Published:Updated:

டாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க?

எஸ்.எஸ். பழநிமாணிக்கம் - செல்வகணபதி - டி.கே.எஸ்.இளங்கோவன்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.எஸ். பழநிமாணிக்கம் - செல்வகணபதி - டி.கே.எஸ்.இளங்கோவன்

ஓரிருவரின் நலனுக்காகக் கட்சியின் ஒட்டு மொத்தக் கொள்கைகளை தி.மு.க தாரை வார்க்காது.

சென்ற வார ஆனந்த விகடன் (20.05.2020) கார்ட்டூனில் தி.மு.க-வையும் மது உற்பத்தி ஆலைகளையும் தொடர்புபடுத்திப் போட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது. ‘டாஸ்மாக் பிரச்னையில் அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் சமதூரத்தில் வைத்து விமர்சிக்கும் விகடன் நேர்மையான ஊடகம்’ என்று நடுநிலையாளர்கள் பாராட்டினார்கள். ஆனால் தி.மு.க ஆதரவாளர்களோ ‘உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுடன் இணைத்துத் தி.மு.க-வையும் விமர்சிக்கலாமா?
டாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க?

தி.மு.க-வினர் மது உற்பத்தி ஆலைகளை நடத்துகிறார்கள் என்பது தவறான தகவல்’ என்று கொந்தளித்திருந்தார்கள். ஆனால் தி.மு.க-வின் மூத்த தலைவர் துரைமுருகன் ஜூனியர் விகடனுக்கு (20.05.2020) அளித்த பேட்டியில் ‘`ரூபாய் போட்டுத் திறந்த ஆலைகளை மூடிவிட்டுப் போக நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா?” என்று வெளிப்படையாகவே கேட்டார். இந்நிலையில் “மது ஆலைகளைத் தி.மு.க-வினரே நடத்திக்கொண்டு, டாஸ்மாக்கை மூடச்சொல்லிப் போராட்டம் நடத்தியது சரியா, குறைந்தபட்சம் இந்தக் கொரோனா சமயத்தில் மது ஆலைகளிலிருந்து சப்ளை செய்ய மாட்டோம் என்றாவது அறிவித்திருக்கலாமே?” என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில்கள்...

டி.கே.எஸ்.இளங்கோவன்
டி.கே.எஸ்.இளங்கோவன்

டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க மாநிலங்களவை எம்.பி.

“தமிழ்நாட்டில் தனியாரிடம் இருந்து அரசு மட்டுமே மதுபானங்களை வாங்க முடியும். அரசு மதுவிலக்கைக் கொண்டு வந்தால், மது உற்பத்தி செய்ய வேண்டிய அவசியமே இருக்காதே. மத்திய அரசிடமிருந்து மாநில அரசாங்கம் நிதி பெற வேண்டும் என்று கேட்டால், “நீங்கள்தான் 39 எம்.பி-க்கள் இருக்கி றீர்களே, நீங்கள் வாங்கிக் கொண்டு வர வேண்டியதுதானே?” என்று அபத்தமாகக் கூறுகிறார்கள். அதுபோலத்தான் இந்த மது ஆலைகள் விவகாரமும்.”

டாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க?

எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தி.மு.க உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்

“மது சமூகத்திற்குக் கேடு என்பதில் தி.மு.க-விற்கு மாற்றுக் கருத்து கிடையாது.  ஊரடங்கு காரணமாக, குடிப்பழக்கம் உள்ளவர்கள் 45 நாள்களுக்கு மேலாகக் குடிக்காமல் இருக்கப் பழகிவிட்டனர். இதைக் காரணமாக வைத்து மதுவிலக்கைத் தமிழக அரசு அமல்படுத்தினால், தலைவர் கலைஞர் 2016-ல் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தலைவர் ஸ்டாலினும் அதனை நிறைவேற்றித் தருவார். மதுவிலக்கை அமல்படுத்தித் தமிழகம் முழுவதும் உள்ள மது ஆலைகளை மூட உத்தரவிட்டால் தி.மு.க முன்னின்று அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.

