Published:Updated:

`ஜெயிலைவிடக் கொடுமையா இருக்கு!' - ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான இருவர் உண்ணாவிரதத்தால் பரபரப்பு

சிறப்பு முகாம்

`32 ஆண்டுகளாக கொடும் சிறைவாசம் இருந்தவர்கள், விடுதலையான பிறகும் முகாம் என்ற பெயரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவே உணர்கின்றனர்.' - இருவர் தரப்பு வழக்கறிஞர்கள்

`ஜெயிலைவிடக் கொடுமையா இருக்கு!' - ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான இருவர் உண்ணாவிரதத்தால் பரபரப்பு

`32 ஆண்டுகளாக கொடும் சிறைவாசம் இருந்தவர்கள், விடுதலையான பிறகும் முகாம் என்ற பெயரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவே உணர்கின்றனர்.' - இருவர் தரப்பு வழக்கறிஞர்கள்

Published:Updated:
சிறப்பு முகாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையிலிருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதில் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். எனவே, இவர்கள் நால்வருக்கும் சொந்த நாட்டிற்கோ அல்லது அவர்கள் விருப்பப்படும் நாட்டிற்கோ செல்ல அனுமதி கிடைக்கும் வரை திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்

திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன், முருகன் ஆகியோருக்கு ஓர் அறையும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஓர் அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய இருவரும், ‘சிறப்பு முகாமினுள் தனி அறையில் எங்களை அடைத்து வைக்காமல், சிறப்பு முகாமில் உள்ள மற்ற நபர்களோடு எங்களை தங்கவையுங்கள்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இருவரின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு திருச்சி கலெக்டரும், சிறப்பு முகாம் நிர்வாகமும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இருந்துள்ளனர். இதில் அதிருப்தியடைந்த ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் சிறப்பு முகாமிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜெயக்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் சரியாகி மீண்டு சிறப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இருவரும் இன்னும் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை என்கின்றனர்.

அதிகாரிகள் சொல்வதைப் போல, சிறப்பு முகாமில் உள்ள மற்றவர்களால் அவர்கள் இருவருக்கும் எந்தவொரு பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை.

இது குறித்து ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரின் வழக்கறிஞர்கள் தரப்பில் பேசினோம். “இருவரும் சிறைக்குள்ளே உண்ணாவிரதம் இருப்பது உண்மைதான். 32 ஆண்டுகளாக கொடும் சிறைவாசம் இருந்தவர்கள், விடுதலையான பிறகும் முகாம் என்ற பெயரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவே உணர்கின்றனர். குறிப்பாக ஜெயக்குமாருக்கும், ராபர்ட் பயஸூக்கும் சிறப்பு முகாமினுள் சிறிய அளவிலான தனியறை ஒன்றைக் கொடுத்துள்ளனர். அது தங்களுக்கு வசதியில்லாமல் இருப்பதாகவும், சிறையைவிடக் கொடுமையானதாக இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர். எனவே, ‘சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மற்ற நபர்களோடு சேர்த்து எங்களையும் தங்கவையுங்கள்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தியே அவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் சொல்வதைப் போல, சிறப்பு முகாமில் உள்ள மற்றவர்களால் அவர்கள் இருவருக்கும் எந்தவொரு பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. இருவரது கோரிக்கையையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகிறோம்” என்றனர்.