Published:Updated:

50:50... வீட்டுக்கு வீடு ஸ்கூட்டி... அ.தி.மு.க-வின் தேர்தல் அஜெண்டா! #TNElection2021

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

இயற்கையாக எழும் தற்போதைய ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை, எதிர்க்கட்சிகளின் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், உட்கட்சிப் பூசல் என பல சவால்கள் காத்திருக்கின்றன.

ஒன்பதாண்டுகள் முடிந்து பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது அ.தி.மு.க அரசு. காங்கிரஸ் கட்சிக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகள் அரியணையில் இருந்த கட்சி என்கிற பெருமையை அ.தி.மு.க தட்டிச் சென்றுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருவருடமே காத்திருக்கும் நிலையில், 33 வருடங்கள் தமிழகத்தின் தலைவிதியை தீர்மானித்த அ.தி.மு.க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியில் இருப்பதால் இயற்கையாக எழும் தற்போதைய ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை, எதிர்க்கட்சிகள் எழுப்பும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், உட்கட்சிப் பூசல் என பல சவால்கள் காத்திருக்கின்றன. இடையிடையே கிளம்பும் சசிகலா விடுதலைச் செய்திகளும் ரத்தத்தின் ரத்தங்களைத் திண்டாட வைக்கின்றன. என்ன செய்யப் போகிறது அ.தி.மு.க., அவர்களின் திட்டம் என்ன... அக்கட்சியின் சீனியர்கள், மூத்த அமைச்சர்களிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் அ.தி.மு.க-வின் வியூகங்களைப் பட்டியலிட்டார்கள்.

"ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில், அவரின் ஆளுமைக்கு என சிறுபான்மையினர், பெண்கள் கணிசமாக வாக்களித்தனர். அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்துக்கு வெறும் 18.48 சதவிகித வாக்குகளே கிடைத்தன. ஜெயலலிதாவுக்கு என கிடைத்த வாக்குகள் சிதறிவிட்டன. தமிழகத்தில் வீசிய பி.ஜே.பி எதிர்ப்பு அலையும் இந்த வாக்குவங்கி சரிவுக்கு முக்கியக் காரணம். அதேநேரத்தில் 22 சட்டமன்றத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் 38.2 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றோம். பின்னர் நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தி.மு.க கூட்டணி வசமிருந்த தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றியது. இப்போது அ.தி.மு.க-வுக்கு இரண்டு சவால்கள் உள்ளன.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

ஃபிப்டி, ஃபிப்டி பார்ட்னர்ஷிப்!

முதலாவது உட்கட்சிப் பூசல். இதை சரிக்கட்ட, வரும் தேர்தலில் தொகுதிகளை சரிபாதியாகப் பிரித்துக் கொள்வதென எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் முடிவெடுத்துள்ளனர். இதன்படி தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கணிசமான தொகுதிகள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்குச் செல்லும். கன்னியாகுமரி மாவட்ட தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, ஒருசிலவற்றை மட்டும் தன் ஆதரவாளர்களுக்கு வழங்கலாம் என எடப்பாடி நினைக்கிறார். இந்த ஃபிப்டி, ஃபிப்டி ஐடியா வரும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்திலேயே எதிரொலிக்கப் போகிறது. சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு மண்டல பொறுப்பாளர்கள் பதவி கூட இந்த 50:50 பார்முலாவில்தான் போடப்பட்டது. கடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போது, `நாம ஒற்றுமையா இருந்தா, சசிகலா வெளியே வந்தாலும் நாம கவலைப்பட வேண்டியதில்லைங்க. ஒண்ணும் கலகலத்துப் போய்விடாது' என ஓ.பி.எஸ் கூறியதை எடப்பாடி வெகுவாக ஆமோதித்தாராம்.

வீட்டுக்கு வீடு ஸ்கூட்டி !

