Published:Updated:

`கேரளா செல்லும் தமிழக முதல்வருக்கு..!’ - தேனி விவசாயிகளின் கோரிக்கை

தமிழக முதல்வர் முல்லைப் பெரியாறு அணை குறித்தும் ஆலோசிக்க வேண்டும் எனத் தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Mulla Periyar Dam
Mulla Periyar Dam

தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை செய்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரளா செல்கிறார். மாலை 3 மணியளவில், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கும் முதல்வர், பரம்பிகுளம் - ஆழியாறு திட்டம், ஆனைமலை - பாண்டியாறு - புன்னம்புழா இணைப்புத் திட்டம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Mulla Periyar Dam
Mulla Periyar Dam

“பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும். பேபி அணையின் அருகே உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை முட்டுக்கட்டை போடுவது குறித்தும், பேபி அணை பலப்படுத்த தேவையான பொருள்கள் கொண்டு செல்ல பயன்படும் வல்லக்கடவு பாதையை சீர் செய்வது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.

`கவனமா பேசுங்க!' - ராஜேந்திர பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி
TamilNadu CM
TamilNadu CM

மேலும், பல வருடங்களாக அணையில் மின்சாரம் இல்லாமல் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். எனவே, அணைக்கு மீண்டும் மின்சாரம் வழங்குவது குறித்து கேரள முதல்வருடன் ஆலோசிக்க வேண்டும்.

அணைப் பகுதியில் பென்னி குயிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை மீட்டு லோயர்கேம்பில் உள்ள பென்னி குயிக் மணிமண்டபத்துக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். அணைக்குச் சொந்தமான பல இடங்களைக் கேரள வனத்துறை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த இடங்களுக்கு வருடா வருடம் தமிழக அரசு குத்தகைப் பணம் செலுத்தி வருகிறது. அப்படி இருக்கையில், நம்முடைய இடத்தை சர்வே செய்து, அதில் உள்ள கேரள வனத்துறையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆலோசனையின்போது, இவை தொடர்பாகக் கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள் தேனி விவசாயிகள்.

Mulla Periyar Dam
Mulla Periyar Dam

கொங்கு மண்டல பிரச்னை தொடர்பாக மட்டும் பேசிவிட்டு வராமல், தென் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றியும் பேசுவாரா முதல்வர் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.