்கு கேட்பதற்கு ஆளில்லாமல், ஒரே இடத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதிகாரிகள், வழக்கத்தைவிட அதிகமாகத் தங்கள் பங்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல்
தேர்தல்

இந்த ஒரே காரணத்துக்காகவே உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுகிறார்களோ என்றும் சந்தேகம் எழுகிறது. கேட்டால், ‘தி.மு.க வழக்குப்போட்டது’ என்பார்கள். தி.மு.க வழக்கால் தள்ளிப்போனது மூன்று மாதங்கள் மட்டுமே. தேர்தலை நடத்தாமல் அரசு இழுத்தடித்திருப்பது மூன்றாண்டுகள். இப்போதும்கூட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. அ.தி.மு.க ஆட்சிக்காலம் வரை உள்ளாட்சித்தேர்தல் நடக்குமா என்பதும் சந்தேகமே.

அரசியலமைப்பின் 243(f), 243P(g) ஆகிய பிரிவுகளின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல், கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில், கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களானது, கடந்த 2013-ம் ஆண்டே அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. ஆனால், “2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், வார்டுகளை மறுவரையறை செய்ய அதற்கு நீண்ட காலம் ஆகும். ஆதலால், உரிய கால வரையறைக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியாது. எனவே, ஏற்கெனவே உள்ள வார்டுகள் வரையறையின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும்” என்பதற்கான மசோதாவை 2016 ஜூன் 22-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி.

வழக்கு
வழக்கு

இந்த மசோதாவை எதிர்த்து தி.மு.க-வும், இன்று அ.தி.மு.க-வோடு கூட்டணியில் உள்ள பா.ம.க-வும் வழக்குத் தொடுத்தன. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை செய்து, அதனடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது, நீதிமன்றம். இந்த வார்டு மறுவரையறைப் பிரச்னைதான் தேர்தல் நீடிப்பதற்கு சொல்லப்பட்டுவரும் அடிப்படைக் காரணங்களில் ஒன்று. ஜனநாயகத்தை உறுதிசெய்கிற அமைப்பான மாநிலத் தேர்தல் ஆணையம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டும்தான் செயல்படுமா, மற்ற நாள்களில் ஆணையம் செய்வது என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.

2013-ம் ஆண்டிலேயே மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் பெறப்பட்ட நிலையில், 2016 உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக மூன்று ஆண்டுகள் அவகாசம் இருந்தும் மாநிலத் தேர்தல் ஆணையம் தூங்கிக்கொண்டிருந்துள்ளது. இப்போதும் நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு சாக்குப்போக்கைச் சொல்லி, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதிலேயே குறியாக இருக்கிறது. இதிலிருந்தே மாநில அரசின் கைப்பாவையாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

தேர்தல்
தேர்தல்

நீதிமன்றம் எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் சாடினாலும் அதை நிறைவேற்றுவதைவிட, ஆட்சியாளர்களைத் திருப்திபடுத்துவதற்கான வேலைகளைத்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் செய்துகொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் ஆட்சியிலிருந்தவர்களுக்குச் சாதகமாகத்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் நடந்திருந்தாலும், இவ்வளவு மோசமான நிலை முன்னெப்போதும் இருந்ததில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், பொதுமக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமில்லை. அவர்கள் இருந்தால் கமிஷன் வாங்குவார்கள், கட்டடம் கட்டினால் கட்டிங் கேட்பார்கள், ஆள்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், எல்லா மக்கள் பிரதிநிதிகளும் அப்படி இருப்பதில்லை. பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் நல்லபெயர் எடுக்கவே விரும்புவர். அப்போதுதான் மீண்டும் அதே வார்டில் ஜெயிக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாததல்ல. அதனால், குடிநீர் வரவில்லை என்றால், மாநகராட்சி லாரியைக் கொண்டுவந்து தண்ணீர் ஊற்றுவார்கள் அல்லது மாற்று ஏற்பாடு செய்வார்கள். ரோடு மோசமாக இருந்தால் மன்றத்தில் பேசி அல்லது அதிகாரிகளிடம் போராடி, சீரமைத்துத் தருவார்கள்.

கமிஷன்
கமிஷன்

கிராமப்புறங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருந்தால் நீர்நிலைகளைத் தூர் வாருவார்கள். பார்த்துப் பார்த்து அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பார்கள். இப்போது, யாரிடம் கேட்பதென்று மக்களுக்குத் தெரியவில்லை. அதிகாரிகளைப் பார்க்கவே முடிவதில்லை. வேறு வழியின்றிசாலையில் உட்கார்ந்து மறியல் செய்கிறார்கள். ஒட்டுமொத்த கோபத்தையும் ஓட்டுப்போடுவதில் காட்டிவிடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சிக்குக் கிடைத்த மரண அடிக்கு, இதுவும் முக்கியக் காரணம் என்பதை மணியான மந்திரிகளே மறுக்கமுடியாது.

ஊர் எக்கேடு கெட்டால் என்ன, கிடைக்கும்வரை அள்ளித் தட்ட வேண்டுமென்று நினைக்கும் அரசியல்வாதிகளின் அதீத ஆசைதான், உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக ஒரே காரணமென்று குற்றம் சாட்டுகிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

பொது ஒதுக்கீட்டு இடங்களைப் பாதுகாக்கப் போராடும் சமூக ஆர்வலர் தியாகராஜன் நம்மிடம், ‘‘உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்பந்தப் பணிகளை எடுப்பவர்களிடம், குறிப்பிட்ட சதவிகிதம் வரை கமிஷன் வாங்குவது எல்லா ஆட்சிக் காலங்களிலும் நடப்பதுதான். ஆனால், இப்போது எல்லா ஒப்பந்தப் பணிகளையும் பினாமி நிறுவனங்களே எடுத்துவிடுவதால், ஒவ்வொரு பணியிலும் 20-லிருந்து 30 சதவிகிதம்வரை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கிறது. இதனால்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்’’ என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் ஒப்பந்தப் பணிகளைத் துறையின் அமைச்சர் வேலுமணி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குக் கொடுப்பதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக, 'அறப்போர் இயக்கம்' தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதற்கான ஆதார ஆவணங்களையும் வெளியிட்டது.

சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் பலரும் ஒரே ip address-ல் இருந்து, போட்டி டெண்டர்களை upload செய்ததையும் கணவனும் மனைவியும் மட்டும் 10 டெண்டர்களில் விண்ணப்பித்து, ஆளுக்கு ஐந்தாகப் பிரித்து எடுத்துக்கொண்டதையும் அம்பலப்படுத்தியது, அறப்போர் இயக்கம். இத்தகைய ஊழல்கள் பற்றி எழுதவோ, பேசவோ தடைவிதிக்க வேண்டுமென்று தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகளையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். ஆக, உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான ஒப்பந்தப் பணிகள் பினாமி நிறுவனங்களால்தான் மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது.

வேலுமணி
வேலுமணி

பிளீச்சிங் பவுடர், ஃபினாயில், பி.வி.சி பைப் தொடங்கி,, குப்பை அள்ளுவது, தரம் பிரிப்பது, சாலை அமைப்பது உள்பட அனைத்து ஒப்பந்தப் பணிகளும் பினாமி நிறுவனங்களுக்குத் தரப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் இதெல்லாம் கேள்விக்குள்ளாகும் என்பதால்தான், அதை நடத்தாமல் தள்ளிப்போடுவதற்கு ஒரே காரணமென்ற குற்றச்சாட்டு வலுவாகிவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மரண அடி வாங்கிய பின்பு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே கூடாது என்பதில் அ.தி.மு.க திட்டவட்டமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நீதிமன்றம் தரும் நெருக்கடியால் ஒருவேளை தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

தேர்தல் நடக்குமா... நடக்காதா?

உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், எதிர்க்கட்சியினரைவிட ஆளும்கட்சியினர்தான் அதிகமான அதிருப்தியில் உள்ளனர். இந்தத் தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போவதற்கான காரணமும் அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால், யாரிடம் கேட்பதென்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கட்சிக்காரர்கள் எல்லோருடைய கேள்வியும் ஒன்றுதான்... உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா... நடக்காதா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தக் கேள்வியை மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளிடம் முன்வைத்தபோது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளைக் காரணம் காட்டிப் பேச மறுத்தனர். இறுதியில், பெயரைப் போட வேண்டாமென்ற நிபந்தனையோடு முக்கிய அதிகாரி நம்மிடம் பேசினார்...

‘‘நீதிமன்றங்களின் வலியுறுத்தலின் அடிப்படையில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகளை மேற்கொண்டோம். இது, மிக நீண்டகால அவகாசம் எடுத்துக்கொள்ளக்கூடிய பணி. இதுவே காலதாமதத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இப்போது, வார்டு மறுவரையறைப் பணிகள் முடிவடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது, பலரும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருப்பதாகப் புகார் அளித்தனர். அவர்கள் இப்போது, தங்களுடைய பெயர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் அரசிடம் கலந்தாலோசித்துவிட்டு விரைவில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவோம்” என்றார் அந்த அதிகாரி.

Vikatan

அரசிடம் கலந்தாலோசித்துவிட்டு என்று சொல்வதைப் பார்த்தால், இப்போதைக்குத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு எதில் சாதனை படைத்திருக்கிறதோ இல்லையோ, உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் ஓர் ஆட்சிக்காலத்தையே நிறைவு செய்துவிட்டது என்று சாதனை படைக்கப்போகிறது.

அடுத்த கட்டுரைக்கு