‘ அமைச்சர் வீரமணிக்கு ஏது இவ்வளவு சொத்து? எப்படிச் சம்பாதித்தார்?’ - விளாசும் சொந்த அக்காள் மகன்

`மாமன் வீரமணியைப்போல் இவனும் துரோகம் பண்ணிடுவானோ’ என்று யாரும் என்னை நினைக்க வேண்டாம்’ என அமைச்சர் வீரமணியை விளாசிவருகிறார் அவரின் அக்காள் மகனும், அ.ம.மு.க வேட்பாளருமான தென்னரசு சாம்ராஜ்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் மூன்றாவது முறையாகக் களமிறங்கியிருக்கிறார். வீரமணியை எதிர்த்து அ.ம.மு.க-வில் தென்னரசு சாம்ராஜ் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர், வீரமணியின் சொந்த அக்காள் மகன். அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டுள்ள தென்னரசு சாம்ராஜ், செல்லும் இடமெல்லாம் தாய்மாமன் வீரமணியை விளாசிவருகிறார். தே.மு.தி.க நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது மாமன் வீரமணி குறித்து அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

அந்த வீடியோ காட்சியில் பேசும் அ.ம.மு.க வேட்பாளர் தென்னரசு, ``மாமன் வீரமணி வெற்றிபெற்றுவிட்டால் நான் இந்த ஊரிலேயே இருக்கப்போவதில்லை. அதற்கு நீங்கள் இடம் கொடுத்துவிடாதீர்கள். அவர் டெபாசிட் வாங்கக் கூடாது. எட்டு ஆண்டுகளாக நம்மையெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். வீரமணி அமைச்சராவதற்கு முன்பும், அமைச்சரானதற்கு பின்புமான சொத்துப் பட்டியலை நான் வைத்திருக்கிறேன்.
யாரை வேண்டுமானாலும் அவர் ஏமாற்றிவிடலாம். என்னை ஏமாற்றவே முடியாது. என் அப்பாவால் வளர்ந்தவர் வீரமணி. பீடி சுற்றிக்கொண்டிருந்த வீரமணி, பென்ஸ் காரில் பிறந்தவர் என்று பொய் பேசிவருகிறார். அவர் என்னுடன் நேரடி விவாத்தத்துக்கு வர வேண்டும். சாதாரண பீடி வியாபாரியாக இருந்த வீரமணி இரண்டாயிரம், மூன்றாயிரம் கோடி ரூபாய் சொத்துகளை எப்படிச் சம்பாதித்தார்?

எல்லாம் மக்களின் பணம். அனைவரையும் ஏமாற்றி சீரும் சிறப்புமாக இருக்கிறார். தொகுதியை டெவலப் செய்யாமல் இவரை மட்டுமே டெவலப் செய்துகொண்டிருக்கிறார். ஏற்றிவிடும் ஏணியை எட்டி உதைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பவர் என் மாமன் வீரமணி. அவரைப்போல் நான் இருக்க மாட்டேன். ‘மாமன் மாதிரி இவனும் துரோகம் பண்ணிடுவானோ’ என்று யாரும் என்னை நினைக்க வேண்டாம். அவர் வேறு, நான் வேறு குணம் கொண்டவன். என் வளர்ச்சியைத் தடுத்தவர் அவர். வீரமணி என்ற துரோகியை வீழ்த்த என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்று தென்னரசு சாம்ராஜ் பேசியிருக்கிறார்.