அ.தி.மு.க-வுக்கு அஸ்திவாரமாக இருப்பது பெண்களின் ஓட்டுகள்தான். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைச் சரிக்கட்ட ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் மானிய விலையில் ஒரு ஸ்கூட்டி வழங்கலாம் என கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பங்களில், 50 வயதுக்கு கீழான பெண்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என பட்டியல் தயாராகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இத்திட்டம் தேர்தல் வாக்குறுதியாக இடம்பெற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகனத்திட்டம்
அம்மா இருசக்கர வாகனத்திட்டம்

தமிழகத்துக்கு டாஸ்மாக், பெட்ரோல்/டீசல் செஸ் வரி, பத்திரப்பதிவு வரி என மூன்று இனங்களில்தான் கணிசமான நிதிவருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் வருமானத்தை நம்பியே இருக்க முடியாது. தேர்தல் நேரத்தில் மேலும் சிலநூறு கடைகளை குறைக்க நேரிடும். கொரோனா பாதிப்பால் அடுத்த ஒரு வருடத்துக்கு பத்திரப்பதிவு வரியும் கணிசமாக குறைய நேரிடும். மீதமிருப்பது பெட்ரோல்/டீசல் மீதான வரிவிதிப்பில் கிடைக்கும் வருமானம்தான்.

`நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் கொரோனா பரவலுக்குக் காரணம்!’ - கொதிக்கும் சிவசேனா

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் மானிய விலையில் ஸ்கூட்டி வழங்குவதால், பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கும். வரி வருவாயில் கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கும். `வீட்டுக்கு வீடு ஸ்கூட்டி’ என கவர்ச்சியாக அறிவித்து சரிந்திருக்கும் பெண்கள் வாக்குவங்கியையும் உயர்த்திக் கொள்ளலாம். இத்திட்டம் ஏற்கெனவே ஜெயலலிதாவால் `அம்மா இருசக்கர வாகனத் திட்டம்’ என்கிற பெயரில் தொடங்கப்பட்டதுதான். படித்துவிட்டு முறைசாரா பணியிலுள்ள பெண்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் என தனியார் அமைப்புகளில் பணியாற்றும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு அரசுத் தரப்பில் 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கடந்த டிசம்பர், 2018-ம் ஆண்டு பிரதமர் மோடிதான் இத்திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்த இத்திட்டத்தை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விரிவுபடுத்த அ.தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளது. இலவச மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி திட்டங்கள் பெண்களிடம் எப்படி பெரும் வரவேற்பைப் பெற்றதோ, அதைப் போலவே வீட்டுக்கு வீடு ஸ்கூட்டி திட்டமும் அ.தி.மு.க-வின் இமேஜை பெண்கள் மத்தியில் உயர்த்தும்” என்றனர்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை தொடங்கிவைத்த மோடி
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை தொடங்கிவைத்த மோடி

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, இலவச மொபைல் போன், 100 யூனிட் மின்சாரம் இலவசம், மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். `2006-ல் ஆட்சிக்கு வந்து கருணாநிதி அளித்த இலவச டிவி-யில்தான் அவர்கள் செய்த முறைகேடு, பி.எஸ்.என்.எல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஊழல் போன்றவற்றை மக்கள் தெரிந்துகொண்டார்கள். 2011 தேர்தலில் தி.மு.க வீழ்ச்சியடைவதற்கு இதுவும் ஒரு காரணம். இப்போது நாம் இலவச மொபைல் போன்களை வழங்கினால், செய்தி நுகர்வு அதிகரிக்கும். இது ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்கலாம்’ என ஜெயலலிதாவுக்கு சில அமைச்சர்கள் அளித்த ஆலோசனையால்தான் இலவச மொபைல் போன் திட்டம் கைவிடப்பட்டதாம். மற்ற எல்லா வாக்குறுதிகளையும் அ.தி.மு.க அரசு ஏறத்தாழ நிறைவேற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். கட்சியைப் பலப்படுத்துவது, சரிந்திருக்கும் பெண்கள் வாக்குவங்கியை உயர்த்திக்கொள்வதுதான் அ.தி.மு.க-வின் தற்போதைய தேர்தல் வியூகம். இத்திட்டம் செயல்வடிவமாகுமா, பலனளிக்குமா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு