Published:Updated:

`மார்ச் -4ல் தேர்தல்; களமிறங்கும் இருபிரிவுகள்!' - வேகமெடுக்கும் தேனி ஆவின் தலைவர் பதவி ரேஸ்

தேனி ஆவின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.ராஜா
தேனி ஆவின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.ராஜா

தேனி ஆவின் தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது

தேனி ஆவின் நிர்வாகக் குழு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆவினிலிருந்து தேனி மாவட்ட ஆவின் பிரிக்கப்பட்டது முதல் தொடர் சர்ச்சைகள் என்றே சொல்லலாம். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, தேனி ஆவினின் தலைவராக நியமிக்கப்பட, அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் அம்மாவாசி என்பவர். விசாரணை முடிவில், ஓ.ராஜா மற்றும் அவருடன் பதவியேற்ற 17 இயக்குநர்களின் நியமனம் செல்லாது எனத் தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஓ.ராஜா - ராஜேந்திர பாலாஜி
ஓ.ராஜா - ராஜேந்திர பாலாஜி

இந்தநிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதி, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா, துணைத்தலைவராக செல்லமுத்து மற்றும் 17 இயக்குநர்கள் என தேனி ஆவினின் இடைக்கால நிர்வாகக் குழு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் பேசிய ராஜேந்திரபலாஜி, ``விரைவில், தேர்தல் நடத்தப்பட்டு தேனி ஆவினின் நிர்வாகக் குழு அமைக்கப்படும்" என்றார். அதன்படி அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் இல்லா தேனி ஆவின்; தடுமாற்றத்தில் `விற்பனை' - ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்!

பெரியகுளம், தேனி, போடி, கம்பம், ஆண்டிபட்டி, கடமலை, மயிலை, சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய ஒன்பது தொகுதிகளாக, தேனி ஆவின் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களால் 5 பெண்கள், 3 பட்டியலினத்தவர்கள் உட்பட 17 இயக்குநர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஓ.ராஜா - ராஜேந்திரபாலாஜி
ஓ.ராஜா - ராஜேந்திரபாலாஜி

வரும் பிப்ரவரி 27-ம் தேதி மனுத்தாக்கல் நடைபெறகிறது. 28-ம் தேதி மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 29-ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். போட்டி இருக்கும்பட்சத்தில் மார்ச் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும். தற்போதுள்ள கள நிலவரப்படி, ஓ.ராஜா தரப்பும், அம்மாவாசி தரப்பும் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மார்ச் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும். அதில், தேனி ஆவினை கைப்பற்றுவாரா ஓ.ராஜா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பொங்கிவழியும் ஆவின் ஊழல்!
அடுத்த கட்டுரைக்கு