Published:Updated:

''தமிழக அரசு, சீமானுக்கு அவகாசம் வழங்கியிருக்கலாம்!'' - சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி
News
கே.எஸ்.அழகிரி

''யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் எடுத்துவிடலாம். மற்றபடி யாருடைய தவறான போக்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்'' என்கிறார் கே.எஸ்.அழகிரி.

நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க பெரும் பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, உஷாரான பா.ஜ.க-வின் தேசியத் தலைமை அரசியல் ரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த மாற்றங்கள் அந்தக் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க உதவும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்ள எந்தளவு தயார் நிலையில் உள்ளது என்பதை அறிந்துகொள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்துப் பேசினேன்....

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''மத்தியில் வலுவாக உள்ள பா.ஜ.க அரசை எதிர்க்கத் துணிவின்றி, தமிழக அரசும் பணிந்துபோகிறது என்ற விமர்சனங்கள் அண்மைக்காலமாக எழுந்துள்ளனவே?''

''ஒரு மாநில அரசு, மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, கேரள சி.பி.எம் அரசு, தமிழக தி.மு.க அரசு ஆகியவை மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துள்ளன. ஆனால், இந்த சுமூக உறவுக்காக இந்தக் கட்சிகள் தங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை.

உதாரணமாக நீட் தேர்வு விலக்கு, புதிய வேளாண் சட்டம் ரத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை இயற்றியிருக்கிறது தி.மு.க அரசு. மத்திய அரசின் உதவி தேவை என்பதற்காக எந்த சமரசத்தையும் தி.மு.க அரசு செய்துகொள்ளவில்லை.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

'' 'ஹெச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசு தயங்குகிறது' என்கிறார் சீமான். 'தொட்டுப்பார்' என்று நேரடியாகவே சவால் விடுக்கிறார் அண்ணாமலை. தி.மு.க அரசு, பயப்படுகிறதுதானே?''

''தனிப்பட்ட நபர்களின் பேச்சுகளுக்கெல்லாம் ஓர் அரசு அஞ்சும் என்பதை நான் நம்பவில்லை. இதுபோன்ற அன்றாட செயல்பாடுகளை வைத்துக்கொண்டு, ஓர் அரசியல் கட்சியினுடைய நடவடிக்கைகளுக்கு நாம் மதிப்பெண் தரமுடியாது.

கட்சிக் கொள்கைகளை சொல்லவேண்டிய, செயல்படுத்த வேண்டிய சட்டமன்றம், நாடாளுமன்றம் என இந்த இரண்டு இடங்களிலும் தி.மு.க மிகச் சரியாக செயல்பட்டு வருகிறது.''

சீமான்
சீமான்

''சோனியா காந்தியை அவமரியாதையாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி கொடுத்த புகார் மீதும் நடவடிக்கை இல்லையே?''

''ஓர் அரசினுடைய அன்றாடப் பணிகளை முன்வைத்து, அந்த அரசாங்கத்தை நாம் சந்தேகப்படவும் முடியாது. மதிப்பெண் கொடுக்கவும் முடியாது.

யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் எடுத்துவிடலாம். மற்றபடி யாருடைய தவறான போக்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார். தவறு செய்தது சொந்தக் கட்சியினர் என்றால்கூட நடவடிக்கை எடுத்துவருகிறார் முதல்வர். இதெல்லாம் கடந்தகால தி.மு.க வரலாற்றில் நடந்தது இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபருக்கு 'மேற்கொண்டு இதுபோல் பேசாதீர்கள்' என்று ஆலோசனை வழங்கி அவகாசம் வேண்டுமானால் கொடுக்கப்பட்டிருக்கலாம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைப் பதவியில் நிரந்தரத் தலைவர் இல்லாதது கட்சிக்குப் பெரிய பின்னடைவுதானே?''

