Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `இந்தோனேசியா எனும் காதல் நிலம்'|பகுதி- 3

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து அனீஸா கர்ப்பமாகியிருந்த எட்டாவது மாதத்தில் ஒருநாள் இரவு, கடையைப் பூட்டிவிட்டு வந்துகொண்டிருந்த நீதனை ஜாவாவிலிருந்து வந்த ஆயுதக்குழுவொன்று கடத்திச் சென்றது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `இந்தோனேசியா எனும் காதல் நிலம்'|பகுதி- 3

இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து அனீஸா கர்ப்பமாகியிருந்த எட்டாவது மாதத்தில் ஒருநாள் இரவு, கடையைப் பூட்டிவிட்டு வந்துகொண்டிருந்த நீதனை ஜாவாவிலிருந்து வந்த ஆயுதக்குழுவொன்று கடத்திச் சென்றது.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்

சாப்பாடு எடுப்பதற்கு அடுத்தநாள் கடைக்கு வந்த அனீஸா, நீதனிடம் கடிகாரத்தைக் கொடுத்துச் சிரித்தாள். எதையோ புதிதாக அறிந்துகொள்வதுபோல நீதன் பரபரத்தான். தந்த கடிகாரத்தில் நேரம் மீண்டுவிட்டதா என்பதுபோல தடவிச் சரிபார்த்தான். ஏற்கெனவே மூடியிருந்த இனிப்பு போத்தலை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டு சிரித்தான்.

``கடை மூடிய பிறகு, இரவு போகூர் தமன் சாரி கோயிலுக்கு அழைத்துப்போக முடியுமா?” என்றாள் அனீஸா. பொலீஸ்காரியின் காதலுக்கு துணிவு அதிகமிருக்கும் என்று நீதன் புரிந்துகொள்வான் என்று அனீஸா எண்ணினாள். அந்தக் கணத்தில் அடுப்பில் வேகவைத்திருந்த வேர்க்கடலை ரசத்தைத்தவிர நீதனுக்கு எதுவுமே ஞாபகமிருக்கவில்லை.

ஒன்றரை வருடமாக, சமையலோடு சேர்த்து, இந்தோனேசிய மொழியையும் பழகிக்கொண்டதன் பரிபூரணப் பயனை அனீஸாவோடு பேசும்போது நீதன் பெருமையாக உணர்ந்தான்.

தமன் சாரி கோயிலுக்குப் போன பிறகும், அடுப்பு வெக்கைக்கு விலகி நிற்பதுபோல, எட்ட நின்று பேசிக்கொண்டிருந்த நீதனின் வெட்கம், அனீஸாவுக்கு மேலும் மேலும் அவனில் ஈர்ப்பை வார்த்தது.

பச்சைப் புல்வெளியில் மூன்று உயரமான கோபுரங்களுடன் வரிசையாக வீற்றிருந்த கோயிலைச் சுற்றிக்கொண்டு தாங்கள் இருவரும் நடந்துவரும் அழகை, ரகசியமாக ரசித்தாள் அனீஸா.

``தனியாக ஏன் இருக்கிறீர்கள்... சொந்த வீட்டில் வந்து என்னுடன் தங்கிக்கொள்ளலாம்” என்றாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

காய்த்துப்போன கைகளை உரசிக்கொண்டு, நீதன் கோபுரத்தின் உச்சியை ரசிக்கும் கோணத்தில் அனீஸாவைப் பார்த்தான்.

எலுமிச்சைக் கன்னங்கள் சிவக்க புன்னகைத்தாள். காவல்துறையின் அதிகாரச் செருக்கு மறைந்து, பச்சையும் கறுப்பும் கலந்த ஜீன்ஸ், டீசேர்ட்டில் அனீஸாவின் அழகு நெற் கதிர்களாக வெடித்துச் சிரித்தது.

அனீஸாவை நீதன் காதலிக்கும் செய்தியும், அவள் வீட்டில்தான் இப்போது நீதன் தங்கியிருக்கிறான் என்ற தகவலும் அந்தப் பகுதி அகதிகள் மத்தியில் போகூர் கடை சாப்பாட்டைவிட அதிகமாக விற்றது. பொலீஸ்காரியை மடக்கிய நீதனின் திறமையை, கடைக்கு வந்த பலரும் வாசம் வீச புகழ்ந்து தள்ளினார்கள். பொலீஸ் அகாடமி விளையாட்டு விழாவுக்கு நீதனை முதன்முதலாக பொது நிகழ்வொன்றுக்கு அழைத்துச் சென்ற அனீஸா, தனது காதலன் என்று அறிமுகம் செய்துவைத்தாள்.

அங்கு துப்பாக்கி சுடும் போட்டியில் அனீஸாவும் கலந்துகொண்டு அசத்தினாள். பரிசுபெற்ற அனீஸா நீதனை அழைத்து நெருக்கமாக நின்று படமெடுத்தாள். அகதி என்ற அசட்டு வாழ்க்கை வாழ்வதை வெட்கக்கேடாக எண்ணிக்கொண்டிருந்த தன்மீது, ஒருத்தி இவ்வளவுக்கு அன்பு செலுத்துவதை நீதனால் நம்பவே முடியவில்லை. அவள் வாசனையும் அருகாமையும் நீதனால் எப்போதும் இழக்க முடியாதவையாக மாறத் தொடங்கின. தனது வாழ்வில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளெல்லாம், தன்னை அறியாமல் கனிவதை சாப்பாட்டுக்கடையிலும் எண்ணிப் பூரித்தான்.

அன்றைய நிகழ்விலிருந்து வீடு சென்றுகொண்டிருக்கும்போது அனீஸா முதன்முதலாக திருமணம் பற்றிப் பேசினாள்.

``அப்பா, அம்மா யாரும் இல்லாத எனது வாழ்க்கையில் உன்னைத் தவிர நான் யாரையும் இந்த அளவுக்கு விரும்பியதுமில்லை, நம்பியதுமில்லை. தெரியுமா?”

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

அனீஸா கூறி முடித்த பிறகும், அவளின் வார்த்தைகள் நீதனுக்குள் கேட்டுக்கொண்டேயிருந்தன. இவ்வளவு நாள்களும் நடைபயின்ற குழந்தைபோல, அனீஸாவின் காதலைத் தாவிப்பிடித்து ரசித்துக்கொண்டிருந்த நீதனுக்கு, அன்றைக்கு அவள் கூறிய வார்த்தைகள், அதிக பொறுப்பை உணரவைத்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆனி மாத முதல் சனிக்கிழமையொன்றில், போகூரில் பாண்ட் வாத்தியங்கள் முழங்க அட்டகாசமாக அனீஸாவை மணம் செய்தான் நீதன்.

போகூரில் நீதனின் சாப்பாட்டுக்கடை வாடிக்கையாளன் ஒருவன், தனது பரிசாக இந்தோனேசிய அரச ஆடையை தைத்துக்கொடுத்தான். அனீஸா வெள்ளைப் புடவையில் போகூர் இளவரசிபோல காட்சிகொடுத்தாள். அனீஸாவின் விருப்பப்படி தமன் சாரி கோயிலில் திருமணம் சிறப்பாக நடந்தது. முல்லைத்தீவிலிருக்கும் தாய்க்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தொலைபேசியில் அழைத்து தகவல் சொன்னான் நீதன்.

``சந்தோசம், சந்தோசம். நல்ல இரு அப்பு. வவுனியாவில கொண்ணருக்கும் ஒருக்கா சொல்லிவிடு. சந்தோசப்படுவான்” – என்றாள் தாய் பாலேஸ்வரி.

இலங்கை, இந்தோனேசிய அன்பில் உருவான, நீதனின் முதல் குழந்தை பிறந்தபோது அனீஸாவின் மகிழ்ச்சிக்கு அளவிருக்கவில்லை. அது செவ்வரத்தம் பூப்போல சிரித்தது. தனக்கென்ற இரண்டாவது சொந்தம் இந்த பூமியில் தோன்றிய ஆனந்தம் அனீஸாவின் கண்களில் பொங்கி வழிந்தது. தானும் புதிதாகப் பிறந்தவளாகத் திளைத்தாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

திருமணத்தைப்போல் அல்லாமல், குடும்பத்தின் எல்லா நிகழ்வுகளையும் நீதன் விமர்சையாகக் கொண்டாட ஆரம்பித்தான். சாப்பாட்டுக்கடைக்கு முன்னால் வாடகைக்கு எடுத்த மண்டபத்தில் நீதன் வீட்டுக் கொண்டாட்டம், மாதம் ஒரு தடவை நடைபெறும் என்ற அளவுக்குக் குடும்பமே குதூகலித்திருந்தது. பெருகிய வருமானத்தில் போகூரில் நீதனுக்குச் சொந்தமாக மூன்று சாப்பாட்டுக்கடைகள் சக்கைபோடு போட்டன.

இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து அனீஸா கர்ப்பமாகியிருந்த எட்டாவது மாதத்தில் ஒருநாள் இரவு, கடையைப் பூட்டிவிட்டு வந்துகொண்டிருந்த நீதனை ஜாவாவிலிருந்து வந்த ஆயுதக்குழுவொன்று கடத்திச் சென்றது.

செய்தியைக் கேட்ட அனீஸா, மூர்ச்சையுற்று வாசலிலிருந்த அங்கரக்கன் புல்லான் பூச்சாடிக்குள் குப்புற விழுந்தாள். கடையில் வேலை செய்பவர்கள், குடும்பம்போல உதவியாக நின்று அவளை வைத்தியசாலையில் சேர்த்தார்கள். கறுப்பு உடையும் முகமூடியும் அணிந்திருந்த கும்பலொன்று ஜாவாவிலிருந்து வந்து நீதனைக் கடத்தியிருப்பதாக கண்டுபிடித்த பொலீஸ், ``இது பணத்துக்காக இடம்பெற்ற சம்பவம்போலத் தெரியவில்லை” என்று ஆரூடம் சொன்னது. மயக்கம் தெளிந்த அனீஸா, தனக்குத் தெரிந்த பொலீஸ் உயர்மட்டங்கள் எல்லோருக்குப் அறிவித்தாள். தன் கணவனை மீட்பதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அவர்களின் காதுகளுக்குள் காசைச் செருகினாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

நீதன் இல்லாமல் கடைகளைத் திறப்பது அனீஸாவுக்கு சிரமமாக இருந்தது. போகூர் மத்திய பேருந்து நிலைய கடையை மாத்திரம், பணியாளர்கள் மதிய உணவுக்குத் திறந்து மூடினார்கள்.

நீதன் காணாமல்போய் ஆறாவது நாள், ஜாவாவிலிருந்து அனீஸாவைப் பார்ப்பதற்கு வந்த ஒருவர், தொலைபேசியில் தன்னை சட்டத்தரணியென்று அறிகம் செய்தார். தான் சொல்லுமிடத்துக்கு வரச் சொன்னார். அவளுக்குள் திரண்டிருந்த மூர்க்கம் உந்தித்தள்ளியது. யாருக்கும் சொல்லாமல் மூத்தவனையும் அழைத்துக்கொண்டு சொன்ன இடத்துக்கு வாகனத்தில் போய் இறங்கினாள்.

இறுக்கமாக வெள்ளை மேலங்கி அணிந்த அரச உத்தியோக நெடி வீசும் அவர் ஐம்பதுகளிலேயே நரைந்திருந்தார்.

``நீதனின் பின்னணி உங்களுக்கு தெரிந்துதான் திருமணம் செய்துகொண்டீர்களா?”

மூங்கில் கிடுகுகளினால் வேய்ந்த அந்த ஆற்றங்கரை உணவகத்தில், சட்டத்தரணி கேட்ட முதல் உரையாடலே அனீஸாவுக்கு முகத்தில் அறைந்ததுபோலிருந்தது.

``அவர் என்னுடைய கணவர். அவரது பின்னணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர் இப்போது எங்கே இருக்கிறார்... யார் கடத்தினார்கள்... நீங்கள் ஏன் இப்போது என்னை இங்கே அழைத்தீர்கள்… எங்களைச் சுற்றி என்ன நடக்குது… நீங்கள் யார்?”

அழுகை வெடித்திருக்காவிட்டால், அனீஸா தனது மீதிக் கேள்விகளையும் கொட்டியிருப்பாள். கண்கள் இருட்டின. தஞ்சக்கேட்டில் தலை சுற்றியது. மேசையில் முகத்தைச் சரித்து அழத் தொடங்க, அருகிலிருந்த மகன் ``அம்மா…” என்றான்.

இரண்டு குடுவைகள் நிறைய இளநீர் கொடுத்துவிட்டுப்போனான் பரிசாரகன். அனீஸாவின் அழுகை திருப்தியான ஓய்வுக்கு வரும்வரைக்கும் சட்டத்தரணி பொறுமை காத்தார். பிறகு அடிக்குரலில் பேசத் தொடங்கினார்.

``அம்மா, உன்னுடைய கணவனை சிறிலங்காவில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர் என்று அரசாங்கம் இவ்வளவு காலமும் சந்தேக நபர் பட்டியலில் வைத்திருந்தது. நாடு கடத்துமாறு கேட்டுக்கொண்டதன் பிறகு நடவடிக்கை எடுத்திருக்கிறது. உனக்கு திருப்தியான பதிலைத் தர வேண்டும் என்பதற்காக, பொய் சொல்ல விரும்பவில்லை மகளே.

நீதனை கடத்தி சென்றவர்கள் இந்தோனேசிய புலனாய்வுத்துறைதான்.

இது மாதிரியான நடவடிக்கைகள் இப்போதெல்லாம் சட்டரீதியாக எடுக்கப்படுவதில்லை. இப்படித்தான் முரட்டுத்தனமாக நடைபெறுகின்றன.”

அனீஸாவின் முகத்தில் அசைவிருக்கவில்லை.

``நான் சொல்வது பொய் என்று நினைக்காதே. நான் ஜாவாவில் மொழிபெயர்ப்பாளனாகவும், அகதிகளின் சட்ட விவகாரங்களைக் கையாளுபவனாகவும் வேலை செய்கிறேன். கடத்திவந்த நீதனிடம் வாக்குமூலம் வாங்குவதற்கு என்னை அழைத்துப் போனார்கள். ஆனால், அவன் சரளமாக இந்தோனேசிய மொழி பேசத் தொடங்கிய பிறகு, எனக்கு அங்கு வேலையிருக்கவில்லை.”

நீதனைப் பற்றி அனீஸாவுக்கு இந்த உலகில் யாரும் புதிதாக எதையும் சொல்லிவிடப்போவதில்லை. நீதனின் வாழ்க்கையை அனீஸா நேரில் கண்டு அவனை விரும்பியதைவிட, அவன் கடந்து வந்த வாழ்வுதான் அவன்மீது அதிக நேசத்தை அவளுக்குள் ஊறச்செய்தது.

காதலிக்கும்போது ஒருநாள் குனுங் பட்டு குன்றின் மீது ஏறி நின்று, பரந்திருந்த காடுகளை ரசித்திருந்த நீதனைத் தன்பக்கம் இதழ்களை கவ்வினாள் அனீஸா. உடனே, அவளது இடுப்பை வளைத்துப் பிடித்து இறுக்கிக்கொண்டான் நீதன். ``இது துப்பாக்கி பிடித்த கை. தெரியும்தானே” – என்று காதலோடு காதைக் கடித்தாள் அனீஸா. ``ஏன், இது மாத்திரம் என்னவாம்...” என்றபடி தன் விரல்களால் அவள் உதடுகளை வருடினான் நீதன்.