எஸ்.எஸ். பழநிமாணிக்கம்
எஸ்.எஸ். பழநிமாணிக்கம்

தொழில் என்கிற முறையில் ஓரிரு தி.மு.க-வினர் மது ஆலைகளை நடத்தலாம். அரசு கொள்கை முடிவெடுத்தால் அதற்குத் தி.மு.க ஒத்துழைக்கும். ஓரிருவரின் நலனுக்காகக் கட்சியின் ஒட்டு மொத்தக் கொள்கைகளை தி.மு.க தாரை வார்க்காது. தி.மு.க-வினர் நடத்தும் மது ஆலைகளிலிருந்து சப்ளையை நிறுத்துவதனால் மது விற்கிற எண்ணிக்கையை அரசு குறைக்கப்போவதில்லை. அப்புறம் ஏன் தி.மு.க-வினர் சப்ளையை நிறுத்த வேண்டும்?”

செல்வகணபதி
செல்வகணபதி

செல்வகணபதி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்

“டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்யும் 11 நிறுவனங்களும் தி.மு.க-வினருடையதா? மதுவிலக்கிற்குத் தயாராகாத அ.தி.மு.க அரசு, தி.மு.க மீது பழியைப் போட்டுவிட்டு, தப்பிக்கப் பார்க்கிறது. மதுபானங்களை விற்பதன் மூலமாகக் கிடைக்கும் கமிஷனுக்காகவே மதுவிலக்கை அரசு கொண்டு வரவில்லை என நேரடியாகக் குற்றஞ்சாட்டுகிறேன். சேலம் மாவட்டத்தில், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலேயே ஒரு குவாட்டர் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஜலகண்டாபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 10 லட்ச ரூபாய் சரக்கை எடுத்து 50 லட்ச ரூபாய்க்கு விற்று அ.தி.மு.க-வினர் லாபம் பார்த்துள்ளனர். மதுவிலக்கைக் கொண்டு வரத் துப்பில்லாத அரசு, தி.மு.க மீது சேற்றை வாரிப் பூசுவது வெட்கக்கேடு.”

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

ஜெ.அன்பழகன்,  சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர்

“ஜெயலலிதா ஆட்சியில் மதுவிலக்கு தொடர்பான விவாதம் எழுந்தபோது, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரின் மது ஆலைகளை மூட வேண்டுமென்று அ.தி.மு.க கூறியது. அப்போதே, மது ஆலைகளுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என டி.ஆர்.பாலுவும் ஜெகத்ரட்சகனும் தெளிவாக்கிவிட்டனர். அப்போது கலைஞர், “எங்கள் கட்சிக்காரர்கள் மது ஆலைகளை நடத்துவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், நாளைக்கே பூரண மதுவிலக்கைக் கொண்டு வாருங்கள், தி.மு.க அதை ஆதரிக்கும்” என்று தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். தி.மு.க-வின் 2016 தேர்தல் வாக்குறுதியே மதுவிலக்குதான். ஆனால், படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டுவருவதாகச் சொன்ன அ.தி.மு.க ஆட்சியில், அதற்கு மாறாக மது விற்பனையை அதிகரித்துள்ளனர். இப்போது தி.மு.க மீது பழியைப் போட்டுவிட்டு அவர்களின் கையாலாகாத்தனத்தை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்.”

சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

சுரேஷ் ராஜன்,   கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர்

“ஜெகத் ரட்சகனும், டி.ஆர். பாலுவும் தங்கள் பெயரில் மது ஆலைகளே இல்லை என ஏற்கெனவே பேட்டி கொடுத்துவிட்டனர். இவர்கள் இருவரையும் மனதில் வைத்துதான் இந்தக் கேள்வியை எழுப்புகிறீர்கள். தி.மு.க -வினருக்கு மது ஆலை இல்லாதபோது இந்தக் கேள்வி எழுவது சரியில்லையே. துரைமுருகன் கூறியது பற்றி எனக்குத் தெரியவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமாக இது இருக்கிறது. அரசாங்கம் செய்யாததை ஹெல்ப் லைன் மூலம் எங்கள் தலைவர் செய்கிறார். ஊரடங்கு காலத்திலும் தமிழக அரசு திறந்துள்ள டாஸ்மாக் கடைகளை முதலில் மூடச் சொல்லுங்கள்!”