''ஏற்கெனவே தலைவராகப் பதவி வகித்துவந்த ராகுல்காந்தி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். உடனே, அந்தப் பதவிக்கு சோனியாகாந்தியை தற்காலிகத் தலைவராக செயற்குழு தேர்ந்தெடுத்தது. இதில் தற்காலிகத் தலைவர் என்பது ஒரு டெக்னிகல் வார்த்தை மட்டும்தான். மற்றபடி சோனியாகாந்தியே இப்போது நிரந்தரத் தலைவராகத்தான் இருந்துவருகிறார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியைக் கூட்டுவதென்பது காலம் பிடிக்கக்கூடிய விஷயம். இதற்கிடையே 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்னையும் வந்துவிட்டதால், கமிட்டியைக் கூட்ட முடியவில்லை. அடுத்த ஆண்டு கமிட்டியைக்கூட்டி தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடுவோம்.

காங்கிரஸ் கட்சியில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு, தேசிய அளவிலான காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருவிருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி எப்போதும்போல் முழு வீச்சுடன் இயங்கிக்கொண்டிருக்கிறதுதான். நாடு முழுக்க களத்தில் அதிகமாக பேசுவது, போராடுவது என காங்கிரஸ் கட்சி இன்றைக்கும் துடிப்புடன் செயலாற்றி வருகிறது.

உதாரணமாக, மத்திய பா.ஜ.க அரசின் தவறான போக்குகளை மக்களிடையே சுட்டிக்காட்டுவதற்காக தமிழ்நாடு முழுக்க ஒருவாரம் நடை பயணத்தை தமிழக காங்கிரஸ் கட்சி நடத்திவருகிறது.''

''புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வெற்றிபெற்றுள்ள 'டெல்லி விவசாயிகள் போராட்ட'த்தையும்கூட காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவில்லையே?''

''டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் எதிர்க்கட்சிகளும் பங்கேற்கச் சென்றன. ஆனால், 'இது அரசியல் ஆகாது' என்று கூறி விவசாயிகள் மறுத்துவிட்டனர். ஏனெனில், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் பங்கேற்றிருந்த அகாலிதள் கட்சியேகூட, இந்தப் பிரச்னைக்காக அமைச்சரவையிலிருந்து வெளிவந்துதான் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. ஆக, பல்வேறு அரசியல் கட்சிகளும் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்த காரணத்தால், 'எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இதில் முக்கியத்துவம் வேண்டாம்' எனக் கருதித்தான் விவசாயிகளே இந்த முடிவை எடுத்திருந்தனர். இதுதான் உண்மை!''

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

''தேசியக் கட்சியான காங்கிரஸ், புதிய வேளாண் சட்டத்துக்கு எதிரான பிரசாரத்தை நாடு முழுக்கக் கொண்டுசென்று மத்திய பா.ஜ.க அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியைத் தந்திருக்க முடியும்தானே?''

''வட இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்னை வேறு; இங்கே நம் விவசாயிகளின் பிரச்னை வேறு. புதிய வேளாண் சட்டங்களால் பெரிதும் பாதிக்கப்படக் கூடியவர்கள் பஞ்சாப், ஹரியானா என வட இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள்தான். தென்னிந்தியாவில் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தினுள் நுழைந்திருந்தால், போராட்டக் களத்திலிருந்து விவசாயிகள் விலகியிருப்பார்கள். அதன்பிறகு அந்தந்த கட்சிகளின் விவசாய சங்கங்கள்தான் களத்தில் நின்றிருக்கும். இதையெல்லாம் கணித்துத்தான் விவசாயிகள் தீர்க்கமான முடிவைக் கடைப்பிடித்தார்கள். இன்றைக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.''

''மோடியின் பலம் என்னவென்று ராகுல்காந்திக்கு இன்னமும் தெரியவில்லை என்கிறாரே அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்?''

''மோடி என்பது பா.ஜ.க வெளிக்காட்டி வரும் ஒரு போலியான பிம்பம். அந்த போலிப்பிம்பம் வேளாண் சட்டம் வாபஸ் விவகாரத்திலேயே உடைந்துபோய்விட்டது. அப்படி உடைந்துபோன சிதறல்களை இப்போதும் வெளிக்காட்ட முடியாமல் ஊடகம் வைத்திருக்கிறது. காரணம்... அப்படி வெளிக்காட்ட முடியாத வகையில் ஊடகத்தை பா.ஜ.க வைத்திருக்கிறது.