அனீஸாவின் கண்கள் நிரம்பி வழிந்தன. கணவனைக் கண்டு வந்த ஓர் உருவம் தன் முன்னாலிருந்து பேசுகிறது என்பதை உணரத் தொடங்கிய அவளுக்கு, குழறி அழ வேண்டும்போலிருந்தது. வயிற்றைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு கேவினாள். அருகிலிருந்த மகனை இறுக அணைத்தாள். அநாதரவாக உணர்ந்தாள்.

கைப்பையை எடுத்து, பொலீஸ் அகாடமியில் இருவரும் முதன்முதலாக எடுத்த படத்தை இதழ்களில் இறுக்கி ஒற்றியெடுத்தாள்.

``இந்தோனேசிய பாதுகாப்பு நிலைமைகள் உனக்குத் தெரியாதது இல்லை. நீ பொலீஸில் இருந்திருக்கிறாய். நான் உனக்கு எதுவும் புதிதாகப் புரியவைக்கத் தேவையில்லை.”

அவர் சொன்ன கடைசி வரிகளில் பல அர்த்தங்கள் உள்ளன என்பதை அனீஸா நன்கு அறிவாள். நீதன் கடத்தப்பட்டதற்கு யார் பொழியும் காரணத்தையும் ஏற்றுக்கொள்ள அவள் தயாராகயிருக்கவில்லை.

வந்தவரிடம் நன்றி சொல்லிவிட்டு, மகனைத் தூக்கினாள். வேகமாக காருக்கு நடந்தாள். சூரியனே கழன்று விழுந்ததுபோல போகூரை வெயில் எரித்துக்கொண்டிருந்தது.

சட்டத்தரணி பின்னாலேயே நடந்து சென்றார். ஒரு வேட்டைப் பெண்போல அனீஸாவின் நடையில் வேகம் தெறித்தது. அவளுக்குள் திடீரென்று பிரவாகித்த ஓர்மத்தில், பெருகிக்கிடந்த பேரச்சமும் சோர்வும் கரைந்தன.

திடீரென்று திரும்பியவள்,

``புலனாய்வுத்துறை பணிப்பாளர் இன்னமும் கேணல் சுயண்டோதானே?” என்று கேட்டாள்.

``ஆம்” என்று சொல்வதற்கிடையில், சட்டத்தரணியின் பதிலை தெரிந்துகொண்டவள்போல வேகமாக காரில் ஏறிச் சென்றாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள், பகலை முன்னிரவு விழுங்கிக்கொண்டிருந்த மம்மல் பொழுதில், அனீஸாவும் மகனும் பண்டபக் கடற்கரை விடுதியில் போய் இறங்கினார்கள். அங்கிருந்து முச்சக்கர வாகனத்தில் போய்ச் சேர்ந்த இடத்தில், நீதன் காத்திருந்தான். நீண்ட மண்டபத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று குடும்பமாக எழுபது பேரளவில் எதற்காகவோ காத்திருப்பவர்களைப்போல அந்தரப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

நீதனும் அனீஸாவும் அணைத்தபடி அழுது முடித்த இடத்திலிருந்து சில நூறு மீற்றர் தொலைவில், ஆஸ்திரேலியா செல்லும் அகதிப்படகு நங்கூரமிட்டிருந்தது.

கால்புதையும் தண்ணீரில் இருட்டுக் கடலுக்குள் இறங்கிய நீதன், படகில் ஏறும்வரைக்கும் கரையை நோக்கிக் கையசைத்தபடியே சென்றான். வெளிச்சத்தின் வாசனை கொஞ்சம் கொஞ்சமாக அவனை நீங்கிக்கொண்டிருந்தது.

(தொடரும்...)