Published:Updated:

`சிலையை மீட்டது மோடி, பொன்.மாணிக்கவேல் இல்லை!’ - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

ஆஸ்திரேலியாவிலிருந்த தமிழகச் சிலையை மீட்டது பொன். மாணிக்கவேல் இல்லை எனத் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது தமிழகத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது!

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே கிடையாது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழகச் சிலைகளை மீட்க இவர் காட்டிய அதிரடியால் அதிக கவனம் பெற்றார். பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதியோடு நிறைவடையவிருந்தது. இதற்கிடையில் இவரிடம் இருந்த வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

இது தொடர்பான வழக்கில், பொன். மாணிக்கவேலின் பதவிக்காலத்தை இன்னும் ஓராண்டு நீட்டித்தும், சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட சிலைக்கடத்தல் வழக்குகளை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், பொன். மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு எதிராகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

`பணியிடை நீக்கம் என ஆய்வாளர்களை ஏடிஜிபி மிரட்டுகிறார்!' - நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் முறையீடு

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை செல்லும் என்றும், பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு செல்லும் என்றும் உத்தரவிட்டது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்ட சில முக்கியமான உத்தரவுகளைத் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்பதால் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் பொன்.மாணிக்கவேல்.

பொன். மாணிக்கவேல்
பொன். மாணிக்கவேல்

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் முதலில் ஆஜரான பொன். மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் செல்வராஜ், “ சிலைக் கடத்தல் தொடர்பாக இதுவரை 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 170 வழக்குகளுக்குக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. 31 வழக்குகளின் புலன் விசாரணை ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. மாயமான ஆவணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

``பணமில்லாததால் சிலையை ரயிலில் கொண்டு வந்தோம்!'' - பொன்.மாணிக்கவேல்

மேலும் பொன்.மாணிக்கவேலை பணி செய்யவிடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். அவருக்குக் கீழ் பணியாற்றிய பல அதிகாரிகளை அவருக்கு எதிராகப் பேட்டி கொடுக்க வைத்துள்ளனர். சிறப்பு அதிகாரிக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் அவர்கள் வழங்கவில்லை” என வாதிட்டார்.

இவரைத் தொடர்ந்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக எந்த ஆய்வுக் கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

தமிழக அரசு
தமிழக அரசு

ஆஸ்திரேலியாவிலிருந்து பழங்கால சாமி சிலைகளைப் பொன். மாணிக்க வேல்தான் மீட்டார் எனக் கூறுவதும் தவறு. யுரேனியம் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலியா அரசுடன் இந்தியப் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமர் எடுத்த நடவடிக்கைகளினால்தான் சிலை மீட்கப்பட்டது” எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஆனால் ஆஸ்திரேலியா அரசு, சிலைகளை பொன்.மாணிக்கவேலிடம் தானே ஒப்படைத்தது. அவர்தானே அதைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தார். மோடி நடவடிக்கை எடுத்தார் என்றால், ஆஸ்திரேலிய அரசு ஏன் பொன். மாணிக்கவேலிடம் சிலைகளை ஒப்படைக்க வேண்டும்?’ எனக் கேள்வி எழுப்பினர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட சிலை
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட சிலை

இதற்குப் பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “தமிழக அரசின் பிரதிநிதி என்று கூறிதான் பொன்.மாணிக்கவேல் ஆஸ்திரேலியாவிலிருந்து சிலைகளைப் பெற்றுள்ளார். அந்நாட்டில் சிலை இருந்த தகவல் பொன்.மாணிக்கவேலுக்கு எப்படித் தெரியும் என்பது தொடர்பாக இன்னும் அவர் பதில் அளிக்காமல் உள்ளார். சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து அந்தப் பிரிவைப் புனரமைக்க அவர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை” எனத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.