வேளாண் சட்டத்தை ஏன் வாபஸ் பெற்றது மத்திய பா.ஜ.க அரசு, அதன் பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் ஏன் ஊடகம் இன்னமும் விவாதிக்காமல் காலம் தாழ்த்துகிறது?

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

கடந்த காலத்தில், '2ஜி ஊழல் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய்' என்று ஏராளமான பூஜ்ஜியங்களைப் போட்டு பெரிதுபடுத்திய ஊடகம், 'அது தவறாகக் கணக்கிடப்பட்டுவிட்டது' என்று பின்னாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே கூறியபிறகும் அதுகுறித்த செய்திகளை ஊடகம் பெரிய அளவில் செய்தியாக்கவில்லையே. எனவே, இதன் பின்னணியில் எல்லாம் ஓர் அரசியல் இருக்கிறது. இந்த அரசியல்களை எல்லாம் ராகுல்காந்தி, தகர்த்தெறிவார்.

கடந்த வருடம் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்திருந்த ராகுல்காந்தி, 'விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை இன்னும் ஒரு வருடத்துக்குள்ளாக மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெற்றுவிடும். இதை விட்டால் வேறு வழியே அவர்களுக்கு இல்லை' என்று அப்போதே சொன்னார். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.''

''அகில இந்திய அளவில், பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா பானர்ஜி காட்டுகிற ஆர்வத்தைக்கூட காங்கிரஸ் கட்சி காட்டவில்லையே?''

''சோனியாகாந்தியும் ராகுல்காந்தியும் எதிர்க்கட்சியினர் அனைவரையும் இரண்டு முறை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டிருக்கிறார். மேலும் சோனியாகாந்தியின் இல்லத்துக்கே சென்றும், அவரது முயற்சிக்கு தன் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. எனவே, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் கட்சிதான் மிகப்பெரிய பங்கு வகித்துவருகிறது.

ஆனால், மம்தா பானர்ஜிதான் அப்படியொரு செயலில் ஈடுபட்டுவருகிறார் என்பது போன்றதொரு புனைவை மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செய்துவருகிறது. இந்த உண்மையை மம்தா பானர்ஜியுமே நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால்தான், பா.ஜ.க-வின் இந்தப் பொய்ப் பிரசாரத்துக்கு நாமும் வலு சேர்த்துவிடக் கூடாது என்பதற்காகவே, சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மம்தா பானர்ஜி.''

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

''அடுத்த வருடம் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் உத்தரப் பிரதேசத்தில்கூட, இன்னமும் காங்கிரஸ் கட்சி 'தனித்துப் போட்டி' முடிவிலேயே இருக்கிறதே?''

''தேர்தல் வருகிறபோதுதான் கூட்டணி பற்றிப் பேசமுடியும். அடுத்த வருடம்தானே தேர்தல் வரப்போகிறது... கூட்டணி பற்றி அப்போது பேசிக்கொள்ளலாம். இப்போதே கூட்டணி கட்டினால், அது சரிப்பட்டு வராது. ஏனெனில், எல்லாக் கட்சிகளுக்குமே பல்வேறு விதமான பேரங்கள் இருக்கும். எனவே, தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பேசினால் மட்டுமே அது சரிப்பட்டு வரும். மாறாக, முன்கூட்டியே கூட்டணி குறித்துப் பேசுவதென்பது சரியான அரசியல் வியூகம் கிடையாது.''

''அப்படியென்றால், உ.பி தேர்தலை கூட்டணியோடுதான் காங்கிரஸ் கட்சி சந்திக்கவிருக்கிறதா?''

''சூழல் எப்படியிருக்கிறதோ, அதன்படி காங்கிரஸ் கட்சி செயல்படும்.''