Published:Updated:

`அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது' - சசிகலா சூளுரையின் பின்னணி என்ன?

சசிகலா

``மிக விரைவில் நம்முடைய ஆட்சி வரும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. மிக விரைவில் அதிலும் ஒரு மாற்றம் ஏற்படும்'' என்றார் சசிகலா.

`அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது' - சசிகலா சூளுரையின் பின்னணி என்ன?

``மிக விரைவில் நம்முடைய ஆட்சி வரும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. மிக விரைவில் அதிலும் ஒரு மாற்றம் ஏற்படும்'' என்றார் சசிகலா.

Published:Updated:
சசிகலா

``ஆன்மிகப் பயணமாகத்தான் தொடங்கினேன். ஆனால், அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டதாக இப்போது உணர்கிறேன்'' சசிகலாவை அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்ப்பளித்த நாளில், சேலத்திலும் சென்னையிலும் சசிகலா உதிர்த்த வார்த்தைகள் இவை. ``சின்னம்மாவின் இந்த வார்த்தைகள் சாதாரணமானவை அல்ல, அவரின் அரசியல் பயணத்துக்கான அறிவிப்பாகவே இதை நீங்கள் பார்க்க வேண்டும்'' என சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோதும் உற்சாகமாகப் பேசுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

திருச்செங்கோட்டில் சசிகலா
திருச்செங்கோட்டில் சசிகலா
நா.ராஜமுருகன்

அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அதே ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குச் சென்றார். இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 12-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க-வின் விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வுசெய்யப்பட்டனர். இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முடிவை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுத் தீர்மானத்தை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சசிகலா. அவர் தாக்கல் செய்த மனுவில், `அ.தி.மு.க பொதுச்செயலாளராகிய நான்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவாக்கிய புதிய பதவி, கட்சியின் சட்டதிட்டத்துக்கு விரோதமானது. எனவே மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டிய பொதுக்குழு கூட்டமும், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். சசிகலாவின் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதே கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், `சசிகலாவின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம், சசிகலா தன்னைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கிய அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த பிரதான மனு நிலை நிற்கத்தக்கதல்ல. எனவே, சசிகலாவின் பிரதான மனுவும் நிராகரிக்கப்படுகிறது' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பட்டாசு வெடித்த தொண்டர்கள்
பட்டாசு வெடித்த தொண்டர்கள்

இந்தத் தீர்ப்பு வெளியான நாளின் மாலையில் அதிமுக தலைமைக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தொண்டர்கள் தீர்ப்பைக் கொண்டாடினர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,``அதிமுக-வைக் கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியைக் கொடுத்துவருகிறது. சசிகலா அரசியலிலிருந்து விலகிக்கொள்வது நல்லது'' எனக் கருத்து தெரிவித்தார். தீர்ப்பு வெளியானபோது முசிறி அருகே ஆன்மிகச் சுற்றுப்பயணத்தில் இருந்தார் சசிகலா. தொடர்ந்து, நாமக்கல், சேலம், ஈரோடு என சுற்றுப்பயணம் சென்ற சசிகலா, வெவ்வேறு இடங்களில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ``இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும். தவிர, தொடர் தோல்விகளிலிருந்து அதிமுக-வை மீட்டெடுத்து ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதுதான் என்னுடைய கடமை. மிக விரைவில் நம்முடைய ஆட்சி வரும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. மிக விரைவில் அதிலும் ஒரு மாற்றம் ஏற்படும்'' என்றார். அதோடு அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என்றும் பேசியிருந்தார். சசிகலாவின் அந்த வார்த்தைகளைத்தான் தற்போது அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சசிகலாவின் ஆதரவாளர்கள் இது குறித்துப் பேசும்போது,

`` சின்னம்மா சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சட்டமன்றத் தேர்தல்வரை அதிமுக-வை எதிர்த்து எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாகவும் அறிவித்தார். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு தொண்டர்களுடன் போனில் பேசுவதும், சுற்றுலா சென்று தொண்டர்களைச் சந்திப்பதுமாக இருந்தார். நம்மைத் தேடிவருபவர்களை மட்டும் நாம் சந்திப்போம். நாமாகச் சென்று முன்னாள் அமைச்சர்களையோ, மாவட்டச் செயலாளர்களோ சந்திக்கவோ, பேசவோ வேண்டாம். அவர்களாக வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றே காத்திருந்தார். அதேபோல, சட்டரீதியான நடவடிக்கைகள் கைகொடுக்கும் எனவும் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல், இரண்டு உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகும் முக்கிய நிர்வாகிகள் யாரும் சின்னம்மாவைச் சந்திக்கவில்லை. அதேபோல, சட்டரீதியான முயற்சியிலும் அவருக்கு இப்போது நம்பிக்கை போய்விட்டது. அதனால், இனிமேல் அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கலாம் என முடிவு செய்துவிட்டார்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

முதற்கட்டமாக, விழுப்புரம், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்களிடமும் 25 மாவட்டச் செயலாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இப்போதுதான் முறையான கவனிப்புடனான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கின்றன. தவிர, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை முன்னிறுத்தி கட்சிக்குள் ஒரு கலகத்தை, அதுவும் கொங்குப் பகுதியிலிருந்தே தொடங்கிவிடலாம் என முடிவு செய்துவிட்டார் சின்னம்மா. 'கட்சிக்காக நாம் பொறுமையாகப் போனால், என்னைக் கடுமையாக விமர்சிப்பது, பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது என நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள். கலைஞரை எதிர்த்தே அரசியல் செய்த நமக்கு எடப்பாடி எம்மாத்திரம்' என வெடித்துப் பேசினார் சின்னம்மா. அதனால்தான், 'ஆன்மிகப் பயணம் முடிந்துவிட்டது. அரசியல் பயணத்துக்கான காலம் தொடங்கிவிட்டது' என்றார். அது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. இதற்கான அறிவிப்புகள் விரைவிலேயே வரும்'' என்கிறார்கள் அதிரடியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism