Published:Updated:

பெருகும் ஆதரவு; களத்தில் குதித்த கட்சிகள்; திணறும் மக்கள்! - 15 நாள்களாக ஸ்தம்பித்த தெலங்கானா

தெலங்கானா ஆர்.டி.சி ஊழியர்கள், மாநிலம் தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்ததை அடுத்து நேற்று அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தெலங்கானா போராட்டம்
தெலங்கானா போராட்டம் ( Twitter/@tsrtcbuses )

தெலங்கானாவின் தேவுடுவாக இருந்த முதல்வர் சந்திரசேகர ராவ், கடந்த சில நாள்களாக அம்மாநில மக்களின் கஷ்டங்களை கண்டுகொள்ளவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் சந்திரசேகர ராவின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். அரசுக்கு எதிரான போராட்டங்கள், கண்டனங்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன. இவை அனைத்துக்கும் முக்கிய காரணமாக இருப்பது தெலங்கானா போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.

தெலங்கானா போராட்டம்
தெலங்கானா போராட்டம்
Twitter/@tsrtcbuses

தெலங்கானாவில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாகப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என முதல்வர் அறிவித்ததே அவரை விமர்சிக்கக் காரணம். வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெறாத ஊழியர்கள் ஒருபக்கம், தன் வேலை நீக்க முடிவை மாற்றிக்கொள்ளாத முதல்வர் மறு பக்கம் என மொத்த தெலங்கானாவும் போராட்டக் களமாக மாறியுள்ளது.

Vikatan

இரண்டு வாரங்களாக அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஊழியர்களை வைத்து ஓரளவு போக்குவரத்தைச் சரி செய்தாலும், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தெலங்கானா போராட்டம்
தெலங்கானா போராட்டம்
Twitter/@tsrtcbuses

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இனி வேலை இல்லை என்ற முதல்வரின் அறிவிப்பை அடுத்து அம்மாநிலப் போக்குவரத்து ஊழியர்கள் மூன்று பேர் தற்கொலைக்கு முயன்று அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்காலிக ஓட்டுநர்களால் நடந்த பல்வேறு பேருந்து விபத்துகளில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இதனால் தெலங்கானா மக்கள் பேருந்துகளில் பயணிக்கப் பயந்துபோயுள்ளனர்.

அரசு பஸ்ஸில் பயணிக்க பயம்; உயிரைப் பறிக்கும் விபத்துகள்! - ஊழியர்கள் போராட்டத்தால் திணறும் தெலங்கானா

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக நேற்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ், பா.ஜ.க, தெலுங்கு தேசம் கட்சி போன்ற அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. தெலங்கானா முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த பந்த்துக்கு டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஆதரவு அளித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அம்மாநில மக்கள் நேற்று முற்றிலும் முடங்கிப்போயிருந்தனர்.

தெலங்கானா போராட்டம்
தெலங்கானா போராட்டம்
Twitter/@tsrtcbuses

மாநிலம் முழுவதும் உள்ள 9,000 பேருந்துகளில் 500 பேருந்துகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டுள்ளன. கம்மம் மாவட்டம் உச்சக்கட்ட பாதிப்பைச் சந்தித்தது. மொத்த மாவட்டத்துக்கும் சேர்த்து மொத்தமாக ஐந்து பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. போராட்டக் காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் விஜயவாடாவில் பல கிலோமீட்டர்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்துக் கட்சியைச் சேர்ந்த சுமார் 3,294 பேர் கைது செய்யப்பட்டு இரவு விடுவிக்கப்பட்டுள்ளனர். தினம் தினம் அதிகமாகும் போராட்டத்தால் மொத்த மாநிலமும் திணறி வருகிறது.